Tuesday 25 February 2020

தூரத்து கோபுரம்

தூரத்துக் கோபுரம்

அந்த விடியற்காலையில், கும்பகோணத்து மாமா, மாயவரத்திலிருந்து சித்தியும், சித்தப்பாவும், இன்னும் அப்பாவின் உறவினர்கள் பலரும் வந்திருந்தார்கள். அம்மா முந்தானையை இழுத்துப் போர்த்தி, யானை மண்டியிட்டு உள் வீட்டு வாசப்படியில் அமர்ந்திருந்தாள். கண்கள் தரையை வெறித்தபடியிருக்க, கண்ணீர் மூக்கின் ஓரமாக வழிந்து மூக்குத்தியின் கீழ் முத்து போல தொங்கிக்கொண்டிருந்தது. மாயவரத்து சித்தி விசும்பிக்கொண்டிருந்தாள். கும்பகோணம் மாமா எதையோ பறிகொடுத்தவர் போல தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். அவரை முறுக்கு மீசையும் முரட்டு  பார்வையாக மட்டும் பார்த்தவன் நான். மற்றவர்களிடம் பதட்டமான அமைதி நிலவியது. ஏதோ அசம்பாவிதம் என்று மட்டும் எனக்குப் புரிந்தது. அரை தூக்கத்திலிந்து எழுந்த என்னை அம்மா தலையசைத்து அழைத்தாள். நான் பாயிலிருந்து மண்டியிட்டுத் தவழ்ந்து சென்று அம்மா மடியில் முகம் புதைத்துக்கொண்டேன்.

அரசூர் தாத்தா மெல்ல தொண்டையைச் செருமியபடி ஆரம்பித்தார். ”ஒனக்குப் பித்துக் கொண்டுடுச்சி தம்பி. நா பாத்து வச்ச புள்ளதான் அது, அதுமேல அபாண்டம் சொன்னா நாக்கு அழுவிப் பூடும். பூமி நோவாத புள்ள அது. யோசிச்சுப் பேசு.”
அப்பா கண்களில் கோபத்தோடு தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். குடவாசல் அத்தை முனகலாக, “தம்பி மட்டும் வேணுன்னா சொல்லுது. கட்டுன புருசனே பொண்டாட்டிய தூத்துவானா? அவ ஒத்த முந்தானையும் ஓரமா பூ வக்கியும்போதே நெனச்சேன்.”
கும்பகோணம் மாமா அத்தையை முறைத்தார். ”மதனி! நீங்களும் ஒத்த பொண்ணப் பெத்து வச்சிருக்கீங்க. பாத்துப் பேசுங்க. எங்க வீட்டுப் புள்ளய அப்பிடி வளக்கல.”
அத்தை கழுத்தை வெட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சித்தப்பா கோவத்தில் மூக்கு விடைக்க, உதடு துடிக்க… பாதி அழுகையுடன், “இன்னும் கோவில்ல இருக்க சாமிதான்யா மிச்சம். அதையுங்கொண்டாந்து கூண்டுல ஏத்திருங்கய்யா. பெத்த தாயி மாதிரி வயித்த தடவி சோறு போட்டு வளத்தாங்க எங்க மதனி. இதெல்லாம் கேட்டுக்கிட்டு உசுரோட இருக்கம்பாரு…சே! மனுஷங்களா இவுங்க?”
அப்பா சீறினார். ”செருப்பால அடிப்பேன்! வாய் மூடுறா.”
ஒருவர் வார்த்தை மீது மற்றவர் வார்த்தை விழுந்து வாதம் தடித்தது.
அரசூர் தாத்தா அதட்ட நிசப்தம் நிலவியது. 
தாத்தா அம்மாவைப் பார்த்தார். “கேக்க நாக்கு கூசுதும்மா செளந்தர்யம். நீ என்னம்மா சொல்ற?” 
அம்மா மூக்கை உறிந்து முந்தானையால் துடைத்துவிட்டு மெளனமாய் அமர்ந்திருந்தாள். சேட்டி பெரியம்மா அடித்தொண்டையில், “அண்ணங்கிட்டப் போனவ யாருகிட்ட சொல்வான்ற கதையாயில்ல இருக்கு. அவகிட்ட கேட்டா? நாலு புத்திமதி சொல்லி இனிமேயாவது ஒழுங்கா குடும்பம் நடத்த சொல்லறத உட்டுட்டு… எங்க ஊருன்னா கரும்புள்ளி செம்புள்ளி குத்தியிருப்பாங்க. குடும்பத்து பொம்பளக்கி அழகா இது?”
கும்பகோணம் மாமா தோள்துண்டை ஓங்கித் தரையிலடித்துவிட்டு விடுவிடு என்று வெளியே போய்விட்டார். 
அவரவர் எதை எதையோ பேசினார்கள். எனக்கு அடிவயிற்றில் ஏதோ பிசைந்தது. பெரியம்மா, அத்தை எல்லாம் என்னை சூழ்ந்துகொண்டு ”பயப்படாதய்யா! வாடா செல்லம்” என்று எனக்கு ஆறுதல் போல பேசினர். எனக்கு அவர்கள் யாரையுமே பிடிக்கவில்லை. சித்தி முந்தானையை மட்டும் இறுகப் பற்றிகொண்டேன். 
சேட்டி பெரியம்மா அருகில் வந்து, ”ஒரத்தன் வந்து போறானாமே ஒம்மாளப் பாக்க, நீ பார்த்துருக்கியா?”
”க்ர்ர்ர்ர்கா…தூ” அவள் முகத்தில் முழிந்தேன். அப்பா துள்ளி எழுந்து கையை வீசினார். எனக்குக் கன்னம் தீப்பற்றி எறிய அலறினேன். அம்மா பதறி என்னை இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள்.
அரசூர் தாத்தா அலறினார். ”ஏ சேட்டி! பொம்பளயா நீ? பத்து வயசுப் புள்ளகிட்ட என்ன பேசனும்னு தெரியாது? ஒன் வக்கிர புத்திக்கி அந்தக் குழந்ததான் கெடச்சிதா? ஒனக்கறிவெங்க போச்சு கிருஷ்ணமூர்த்தி? புள்ளய இப்புடியா போட்டு அடிப்ப? பதினோரு வருசமா தவங்கெடந்து பெத்தப் புள்ள. சே…”
அத்தைகளும் பெரியம்மாவும் இத்தனை நாள் அம்மாமேல் இருந்த ஆற்றாமையைக் கொட்டிக் கவிழ்த்தனர். பத்து, பன்னிரண்டு வருடத்துக் கதையெல்லாம் வந்தது. அம்மா மட்டும் அப்படியே இருந்தாள். அரசூர் தாத்தா நடுநிலையாக இருக்க, கும்பகோணத்து மாமாவும், சித்தப்பாவும்தான் அம்மாவுக்காகப் பேசியது. மற்றவர்கள், “என்னய்யா இத்தன வயசில போயி இப்படி பேசிக்கிட்டு” என்று மெளனமாக இருந்தனர். பூசல் கொஞ்சங்கொஞ்சமாக அடங்க, பெண்கள் குளிக்கவும் அடுக்களைப் பக்கமும் போய்விட்டனர். ஆண்கள் மட்டும் அப்பாவை சுற்றியமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பா, சிலையாக அமர்ந்திருந்தார். அம்மா சலனமில்லாமல் மெளனமாக அமர்ந்திருந்தாள். நான் மூன்றாம் வகுப்பு படிக்கையில் பென்சில் திருடிவிட்டதாக என் மேல் குற்றம் சாட்டிய சங்கரனை கீழே தள்ளி மார் மேல் ஏறிக் குத்தியதை அமுதா டீச்சர், அம்மாவிடம் சொன்னபோது அம்மா எனக்குச் சொன்னது இதுதான்.           “நீ எடுக்கல இல்ல, அப்புறம் ஏன் ஆர்ப்பாட்டம் பண்ற? தப்பு செஞ்சவங்கதான் தப்ப மறைக்க ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க.” நான் விசும்பியபடி, ”அப்புறம் எல்லாம் நான்தான் எடுத்தேனு நெனைப்பாங்க” என்றதற்கு சிரித்துவிட்டு, ”மேல சாமி இருக்கு, அது எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுருக்கும். அதுக்குத் தெரிஞ்சா போதும்.”
அரசூர் தாத்தா வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியபடி செய்தித்தாளை மேய்ந்துகொண்டிருந்தார். தூரத்தில் கும்பகோணத்து மாமா தென்னை மரத்தில் கை ஊன்றி வானத்தை வெறித்துக்கொண்டிருந்தார். கண்கள் கலங்கியிருப்பதை இங்கிருந்தே கண்டுகொள்ள முடிந்தது. அவரைப் பார்த்து எப்போதும் தோன்றும் பயம் மாறி அவரைப் பிடித்துப் போனது.அம்மா மட்டும் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள். மடியில் படுத்திருந்த என் தலையைக் கோதியபடி தரையிலிருந்த ஒரு கரும்புள்ளியையே வெறித்துக் கொண்டிருந்தாள். அம்மாவும் அப்பாவும் அதே இடத்தில் அமர்ந்திருக்க, கூட்டம் மெல்ல கரைந்தது. அதன்பின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பேச்சுவார்த்தை அறவே நின்றது.
”டேய்! சாப்பாடு என்னாச்சு?” என்பார். அம்மா எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டுப் போய்விடுவாள். அம்மா கையில் அப்பா காசு தந்து நான் பார்த்ததில்லை. முன்னால் அப்பா வர, பின்னால் பொன்வண்டு சோப்பு பனியன் போட்ட கணேசன் அட்டைப் பெட்டியை தூக்கியபடி வருவான். மளிகை அப்படித்தான் வரும். பால், காய்கறி எல்லாமே எல்லாம் திண்ணையிலேயே பைசலாகிவிடும். அம்மா பாதி நேரம் அடுக்களையில் இருப்பாள், இல்லையேல் சடசடவென ஓடும் தையல் மிஷினில். லெதர் உறைபோட்ட மர்ஃபி ரேடியோ ‘கண்ணனொரு கைக்குழந்தை’ என்று பாட அம்மா லயித்து உதட்டசைத்தபடி அதற்கு சடசடவென தையல் மிஷினில் பின்னணி சேர்த்தபடி இருப்பதெல்லாம் அப்பா இல்லாதபோது மட்டும்தான். மற்றபடி அடுக்களைதான் அவளுக்கு கதவில்லாப் பூட்டில்லாச் சிறை. கல்யாணம் காட்சி எதுவானாலும் அப்பா மட்டும்தான் போய்வருவார்.
அன்று மர்ஃபி ரேடியோ ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ என்று பாட, அம்மா கண்மூடி லயிப்பது போலிருந்தாலும், அவள் எங்கோ தொலைவில் தொலைந்திருந்தாள். 
“அப்பாவுக்கும் உனக்கும் என்னம்மா பிரச்னை?” அவள் தொலைத்திருந்த தூரத்திலிருந்து மீண்டு வந்தாள். “ஒரு பிரச்னையும் இல்லப்ப.”         “நெறய பேர் வந்து பேசுனாங்களேம்மா?” அம்மா என் தலையைக் கோதிவிட்டாள். “பயமா இருக்கா?” நான் இல்லை என்று தலையாட்டினேன். “நீங்க பயப்படுறீங்களாமா?” 
அவள் விரக்தியாக சிரித்தாள்.
“பயப்படுற வயச நா தாண்டி வந்துட்டேன்.” அவள் பார்வை மீண்டும் எங்கோ தொலைவுக்குச் சென்றது. தொடர்ந்தாள், ”எனக்கு 16 வயசு கல்யாணமாவும்போது, பக்கத்து வீட்டுப் பையனைக் காதல் பண்றேனு சந்தேகப்பட்டு, எனக்கு அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அப்ப உன் அப்பாவ பாத்தா பயமா இருக்கும், எடுத்ததுக்கெல்லாம் கோவப்படுவாங்க, அப்புறம் எல்லாம் பழகிப்போச்சு. புருஷன் பொண்டாட்டினா சண்ட வரத்தான் செய்யும்.
“அப்பா ரொம்ப மோசமானவங்க இல்லம்மா?” என்றேன். அம்மா என்னையே பார்த்தாள். ’இல்லப்பா! ரொம்ப நல்லவங்க” சிறிது நேரம் மெளனமாக இருந்தாள். பின், ”அம்மா மேல அவங்களுக்கு அளவு கடந்த பிரியம்ப்பா. அதுதான் இப்பிடியெல்லாம். இதுவரைக்கு கை ஓங்கினதில்ல. இப்பதான்… மீண்டும் மெளனத்துக்கு போய்விட்டாள். கொஞ்சம் வளர்ந்ததும் அம்மா சொன்னது உண்மைதான் என்று எனக்குத் தோன்றும்.
ஒருமுறை குடவாசல் லட்சுமி அத்தை, ”அவன் அவன் லட்சுமி மாதிரி பொண்டாட்டி வீட்ல இருக்கும்போதே வெளியில் தொடுப்பு வச்சிக்கிறான். ஒனக்கென்ன கேடு கவர்மெண்டு உத்தியோகம், சொத்து பத்துனு ஏகம் கெடக்கு. நம்ம வாத்தியார் பொண்ணு மரகதங்கூட இன்னும் கரசேராம கெடக்குறா… உம்ன்னு ஒருவார்த்தை சொன்ன தங்கத் தட்டுல வச்சில்ல நீட்டுவாங்க… என்ன வயசா போயிடுச்சி? கண்ட கண்ட நாடு மாறி கைல கஞ்சி வாங்கி குடிக்க நீ என்ன குத்தம் செஞ்ச?” என்றதற்கு அதைக் கவனிக்காததைப் போல, ”ஏன்க்கா, அத்தான் உரத்துக்குக் காசு வேணும்னு கேட்டுக்கிட்டிருந்தாங்களே, ஏற்பாடாயிடுச்சா?” என்றார் சம்பந்தமில்லாமல். அப்பா தன்னை வலுக்கட்டாயப்படுத்தி வயசானவனாக ஆக்கிக் கொண்டிருந்தார். அவர் வயதுக்கும் பத்து மூத்தவர் போல தோன்றினார். முன்பெல்லாம் யாராவது நான்கு பேர் எங்கள் திண்ணையில் தி ஹிந்துவிலிருந்து சார்லஸ் டிகன்ஸின் ஆலிவர் ட்விஸ்ட்வரை பாலசந்தரின் அபூர்வராகம் முதல் தி.ஜா வின் சக்தி வைத்தியம் வரை அப்பாவுடன் அளந்து கொண்டிருப்பார்கள். இந்த ஏழு வருடங்களாக அது உறங்கிக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது தெருநாய் ஒன்று சுருண்டு படுத்திருக்கும். அப்பா பார்த்தால் விரட்டி விடுவார். அப்பா யார் பேச்சையோ கேட்டு அம்மாவைத் தூற்றியதின் விளைவை அவரும் சேர்ந்தே அனுபவித்துகொண்டிருந்தார். அவருக்கு பரிந்து பேசுவது போலவும் வக்காளத்து வாங்குவது போலவும், அவரைக் காயப்படுத்தியவர்கள்தான் ஏராளம். அவரின் சகோதரிகள் உட்பட, அவர் அடிபட்ட நத்தியாக ஓட்டுக்குள் பதுங்கித்தான் வாழ்ந்தார். ஊர் வாய்க்கு அம்மா ருசியாக இருந்தாள்.
”பாவம் வடலூராரு! குடி கூத்தின்னு ஒரு பழக்கமில்லாத மனுஷன், அவருக்கு போயி இப்பிடி ஒரு பொண்டாட்டி கிடைச்சிருக்க வேணாம். வீட்டுலேயே கூத்தடிச்சாளாம்ல! பாக்கப் பூனை மாதிரி இருக்கா, என்ன வேலை செஞ்சிருக்கா பாரு. எனக்கெல்லாம் நெனைச்சாலே ஒடம்பு கூசுது. சே! எப்படித்தான் இவளுங்களால முடியுதோ?” தான் பத்தினி என்பதில் தனக்கோ தன்னைச் சார்ந்தவர்க்கோ சந்தேகம் வராமலிருக்க வேண்டிய யாரோ ஒருத்திக்கு அம்மா அளவுகோலானாள். ஒரு கோட்டின் பக்கத்தில் சிறிய கோடு வரைந்தால் மற்றது பெரியதுதானே.
“சும்மாயிருக்கா! நம்ம என்னத்த கண்டோம். என்ன இருந்தாலும் அந்தம்மாவும் பொட்டப் பொறப்புதான?” நான் பிறரைப் புறம் பேசாதவள் என்று போர்டு போட்டுக்கொண்டு ஊர்கதை பேசும் மற்றவள்.
“சும்மா கெட ! அவ நாத்தானாரே சொல்றா… கல்யாணத்துக்கு முன்னாடியே பெருசா காதல்லாம் பண்ணாளாமே, கிழிஞ்ச துணிய தச்சா நின்னுடுமா? ஒண்ணுமே நடக்காமதான் கட்டுன புருசனே பஞ்சாயத்து கூட்டுனாரா?” பஞ்சாயத்துக்கு இவர்கள் யாருமே அழைக்கப்படவில்லை என்பது போக அந்தப் பஞ்சாயத்து நடந்து பல வருடமாகியிருந்தது. நெடுநேரம் வாய் மூடியிருந்தால் வாய் நாறிவிடுமென்று, அம்மாவுக்கு நடத்தைகெட்டவள் அரிதாரத்தைப் பூசி நாறடித்தார்கள். நடத்தைகெட்டவளின் கணவனாக தன்னைத்தானே வரித்துக்கொண்டதால் அப்பாவும், எந்தக் காரணமும் இல்லாமல் மகனாக நானும் கூசினோம். இத்தனை வருடங்களில் நடந்த எத்தனையோ தீபாவளி, பொங்கல், அறுவடை, வீட்டு வெள்ளை காற்றில் கலைந்து போயிருக்க அம்மாவுக்கு நடந்த பஞ்சாயத்து அப்படியே நிறம் மாறாமலிருந்தது.
அம்மாவுக்கு மட்டும் எந்தச் சலனமுமில்லை. இது எதுவும் அவள் காதுக்கு எட்டுவதேயில்லை. அவளுக்கு மர்ஃபி ரேடியோ பாடலும் அடுக்களையும் தையல் மிஷினும் போதுமானதாக இருந்தது. இந்த உலகம் பற்றி கவலைப் படாமல், அவள் உலகை அழகாக வைத்திருந்தாள்.
பன்னிரண்டாவதில் நல்ல மதிப்பெண் எடுத்துவிட்டு ஓடிவந்து அம்மாவிடம் காட்டியதும், என் கன்னங்களைப் பிடித்துக்கொண்டு என் நெற்றியில் அவள் நெற்றியை முட்டி வெகுநேரம் அமர்ந்திருந்தாள். பின், “நீ நல்ல மார்க் மட்டும் எடுக்காம இருந்திருந்தா நடத்தகெட்டவ, புள்ளய எப்பிடி வளத்திருக்கா பாருன்னு ஊரு சொல்லியிருக்கும் இல்ல?” என்றாள். நான் அவள் கையைப் பிடித்து என் கன்னத்தில் வைத்துக்கொண்டு அவள் முந்தானையில் முகம் புதைத்தேன். என் அம்மாவின் வாசம் என் நாசி வழி நுழைந்து என் நெஞ்சுக்கூடெங்கும் நிறைந்தது. ”மேல சாமி இருக்கு. எல்லாம் அது பார்த்துக்கிட்டிருக்கும். அதுக்குத் தெரிஞ்சா போதும்” என்றேன். அம்மா கலகலவென சிரித்து என் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள். எவ்வளவு அழகான சிரிப்பு என் அம்மாவுடையது. அம்மா தன்னுள் புதைத்துக்கொண்ட பல விசயங்களில் இதுவும் ஒன்று. அவள் பலவரிசை தெரியாமல் செய்யும் புன்னகையை மட்டும் தான் நான் பார்த்திருக்கிறேன். அந்தச் சமயம் என் அம்மாவின் சிரிப்பை இழந்ததற்காக நான் யார் மேலேயோ கோவப்பட்டேன். 
அண்ணாமலையில் இஞ்ஜினீயரிங் படித்துக்கொண்டிருந்த சமயம். கும்பகோணத்து மாமா அரக்கப்பரக்க வந்து நின்றார். 
“என்ன மாமா?”
”அப்பாவுக்கு அட்டாக்னு சொல்றாங்க…” அவர் குரல கமறலாய் வந்தது.
நாங்கள் வீடு சேரும்போது வீடே கூட்டமும் கதறலுமாக இருந்தது. அப்பா மாலையும் கழுத்துமாக நடுவீட்டில் மூக்கில் பஞ்சடைத்து வாயில் வெற்றிலை திணித்துப் படுத்திருந்தார். என்னைப் பார்த்ததும் ஓலங்கள் இன்னும் பெரியதாக வெடித்தன. குடவாசல் அத்தை தொண்டை நரம்பு புடைக்க வீரிட்டாள். ”ஐய்யோ! நா பெத்த ராசா, நீ தவங்கெடந்து பெத்த புள்ள வந்திருக்கய்யா. கண்ண தொறந்து பாரேன்யா. எந்த கூச்சிக்காரியோ குத்துக்கல்லாட்டம் ஒக்காந்துருக்கா. நீ போயிட்டியேய்யா. யாந்தம்பி மானஸ்தனாச்சே. மருங்கியே உசிர உட்டுடுச்சே. ஐய்யோ! அம்மா அப்பாவின் தலைமாட்டில் முந்தானையை வாயிலடைத்து பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள். அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். என்னையறியாமல் என் கண்களில் நீர் கட்டியது. என் அப்பாவின் ஒரு சந்தேகம் என் அம்மாவை அவர் சாவில்கூட  துகிலுரிந்துகொண்டிருந்தது.
“எப்படி மாமா?”
“ஆஃபிஸ்ல இருக்கும்போது அட்டாக்காம். வாயுன்னு அசட்டையா இருந்து மோசம் பண்ணிட்டாரு.”
”துக்கத்த அடக்கி வக்கியாதயா ஒரு பாட்டம் அழுதுருய்யா” சேட்டி என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள். நான் அம்மா அருகில் சுருண்டுகொண்டேன்.
பதினாறாம் நாள் விடியற்காலை அம்மா குளித்துமுடித்து கைநிறைய கண்ணாடி வளையல்களும் மஞ்சள் குங்குமமும் தலை நிறைய பூவுமாக வந்தமர்ந்தாள். இத்தனை வருடத்தில் அம்மா சிங்காரித்துக்கொண்டு நான் பார்த்ததில்லை. நாலைந்து மூத்த கைம்பெண்கள் வீட்டில் நுழைந்து விசயம் புரிந்து அம்மா என்றலறினேன்.
“புள்ளைய வெளில கூட்டிட்டுபோங்கப்பா” மூத்த கிழவி சொல்ல என்னை ஆண்கள் சிலர் வெளியே இழுத்து வந்தனர். உள்ளே ஒப்பாரி தொடங்கியது. தென்னை மரத்தருகே கும்பகோணத்து மாமா முதுகு காட்டி நின்றிருந்தார். என்னைப் பார்த்ததும் முகம் கோணி உடல் குலுங்கியது. மெல்ல குரல் ஓலமாக மாறி, “ஒத்த புள்ள யாங்கூட பொறந்தது. அழகா பொறந்திருக்கு, அழகா பொறந்திருக்குன்னு தூக்கிக் கொஞ்சுனமே. அழகா பொறந்தது அது தப்பா” எங்களைச் சுற்றிக் கூட்டம் கூடியது. குடவாசல் அத்தை, சேட்டி என் எல்லோர் தலையும் தெரிந்தது. கும்பகோணத்து மாமி அவர் காலைக் கட்டிக்கொண்டு அழுதாள். மாமா தொடர்ந்து மாறிலடித்துக்கொண்டு கதறினார். ”அது அழகே அதுக்கு வெனையாயிடிச்சே. இப்ப அதையும் அலங்கோலப்படுத்தறாங்களே. காலம்பூரா பொணங்கொத்திக் கழுகா கொத்திக் கொத்தியே என் புள்ளயே செதச்சிட்டாளுங்களே. அன்னக்கே சொன்னவங்க தலைய வாங்கிட்டுப் போயிருப்பேன். பொறுண்ணே பொறுண்ணேன்னு என் புள்ள மறுங்கி கெடந்துதே. ஐயய்யோ மூளியா பாக்கவா நா வந்தேன்” தூண் போன்ற மனிதன் துவண்டு சரிந்ததைப் பார்த்து நான் திகைத்து நின்றேன்.
காரியம் முடிந்தது காக்காய் கூட்டம் பறந்து வீடு வெறிச்சோடிக் கிடந்தது.
அம்மா எப்போதும் அதிகாலையில் குளித்துவிட்டு தலையில் ஈரத்துண்டைச் சுற்றியபடி கொல்லையில் நின்று தூர தெரியும் வேதபுரீஸ்வரர் கோபுரத்தைப் பார்த்து கைகூப்பி அசையாமல் நிற்பாள். அப்போது முகம் முழுக்க சந்தோஷமாகத் தெரிவாள். இன்றும் அப்படித்தான் நின்றாள். முகம் மட்டும் சாந்தமாய் இருந்தது.
“ஏம்மா! ஈஸ்வரன அவ்ளோ புடிக்கும்னா, ஒரு எட்டு கோயிலுக்குப் போயிட்டு வரலாமே?” அம்மா விழி மலர அழகாகப் புன்னகைத்தாள். எனக்காக மட்டும் அம்மா தன் புன்னகையைச் சேர்த்து வைத்திருந்தாள். 
“இங்க வா…” என்றாள் புன்னகையூடே. நான் அவளருகில் சென்றேன். என்னைப் பக்கத்தில் நிறுத்திக்கொண்டு கைநீட்டி கோபுரத்தைக் காட்டினாள். எங்கள் வீட்டுத் தென்னங்கீற்றின் ஊடாக வேதபுரீஸ்வரர் கோபுரம் தெரிந்தது. பச்சை, நீலம், சிவப்பென்று வண்ணம் வண்ணமாகக் குழைத்து உடலெங்கும் தொங்கும் சிற்பங்களில் பூசிக்கொண்டு, பின்னால் வானம் இருண்டிருக்க காலைக் கதிரவனை தன் மேல் சுமந்து பளீரென மின்னியது. அம்மா என் மோவாயைப் பிடித்துத் திருப்பி, ” இந்த அழகு கிட்ட போய் நின்னா தெரியாது. காக்கா எச்சமும் பொக்கையுந்தான் தெரியும்” நான் அவள் கையைப் பிடித்தேன். ”கிட்ட நின்னு பாத்தா மட்டும் சுத்தமாவும் அழகாவும் இருக்குறது எது தெரியுமாம்மா?”
எனக்கு உதடு துடித்தது. விம்மலாய் வந்து படீரெனப் பெருங்குரலுடன்  வெடித்தது என் அழுகை. ”நீங்கம்மா… நீங்கம்மா” அவள் முன் மண்டியிட்டு அவள் வயிற்றில் முகம் புதைத்துக் கதறினேன். “நீங்கம்மா… எத்தனையோ வருஷத்து அழுகை பீரிட்டு வந்தது.