Saturday, 21 June 2014

இருபுனலோடும் அருஞ்சராசி புகுந்தாடும் நகரதில்
எரியனலெட்டும் நெடும்மாடி அசைந்தாடும் பதாகை
நல்குணமாந்தர் பெருந்தராசில் நன்மணியும் குவிமிக
வன்தோள்வேந்தர் பொருந்த அஞ்சும் பாஞ்சாலம்.


கங்கை யமுனை என இரு ஆறு ஓடும் அறிய செல்வம் (லக்ஷ்மி) புகுந்து எங்கும் செழிக்கும் நகர் அதில்
எரியும் சூரியனையே எட்டும் நெடிந்த கோபுரங்கள் உச்சியில் அசைந்தாடும் முத்திரை கோடி
நல்ல ஒழுக்கம் மிகுந்த மக்கள் தங்களின் பெரிய தராசில் பொன் மணியும் தானியங்களும் குவித்து அளக்க
பெரும் வீரம் கொண்ட எந்த அரசனும் போர் தொடுக்க தயங்கும் பாஞ்சாலம்
கண் மூட வழியில்லை கணநேரம்
இரு முள்ளாய் மாறியதோ இமை ரெண்டும்
பெண் கூட செழிமுல்லை சுகமாகும்
கொடு நஞ்சாய் மாறியதோ மலர் செண்டும்

விடியாத இரவில்லை மணவாளா
மரு தோன்றி பூசியதோ என் நாணம்
தணியாத தனலில்லை தழுவாயோ
முக வாட்டம் தீர்ப்பாயோ கண்ணாளா
எது வீரம்
வைரியின் முகம் கண்டு பேசும் வீரம்
ஆயுதமற்றவனை அண்டாது தவிர்த்தல் வீரம்.
செஞ்சோற்று கடனடைத்தல் வீரம்
இழிந்த பெண்ணை சேராதல் வீரம்
பிறன் மனையை நோக்காமை வீரம்
பெற்றோர் சொல் மீறாதல் வீரம்
கற்றோர் சொல் கவனம் வீரம்
என்றொரு நாளும் தன்னலம் காக்க கொல்லாமை வீரம்!
நல்லான் ஒருவன் அவன் பொருட்டு தன்னுயிர் ஈதல் வீரம்.
குற்றம் எல்லாம் குவிந்து சட்டமானது
குறை தீர்க்கும் கடவுளும் கல்லானது
சோம்பேறித்தனம் இங்கு தொழிலானது
உழுதவன் பிழப்பெல்லாம் பழுதானது
காமமும் இங்கே விலையானது
கழிவும் கூட உண்ண உணவானது
தாயின் முலைப்பால் கனவானது
தவறெல்லாம் மருகி முறையானது
வானத்தின் நீளமும் வெளுப்பானது
குடிநீர் கூட நஞ்சானது
என்னென்று சொல்வேன் ஏதென்று சொல்வேன்
உயிருள்ள பிணங்கள் சதிராடுது.
அத்தனை கனவும் உடைந்தது
இருட்டும் என் மேல் விரிந்தது
இன்பம் எல்லாம் தொலைந்தது
வாழ்வும் இலக்கின்றி அலைந்தது
உன்னை காதலித்த ஒரு காரணம்
தனிமைக்கு நான் உதாரணம்

காதல் என்னும் கண்ணாடி கோட்டை
கண்ணில் வைத்தேன் புது பாட்டை
கல்லொன்று எறிந்தாய் சிதறியது
விழிகளில் உதிரம் வழிகிறது
நேற்றுவரை என் இதயத்தில் எனக்கே இடமில்லை
இன்று நான் பார்க்கிறேன் எவருமே இல்லை
நாகத்தின் மூச்சாய் விஷம் கக்கி தவிக்கிறேன்
நீரில்லா கடல் போல பாலையாய் விரிகிறேன்
நடக்காத கனவில் நம்பிக்கை வைத்தேன்
எழுதாத கடிதத்தில் நலம் கேட்டு வைத்தேன்

இத்தனை தொலைவிலா நீ இருப்பாய் ?
பயணத்தின் பாதியிலே இரவு மண்டியது!
அத்தனை கனவும் உடைந்தது
இருட்டும் என் மேல் விரிந்தது !!
முண்டாசுக்கட்டும் முறுக்கு மீசையும்
மட்டும் ரௌத்திரமில்லை,
நாடு தாண்டி சென்று வெள்ளையனுக்கெதிராய்
படைத்திரட்டியது மட்டும் வீரமில்லை.
ஆள்பவனுக்கெதிராய் அவன் மன்றத்தில்
குண்டு வீசியது மட்டும் எழுச்சி இல்லை
அடித்த வலியை பொறுத்துக்கொண்டு
அடுத்த கன்னம் காட்டியது மட்டும் எதிர்ப்பில்லை.
கூடிக்களித்த வீடு நொருங்கி கிடக்க
கட்டிய மனையாள் கருகி கிடக்க
சீராட்டிய பிள்ளையின் சிதைந்த உடலை
பொறுக்கி தேத்தி
கடைசியாக கண்ணீர் விட்டு.
முத்தமிட்ட இதழில் பதிந்த நாறும் குருதியை
புறங்கையில் துடைத்துவிட்டு
பிறந்த மண்விட்டு செல்ல மறுப்பு தெரிவிக்கும் ஒரு செயலில்
பாரதி, போஸ்,பகத்சிங், காந்தி எல்லாம் ஒன்றாய் நிற்பரோ?!!!
நச்சரவம் தீண்டினார் போல் தீண்டினாய் எனை
நான் இருக்கட்டுமோ போகட்டுமோ உரைத்துவிடு ?
பச்சையுடல் பதைக்குதடா பாவி உன் நாவால்.
தேன் சொட்ட பேசியே திருடிட்டாய் எனை.

மிச்சமென்று வைப்பாயோ துவளும் மேனி தனை.
மான் தானே வந்து மயங்குதடா நீ வேட்டை கொள்ள
இச்சைகளை தீர்த்துவிடு தவித்திடும் எனையுண்டு
உணவாய் மாறி பசியாறுதல் காமம் ஒன்றே
யாருமற்ற ஒரு மாலை பொழுது
கடலும் நானும் மட்டும்
ஆர்ப்பரிக்கும் இந்த பெருநீர் தான் எத்தனை அழகு!
கால் தழுவி கண்ணாம்மூச்சி ஆடுகிறது அலைகள்.
கொஞ்சம் நேரத்தில் பேசத்துவங்கி விட்டன.
வரும் என்று பார்க்கும் போது வராமலும்,
வராதே என்று விரட்டும் போது வாரி இறைத்தும்
பிறந்த கன்று குட்டி போல என்ன விளையாட்டு!?
குங்குமமாய் சிவந்த வானம் மெல்ல இருளும் போதுதான்
கடல் கருமையாக இராட்சசன் போல அச்சுறுத்துகிறது.
அத்தனை பெரிய கடல் சின்ன அலை விரல்களால் என்னையும்
தீண்டியதில் நட்பு தான் தெரிந்தது, பயம் விலகி.
அத்தனை ஆர்பாட்டங்கள் அலையிலிருந்தாலும் கடலென்னமோ
ஆழ்ந்த மௌனம் தான் பூண்டிருக்கிறது.
அலையோசையில் இசை ஒரு பாடல் பாடிக்கொண்டே இருந்தது.
வரிகள் தான் புரியவில்லை. கடல் மொழியும் கற்க
வேண்டும்.
பஞ்ச பூதங்களின் ஒற்றை காதலி பாஞ்சாலியாக நான்!
எத்தனை பெரிதாக இருந்தாலும்
விரிந்தெழும் ஆகாயமும்
இறுமாப்பான பூமியும்
ஆர்பரிக்கும் கடலும்
காட்டு தீயும்
சீரும் புயலும் அச்சுறுத்துவதில்லை.
அத்துனை ஆக்ரோஷம் தான் எத்துனை அழகு.!
விழியில் கட்டும் கண்ணீரை மறைக்க
இதழில் புன்னகை ஏந்த வேண்டியிருக்கிறது.

இந்த காதல் தான் எத்தனை விந்தையானது!!

யாரிடம் உள்ளதோ அவரிடம் மட்டும்
மறைக்க வேண்டியிருக்கிறது

"புலிகளுக்கு பறக்க தெரியாது அதனால் அவை பலவீனமானவை" என வாதாடுபவர் கூட புலியை சீண்ட எத்தனிப்பதில்லை என்பதில் தான் அவர்களின் வாதத்தின் பலவீனம் புலப்படும்.
நாமிருவரும் ஒருவர் மேல் ஒருவர் தோற்று போவதற்காக போர் தொடுத்தலே காமம்
பைத்திக்காரனை அதிர்ச்சிக்குள்ளாக்க முடியாது.
முட்டாளுடன் வாதத்தில் வெல்லமுடியாது.
சோம்பேறிகளை திருத்தவே முடியாது.
துறவி என்று எவனும் கிடையாது.
ஆயுதத்தையும் வார்த்தையையும் அவசரமாக வீசிவிடாதே, அதை உன் எதிரி எடுத்து பயன்படுத்த கூடும்
பசிக்கவிட்டு பிள்ளைக்கு சோறிட வேண்டும்.
கேட்டவை யாவையும் போரிட்டு வாங்க செய்ய வேண்டும்.
வலிகளை பழக்கிவிட வேண்டும்.
விளையாட்டும் கல்வியே என நாம் உணர்ந்திட வேண்டும்.
நன்றி செய்ய உணர்த்திட வேண்டும்.
உழவு தொழில் புகட்டிட வேண்டும்.
தொழுதுண்ணும் பழக்கமும் நிர்பந்திக்க வேண்டும்.
பகிர்ந்துண்ணும் பழக்கமும் பகர்ந்திட வேண்டும்.
கூடி களித்திட படிப்பிக்க வேண்டும்.
கூடா நடப்பை விளக்கிட வேண்டும்.
பிஞ்சில் பழுக்க விட்டால் வெம்பிவிடுமென நாம் உணர வேண்டும்.
பிள்ளைகளை பிள்ளைகளாகவே நடத்திட வேண்டும்
தெருமுனைல இருந்த வேப்பமரத்து கீழே குந்திருந்தாரு புள்ளையார் சாமி. வேப்பமரம் ரோட்டுக்கு வழிகுடுத்து சாய... புள்ளையார் பிளாட்பார்மல பரதேசிங்க கூட கூட்டாகிட்டாரு. பொட்ட வெயிலில் குந்தி இருக்கும் புள்ளையாருக்கும் எனக்கும் ப்ரான்ஷிப் ஆகிடுச்சி. வி ஷேர் சேம் பீலிங்க்ஸ்.
எனக்கு ஏதாவது வேணும்னு வேண்ட போனேன், அங்க போன அவரே கூரைக்கு வழி இல்லாம குந்தி இருக்கார். சரி நம்மால முடிஞ்சதுன்னு அவரு கூரைக்கு கலெக்ஷன் பண்ற உண்டியலில் காசு போட்டுட்டு வந்துட்டேன்.
நம்ம நேரம் கடவுளுக்கும் நாம தான் படியளக்க வேண்டியிருக்கு.
அகோர பசிக்கொண்ட சிங்கம் போல்
என்னை அரைகுறையாக கொன்றுவிட்டு
திங்க துவங்கிவிடுகிறாய்.
நான் மின்சாரம் போல் ஒற்றை திசையில் பாயாமல்
நதிபோல் கீழ் நோக்கி பாயாமல்
மலரை போல் சூரியன் பக்கம் சாயாமல்
ஒலியை போல் எண்திசையும் பாய்கிறேன் உன்னுள்
நீ என்னை கொஞ்சிய வார்த்தைகள்
இந்த காற்றால் கலைக்க இயலாது
எதோ ஒரு குயில் கொத்திக்கொண்டு போய் கூவிக்கொண்டிருக்கிறது.
பசியில் அழும் தாயத்த பிள்ளையின் அழுகையோடு
கலந்து ஒலிக்கிறது என் மௌன கதறல்கள்.
ஒற்றை பனையின் பின் தனியாய் எறியும் நிலவும்
நானும் ஒரே வரிசையில் இருக்கிறோம்.
நிலவு நெருங்க முடியா சூரியனை பார்த்திருக்கிறது
நான் நெருங்க முடிந்தும் காத்திருக்கிறேன்!
பிறதொரு முகம் காண பிடிக்காமல்
நின் பிரமத்தம் காட்டும் முகம் நினைந்தே கிடக்கிறேன்.
சிறிதொரு சிரிப்பினை சிந்திடுவாயோவென
என் இன்முத்தம் யாவும் இதழில் மறைத்து தவிக்கிறேன்.
வருமொரு காலம் கனிந்தே என் வாசலென
வன் உன்மத்தம் மேவ பேதையெனவே நிற்கிறேன்
உன்னை பற்றிய கோவங்களும் காதலும் என் விழியெங்கும் நிறைந்திருப்பதால் தான் என் கண் கருப்பும் வெள்ளையுமாக இருக்கிறது. நல்ல வேளை என்னுள் பொங்கும் கனவுகள் யாவும் என் கண்ணிலிருந்து மறைக்கிறேன், இல்லையேல் அவை வானவில் வண்ணத்தில் இருந்திருக்கும்.
எனக்கும் சிறகுகள் உண்டு
எனினும் பறக்க மனமின்றி தான் உன் மனக்கிளையில் அமர்ந்திருக்கிறேன்.
என் நாவிலும் விடமுண்டு
அதை உண்டு தான் நான் உன்னை உயிருடன் வைத்திருக்கிறேன்.
எனக்குள்ளும் தீயுண்டு
அதைதான் நீயென்று மாற்றி வைத்திருக்கிறேன்.
கொள்ளாமல் நீ விட்ட மிச்சங்கள்
இன்று அழகென அறியப்படுகிறது.
கொல்லாமல் நீ விட்ட மிச்சங்கள்
இங்கு நானென்று அறியப்படுகிறது.
நாம் இன்னும் பயணிக்காத சாலைகள் நம்முள்ளேயே பல உண்டு.
அவை புழுதியும் புதரும் மண்டி கிடக்கின்றன.
அந்த பக்கம் அறியபடாத ராட்சதர்களும் பேய்களும் இருக்கு என நாம் தீவிரமாக நம்புவதால், அந்த பாதைகள் நம்மால் புறக்கணிக்கப்பட்டவை.
அங்கே ஒரு அழகிய அருவியும் நந்தவனமும் இருக்க கூடும்
யாருமற்ற வீட்டில் கூட உடை மாற்றும் போது
அறையை உள் தாழிட்டு .கொள்கிறேன்.
"வரட்டுமா" என்று கதவை தட்டி வீம்பு செய்வாயே அது
இனியொரு தருணம் தட்டப்படாதா என்று ஏங்கியபடி.
என் பிள்ளைகளின் உடலை மட்டும் சுமந்தேன்
அவர்கள் ஆத்மாவையல்ல.
என்னுடையது என நான் ஏந்தி திரிய எதுவுமே இல்லை.
நாளை என்ற நிச்சயமற்ற குருடன் கண்ட கனவை
இன்றிலிருந்து நோக்க முற்பட்டு தோற்று போகிறேன் தினந்தினம்.
வில்லாய் நின்று என் காதலை அம்புகளாய் எய்துக் கொண்டிருக்கிறேன்.
விற்கள் நின்றால் தான் அம்புகள் பறக்கும், வில்லும் சேர்ந்து பறத்தலாகாது.
பறந்து சொருகிய அம்புகளின் நுனியில் சிதறும் குருதி துளிகளாய் என் பிள்ளைகள்.
என் பிள்ளைகளின் உடல்களை மட்டும் சுமக்கிறேன்.
மெய்சிலிர்க்கும் செயல்கள் செய்யக்கூடும் என்பதாலேயே நான் கடவுளாக வேண்டும்.
மேகங்களின் கூட்டு களிப்பை பசுவின் தோலிலும், உன் மெய்சிலிர்ப்பை கெளுத்தியின் வாயிலும்
அருவியின் விளிம்பில் தோன்றும் வானவில்லின் எஞ்சிய வண்ணங்களை உன் கனவுகளிலும்
குழந்தையின் பாத நிறத்தை உன் நாணங்களிலும் மின்னலின் மினுப்பை காக்கைகளின் சிறகிலும்
பாலூட்டி முடித்த அன்னையின் களி சிரிப்பை ஆழ்கடல் அமைதியிலும் தெளித்திட வேண்டும் நான் கடவுளாகி.
கடவுள் சிரித்தான் " இவை நான் முடித்தவை தானே" என்று
நான் சிரித்தேன் அவனை கண்டு " இவையனைத்தும் செய்ததை நான் மெச்சுகிறேன்,
எனினும் வருத்தம் உண்டு. படைத்த அனைத்தையும் ரசிக்கவல்லாது நீ அமரனாய் ஆகி போனாய்.
மரிக்க தகுதி கொண்ட என்னால் மட்டுமே ரசிக்க இயலும்.
என் கடைசி வரியும் கேட்டு தொலையடா
மரணம் தொலைத்த பாதகா. கண்ணிருள காதடைய மூச்சும் சிக்கி தவித்து கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் அகன்று அடங்கி போகும் மரிப்பை இறைவனுக்கும் அளிப்பேன் நான் கடவுளாகி"
தொழுது நின்றான் கடவுள் "நான் ஆண்டவனாகவே இருந்திருக்கலாம் கடவுளாய் இருப்பது கொடுமை .. கொன்று விடு" என்றான்.
நகைப்புடன் நானும் நகர்ந்துவிட்டேன்.
பொறுத்து கொண்டே இருக்க மாட்டேன் கண்மணி.
புணர்தலுக்கு கூட இருவர் வேண்டும்.
ஒன்றுதான்பட முடியும், ஒன்றாக இயலாது.
காதலில் மிக பெரிய கயமை புரிதலற்று இருப்பது.
இனி இரு, நானும் இருப்பேன்.
தனித்தனியே.
தொலைத்த பின் ஏங்குவது தானே மனிதம்.
காதல் கடவுளுக்குரியது.
நான் கடவுள்
முலைமார் அழகிற்கு வேண்டி படைக்கப்படவில்லை. எத்தனை பாதுக்காத்தாலும் 40க்கு மேல் தளர்ந்துவிடும். பாலூட்டினால் மார்பக புற்றுநோய் குறையும். கட்டுக்குலையாமல் வைத்திருந்தால் புற்றாக வாய்ப்புண்டு.
சோதியின் மத்தியில் என்ன இருக்கும் குளிர்ச்சியா? வெம்மையா?
புயலின் மத்தியில் என்ன இருக்கும் அதகளமா ? அமைதியா?
மரணத்தின் முடிவில் என்ன இருக்கும் பிரபஞ்சமா? வெறும் கனவா?
பிறப்பின் துவக்கம் எங்கிருக்கும் இறையிடமா ? வெற்றிடமா?
மனதின் நுனி எங்கிருக்கும் பெரும் வெளியிலா? உள்ளே பேராழத்திலா?
அதீத சூட்டின் முடிவென்ன? உறையும் குளிரின் கடையென்ன?
அசையா மலையின் முக திசையென்ன? ஒளியின் பயண தொலைவென்ன?
உயிரின் வடிவம் தான் என்ன? அது உறையும் இடமும் தான் என்ன?
நானும் எதுவின் சாயலோ?
இல்லை இறையின் துகளின் மாயமோ ?!!
மாயரத்துல இருந்து கொஞ்சம் தூரம் எங்க ஊரு ...
எங்க ஊருன்னா எங்க பாட்டன் முப்பாட்டன் இருந்த ஊரு...
இந்த சித்திரை வையாசில அங்க போய்டுவோம்...
காலைல ஒரு அஞ்சர மணி வாக்குல காவிரி பக்கம் போய்டுவோம்...
தூரத்துல கோயில் மணி அடிக்கிற சத்தம் ...
அரை இருட்டு ....
ராத்திரி முழுக்க சுத்தமான காத்து .. சில்லுன்னு இருக்கும்...
காத்துல கோயில் வாசம் வரும் ...
தலைல அரப்பு பொடிய வச்சிக்கிட்டு ..காவிரில கால் நனைக்கிற சொகம் தனி..
அரப்பு பொடி, கோயில் வாசம், வயல் மண் வாசம், மாட்டு கோமிய வாசம் எல்லாம் சேந்து மயக்கும்..
கொஞ்ச நேரம் கடவுள தொட்டா மாதிரி இருக்கும்..
காவிரி மோதந்து வர கொய்யா மாம்பழம் எல்லாம் சாமி எங்களுக்கு அனுப்பிவுட்டா மாதிரி தெரியும்.
அப்படியே மூக்கை கையாள மூடிகிட்டு காவிரில மூழ்கி அப்படியே கொஞ்சம் நேரம் இருப்போம்...
எங்கியோ அண்ட வெளில இருக்கா மாதிரி இருக்கும் .. ஙொய்ன்னும் காது...
வெளில இருந்து பேசுற சத்தம் ஒரு மாதிரி கேக்கும்...
கரை முதுகுல உக்காந்துகிட்டு ஏதாவது பெருசு ஆலாபன பண்ணுச்சின்னா , அதவிட சுவர்க்கம் இன்னுமே இல்லை.
அப்படியே தண்ணிக்குள்ளேயே இருக்கலாம் போல இருக்கும்..
மொத முழுக்கு போட்டு குளிச்சிடுவோம் .. அப்பறம் ஆட்டம் ..
மூக்கு வரைக்கும் தண்ணில மூழ்கி இருக்க வெறும் கண்ணை மட்டும் வெளில வச்சிக்கிட்டு பார்ப்பேன்...
அப்படி ஒரு பார்வை ... கரேல்னு வானம் ..கெழக்கால செவப்பு ... அதுல கோயில் கோபுரம் ... காலைல பறக்கும் பறவைங்க.. ஆத்துக்கு வரும் மாடுங்க ...
காவேரி அளவுக்கு எங்க உடம்பு குளிரும் வரை ஆட்டம்...
வெளியே வந்ததும் கொல பசி பசிக்கும் பாருங்க.... அது வாழ்க்க!!
இயேசுவின் இரத்தம் புத்தரின் இதயத்திலிருந்து வழிந்தால் என்ன செய்வேன்
அல்லாவின் கருணையை ஆண்டாள் கொண்டிருந்தால் என்ன செய்வேன்
ஃப்ரியாவின் காமம் ரதியிடம் பொங்கினால் என்ன செய்வேன்
தோரின் வீரம் கந்தனிடம் கணன்றால் என்ன செய்வேன்
ரோசிக்ரூசியனின் சிலுவையில் இயேசு அறையபட்டால் என்ன செய்வேன்
ஃப்ரீ மேசானின் மூன்றாம் கண் சிவனின் நெற்றியிலிருந்தால் என்ன செய்வேன்
பிரமிடுகள் கோவிலின் கோபுரம் போல் தெரிந்தால் என்ன செய்வேன்
ஆபிரகாமும் இப்ராஹிமும் ப்ரஹ்மமும் ஒன்றென்றால் என்ன செய்வேன்
சாராவும் சராயும் சரஸ்வதியும் ஒன்றென்றால் என்ன செய்வேன்
கடவுள் தான் நானென்றால் என்ன செய்வேன்
நான் தான் கடவுளென்றால் என்ன செய்வேன்
நாளை இல்லையென்றால் என்ன செய்வேன்
நானே இல்லையென்றால் என்ன செய்வேன்
உலகம் சுழன்று கொண்டிருப்பது காலமா ?
அண்டம் விரிந்து கொண்டிருப்பது காலமா ?
என் இதயம் துடித்து கொண்டிருப்பது காலமா ?
இல்லை மூன்றுமே ஒன்றா ?
பிரிகிறேன் இரண்டாய் நான்காய் எட்டாய் பின் கோடிகளாய்
ஒரு சுவாசத்தின் முடிவில்
சேர்கிறேன் மீண்டும் ஒன்றாய்
மூச்சை உள்ளிழுத்து
எனக்குள் ஒரு சாத்தான்
கடவுளின் முகமூடி இட்டு சுத்துகிறது.
என்னுள் சதை சுவரெங்கும் மோதி
விடுதலை வேண்டி அலறுகிறது.
நியாயங்கள் சொல்லி சாந்த படுத்துகிறேன்.
நான் சொல்லும் வேதங்களை வாய் பிளந்து கேட்கிறது
என்னால் கடவுளென வளர்க்க பட்ட சாத்தான்.
எனக்குள் ஒரு மழை பெய்கிறது.
சாத்தான் நனைந்து பல்லிளித்து சிரிக்கிறது.
யாரோ ஒரு மனிதன் என் தோல் கதவை அறைந்து தட்டுகிறான்
அநியாயம் எனும் கோல் கொண்டு.
விழிக்கும் என்னை தட்டி தூங்க வைத்து என் சாத்தான் கதவை திறக்கிறது,
கடவுளின் முகமூடியணிந்து.
தட்டியவனுக்கு நான் ஓதிய வேதங்களை ஓதுகிறது சாத்தான்.
அவன் வெடி சிரிப்பில் திளைக்கிறான்.
என் சாத்தான் முக மூடி கலைக்கிறது, கூரிய கோரை பற்கள் பளிச்சிட.
சிதறிய குடலை சேமிக்க நினைக்கிறேன் என் நினைவு திரும்பிய தருணத்தில்.
வலக்கை நீட்ட எத்தனிக்கிறேன் வராத கையை நோக்கும் போது உணர்ந்தேன், துண்டுப்பட்ட அக்கை தூர கிடப்பதை. சிதறி கிடக்கும் என்னை சேகரிக்க துடிக்கிறேன். புரியாத வலி உடலெங்கும் ஒலிக்கிறது. என் ரத்தம் என் ரத்தம் என்று போற்றிய இன்னும் சில உடல்களிருந்து கசிந்து வந்த ரத்த வாடை தான் எத்தனை கொடிது. தீபாவளிக்கு தீபாவளி ரசித்த வெடித்த வாடை இன்று பெருமச்சத்தை தருகிறது. சுற்றி நிற்கும் கூட்டம் தான் கூச்சலிட்டு தங்கள் அச்சத்தை அறைக்கூவி கொண்டிருந்தது. அங்குமிங்கும் அலையும் போலீஸ்க்காரனின் பூட்ஸ்கள் இன்னும் சிதையாத என் கையை மிதித்து செல்கிறது. வலியில் பெருங்குரல் கொண்டு கூவ எத்தனித்து இயலாது அடங்கி போகிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கும் சதை பிண்டங்கள். இதில் எது என்னுடையது ?
இது எனதில்லை என்று எல்லாம் விட்டு சென்று ஒரு முகம் வாய் பிளந்து என்னை பார்க்கிறது, உடலற்ற தலையிலிருந்து. என் பிள்ளைக்கு நான் வாங்கி வந்த சீனாக்காரனின் பொம்மையை மட்டும் அடையாளம் கண்டுகொண்டேன். மனம் வலித்தது உடலோடு சேர்ந்து. இந்த பொம்மை என்ன பாவம் செய்தது, இதுவும் சிதைந்து கிடக்கிறதே? எப்படியும் வாங்கி தருகிறேன் என நான் உறுதி தந்த பொம்மையது. உறுதியில் பாதி முடித்துவிட்டேன், இனி கொடுக்கத்தான் இயலாது. என் பிணம் வீடு சேரும் போது என் பிள்ளை பொம்மை உடைந்ததுக்கு அழுமோ இல்லை இனி வாங்கி தர நானில்லை என்றழுமோ. என்னை சுற்றி கிடந்த உடல்களில் எத்தனை உடல் பொம்மை வாங்கி வந்ததோ?
வழிந்து கிடந்த என் குடலை வாரி உள்ளே அழுத்துகிறான் ஒருவன் நான் உயிருடன் இருப்பதே தெரியாமல். எங்கும் எலக்ட்ரோனிக் அலறல்கள் எல்லோரும் வந்ததை உறுதி செய்கிறது. எப்படியும் காப்பாற்றி விடுவார்களா? இப்போதைக்கு ஒரே ஆசையும் ஒரே ஏக்கமும் அது தான். அள்ளி எடுத்து சென்றவன் என் அரையுடலைதான் அள்ளினான். பாகம் பாகமாய் பிரிந்துகிடந்த என்னை கண்டு எனக்கே நம்பிக்கையில்லை.
இனி வெறும் சதை குப்பையாய் நான். நினைவு தப்புதலுக்கு முன் என் கவலைகளை கொதிக்கவிட எத்தனிக்கிறேன். என்ன செய்வாள் என்னவள்? யார் கொஞ்சுவார் என் பிள்ளையை? அடுத்த மாதம் பாலுக்கும் மாளிகைக்கும் கொடுபதற்குள் ஆயுள் காப்பீடு வந்திடுமா? வாடகை பாக்கி வைத்தால் வைவானே வீட்டுக்காரன்? ஒரு சொல் தாங்கமாட்டாளே என் அருமை நாயகி?
என் கண்கள் சுட்டு நீர் வழிகிறது வெதுவெதுப்பாய். ஒரு வெடிகுண்டு என் உடலை மட்டுமல்ல என் குடியையும் சிதறடித்துவிட்டது. வெடிகுண்டு வைத்தவனே நான் எப்போதடா உன் மீது போர் தொடுத்தேன் ?
பூஜியங்கள் முதன் முதலாய் அறியப்பட்ட காலத்தின் பூஜிய குழப்பங்கள் போல
என் குணம் மேலுள்ளது பிறர் கருத்தும்.
கோபுரங்கள் எழுப்படுவதற்கு முன்னான சிந்தனைகளை கொண்டிருகின்றனர் என்னை சுற்றி அடைக்காக்கும்
பிற மனிதர்கள்.
மண் அகழ்வுகளை முதலில் அறியும் வயதையொத்த மனநிலையில் நான்.
முதல் முதலாக இரு விரல் நுனிகளை தொடும் தந்திரம் அறிந்த தருணம் போல குதூகலிக்கிறேன்.
முதலில் நெய்தலை அறிந்த நெசவாளி போல கர்வத்துடன் திரிகிறேன்.
முதல் குயவனின் மண் கொய்தல் லாவகம் போல என்னை நான் குடைகிறேன்.
முதல் சிக்கி முக்கி கல்லின் உரசல் எப்போது நடக்குமோ ?
பாட்டியின் பரம்பரை அறிவுரை
வெறுமனே படுத்திரு,முனகாதே,
தழுவாதே, சிலிர்காதே, ஒத்துழை,
இல்லை வேசி என்றுவிடுவான்.
தந்தை
கவனிக்கபடாமலே அர்ப்பணங்கள் செய்பவன்.
அங்கீகாரங்கள் இல்லாமலே அனைத்தும் செய்பவன்.
ஆனால் பெயரின் முன்னேழுத்திலிருந்து
பிள்ளையின் ஜாடை வரை எங்கும் நிறைந்திருப்பவன்.
அவன் சொல் வாழ்க்கையின் அத்தனை பக்கங்களிலும் வந்து செல்லும்.
தோல்வியின் தருணங்களில் அம்மாவின் அன்பு அரவணைக்கும்
அப்பனின் மொழி வழி செலுத்தும்.
திட்டி தீர்த்தும் தவிர்க்கவே முடியாத அவசியமாகி போய் விடுகிறான்.
மூச்சுக்குழலில் வாசம்
பேச்சு வாயிலில் சுவை
மூத்திரக்குழாயில் பிறப்பு
எங்களை என்னவென்று நினைத்து
செய்தாய் ஈசனே?
நடந்தே யாரும் வெளியேறிவிட கூடாதெனதான் உலகை உருண்டையாய் படைத்துவிட்டான் போல.
சுற்றி சுற்றி திரும்ப அங்கேயும் வரும் உலகை உருண்டை என பார்ப்பதா? சிறையென பார்ப்பதா ?
எப்போது காதல் வயப்பட வாய்ப்புண்டு
எப்போது ஒருவன் முழுமையாக பெண்ணாக உணர்விக்கிறானோ அப்போது
எப்போது உயிர் தர வாய்ப்புண்டு
எப்போது ஒருவன் இனி நானில்லை அவனென்று உணர்விக்கிறானோ அப்போது
எப்போது நாணம் கொள்ள செய்யும்
எப்போது ஒருவன் ரகசியங்கள் அறிந்து சிரிக்கிறானோ அப்போது
மரணம் வரும் ஒரு நாள் வந்தே தீரும்
உயிர் போகும் ஒரு நாள் போயே தீரும்
இதற்கெல்லாம் பயப்படுவதா?
இங்கு நாளை என்ன என்று யார் அறிவார்?
வாழ்க்கை என்பது ஒரு பயணம்
மிக சுகமானது
------- ஹஸ்ரத் ஜெய்பூரியின் வரிகள்
மனம் தறிக்கெடுகிறது,
என்ன விளையாட்டிது ?
வலிகள் கூட்டி சுவைக்கிறது.
இதழ்களில் பாடல் எங்கிருந்து வருகிறது?
அது என்னை ஏன் அண்டம் கடந்து அழைக்கிறது?
நினைவுகளும் இல்லை மறக்கவும் இல்லை,
முன் எப்போதோ கேட்ட சாயல்களில் அந்த பாடல்.
இந்த பாடல் பழையது தான் முன்பு எவருக்கோ,
எனினும் எனக்கிது புதிது.
மேகம் மழை ஊஞ்சல் கட்டுகிறது, மின்னல்கள் பாலமிடுகிறது.
தோன்றிய காலம் முதல் பெய்து கொண்டிருக்கும் மழை
ஏனோ இன்றும் புதியதாய் தெரிகிறது.
எவரெவருக்கோ பெய்யும் மழை எனக்கும் பெய்கிறது.
நம்பிக்கை இருக்கட்டும்,
கனவுகளும் கைப்பட இருக்கட்டும்
கனவுகள் சிரித்தே இருக்கட்டும்
கண்மையிட்ட கண்களில் கனவுகளும்
சேர்ந்தபடி இருக்கட்டும்.
நீ பிரியவே போவதில்லை என்ற பொய்
சத்தியங்களை நம்பிய கனவுகள்
சேர்ந்துக்கொண்டே இருக்கட்டும்.
ஒற்றை பனையும் அதன் பின் தொலைவானில்
தெரியும் நிலவும் சோடி என்றே நம்பிக்கை வரட்டும்
கனவுகளும் நம்பிக்கைகளும் வந்து கொண்டே இருக்கட்டும்
இல்லை காதல் துருப்பிடித்து விடும்.
சோக கண்ணீர்கள் கனவின் வண்ணங்களை கழுவி விடுகின்றன.
புதிதாய் வர்ணம் சேர்க்க வருகிறான் தேவன் ஒருத்தன் வானவில்லில் நனைந்து.
பூக்களின் நிறங்கள் மழையில் கரையாது.
பௌர்ணமி நிலவென்று எதுவும் கிடையாது.
கானல் நீரும் பனியில் உரையாது
கண்ணீர் எல்லாம் சோகம் கிடையாது
இரவு முழுதும் எனக்கான பகலை
செய்து கொண்டிருப்பானோ இறைவன் ?
பியானோவில் பூனை குதித்தது போல் ஏதோவொன்று எதிரொலிக்கிறது என்னுள்.
கடிகாரத்தின் ஒரு முழு சுற்றை முழுவதுமாக பார்த்துவிட்டேன் இன்று.
தூக்கம், கனவு இல்லை நீ என்று ஏதாவது ஒன்று தேவைபடுகிறது இரவுகளின் நீளத்தை கடக்க.
நீ இல்லாத இரவுகளில் இறைவன் வந்துவிடுகிறான் அவனின் வீணாய் போன படைப்புகளின் தொகுப்பை படித்துக்காட்ட, சட்டென விழித்தெழுகிறேன். வழக்கம் போல உலகாய் மாறி குளிர்ச்சியுடன் சிரிக்கிறான்.
இருளை திறந்து கொண்டு கிழக்கு வாசல் வழியே எட்டி பார்க்கும் சூரியன் ஏனோ உன்னை ஞாபகபடுத்துகிறான். ஒவ்வொரு முறையும் நான் புதிது என்றல்லவா நீயும் பொய்யுரைக்கிறாய்.
அடர்ந்த இரவின் முதுகில் பயணிப்பவனுக்கு
என் சன்னல் கம்பிகளுக்கிடையில் என்ன வேலை ?
இருட்டின் கருமையில் அஞ்சி தலையணையில் முகம் புதைக்கையில்
மூச்சுக்காற்றாய் வந்து தழுவிக் கொள்கிறான்.
மூடு பனியின் கற்றைகள் என சிலிர்த்தெழுந்து தாவணியின்
கோட்டையை தகர்த்தவன்.
காணா இருட்டில் காய்ந்த இலைகளின் சலங்கை பூட்டியலைகிறான்.
ஒழுக்கமற்றவன், பிறன் மனையென தெரிந்தே தழுவுகிறான்.
பண்டைய சேகரிப்பின் புது முளை ஒன்று துளிர்கிறது.
நடக்கும் போது பூமி என் காலுக்கு கீழ் சுழல்கிறது.
உட்பாதத்தில் உணர முடிகிறது இன்னும் வெடிக்காத எரிமலைகளையும்
மகரந்தம் தாங்கி தூங்கும் பூச்செடிகளின் முளைக்காத விதைகளையும்
அற்பர்களும் பெரு வள்ளல்களும் மக்கி மண்ணாய் கிடந்த பூமியின்
முதல் முனை தேடி இன்னும் நடக்கிறேன் நின்ற இடத்திலேயே
பூமி மட்டும் காலுக்கு கீழ் சுற்றிகொண்டே இருக்கிறது.