Thursday 20 August 2015

சங்கிலி

சங்கிலி
சி.மோ. சுந்தரம்
விஷயத்த கேட்டு கொஞ்சம் ஆடி போயிட்டேன். அந்த அதிகாலையில் பொன்னார் வீடு நெருங்க நெருங்க ஒரு மாதிரியாக இருந்தது எனக்கு. எதோ தொண்டை எல்லாம் அடைக்கிற மாதிரி. வீடே அமைதியா இருந்தது. ராமன் அண்ணன் தான் வந்து கதவ திறந்தாரு. உள்ளே ஒரு பெண்ணின் விசும்பலும் ஒரு ஆணின் அரற்றலும் கேட்டுச்சி. உள்ளே தனலட்சுமி அக்கா வாயில முந்தானைய தினிச்சிகிட்டு விசும்பிகிட்டு இருந்தது. என்னை பார்த்ததும் அழுகை கூடுச்சி. உள்ளே சங்கரன் தலையை குனிஞ்சமேனிக்கு உக்காந்து இருந்தான். தலையை அப்படியும் இப்படியும் ஆட்டிகிட்டு இருந்தான். தலையெல்லாம் மண்ணும் தும்புமா இருந்தது. கையை ஒரு கைலியால கட்டி இன்னொரு முனையை ஜன்னலில் கட்டி வச்சிருந்தாங்க. அவன் என்னமோ சொல்லி அரற்றிகிட்டு இருந்தான்.
தனலட்சுமி அக்கா வாய்விட்டு அழுதுச்சி,
"அப்பாவும் போயிட்டாரு, இனி நம்ம நாதியத்து போயிடுவோம்னு சித்தம் கலங்கிட்டானே என் தம்பி ...அய்யோ.."
பெருங்குரலில் தனலட்சுமி அழுதது.
தனலட்சுமி அக்காவோட கணவர் பொன்னார் அதட்டினார், "த! சும்மா ஒப்பாரி வச்சிக்கிட்டு. மச்சான் எதோ அதிர்ச்சில இருக்காபுல. எல்லாம் சரியாகிடும்"
தனலட்சுமி அக்காவோட பொண்ணு சித்ரா ஓராம உக்காந்து இருந்தது.
"ஏம்மா! நீ காலேஜ் கிளம்புல?'' என்றேன். அந்த பிள்ளை ஆறரை மணிக்கே தயாராகி ரோட்டுக்கு போய்டும் காலேஜ் பஸ் பிடிக்க.
கொஞ்சம் பிதிறி போய் இருந்தது, "இல்லை மாமா"என்றது. வீடே ரெண்டு பட்டு போய் கிடந்தது.
"என்னதான் ஆச்சு ?" இன்னும் தெளிவே இல்லாம கேட்டேன்.
தனலட்சுமி அக்கா சொன்னது, "நேத்து  ராத்திரி  மதில் சுவது மேல ஏறி நின்னுகிட்டு கத்தி இருக்கான். அக்கபக்கம் ஆளுங்க வந்து சொன்னாங்க. போலீஸ் வேற போன் போட்டுட்டாங்க. அப்பறம் நாங்க போயி கூட்டியாந்தோம்."
மூக்கை உறிஞ்சிவிட்டு தொடர்ந்தாள், "இங்க கூட்டியாந்து வச்சிக்கலாம்னு பார்த்தா... வயசு புள்ள வூட்ல இருக்கு" குரல் உடைந்து அழுதாள், "யான் தம்பி இப்பிடி சித்தம் கலங்கி போவான்னு நான் நினைக்கலியே... அந்த சிரிக்கிய என்னைக்கி கட்டிகிட்டு வந்தானோ அன்னைக்கே அவனுக்கு வாழ்க்க சீர் கொலைஞ்சி போச்சு"
ராமன் அண்ணன் என்னை வெளியே வரும்படி சைகை செய்தார். நானும் வெளியே போக அவர் தொண்டையை செருமி கொண்டு ஆரம்பித்தார், " எப்பிடி நாடகம் நடிக்கிதுங்க பாரு... இதுங்க மட்டும் அவனை நாதி இல்லாம விட்டில்லாம போனா, அவன் இப்பிடியா பைத்தியம் புடிச்சி நிப்பான். ச்சே ... மனசு ஒரு மாதிரி பண்ணுதுப்பா. சின்ன வயசுல இருந்து பார்த்த பய ..இப்பிடி சித்தம் கலங்கி நிப்பான்னு நினைக்கலை.. ஆயி அப்பன் இருந்த வரைக்கும் தாங்கு தாங்குன்னு தாங்கினாங்க. கட்டுனவளும் வுட்டுடுட்டு ஓடிட்டா. இப்போ ஆயி அப்பனும் இல்லைன்னு தெரிஞ்சதும் கலங்கி போய்ட்டான்."
உண்மைதான் இப்படி ஓரத்தனோட எந்த பெண்ணும் குடித்தனம் பண்ணமாட்டா. நல்ல படிப்பு சங்கரனுக்கு, ஆனா வேலைக்கு போனதில்லை. அம்மா செல்லம். ஒரே பையன்னு பொத்தி பொத்தி வச்சிட்டாங்க. அப்பா அம்மா ரெண்டு பெரும் கவர்மெண்ட்டு வேலை செஞ்சவங்க. பென்ஷன் வந்துச்சி. சொந்த வீடு வாசல். புள்ளைய வேலைவெட்டிக்கு போன்னு சொல்லல.  ஒத்த புள்ளைன்னு பெரியம்மாவும் பெரியாப்பாவும் அப்படி செல்லம் குடுத்தாங்க. ஒரு வயசுக்கு மேல அவன் வேலை வெட்டி இல்லாம இருக்குறத அவங்களே சகிச்சிக்கல .. "ஒரு கல்யாணம் பண்ணினா  சரியா பூடும்"னு தான் பாலாவ கல்யாணம் பண்ணி வச்சாங்க. பாலாவுக்கும் சங்கரனுக்கும் ஒரு கொழந்த பொறந்துச்சி. ஆனா சங்கரன் வேலைக்கி எல்லாம் போற மாதிரி தெரியல. பாலா எவ்ளோ சொல்லி பாத்திச்சி. எப்பவும் சண்ட நடக்கும். பெரியம்மாவும் பெரியப்பாவும் சங்கரன் பக்கம் சேந்துக்குவாங்க, பத்தாததுக்கு தனலட்சுமி அக்காவ வேற கூட்டிடுவாங்க. தனலட்சுமி அக்கா பக்கத்து தெருல தான் இருந்தது. தனலட்சுமி அக்காவோட பேராச எல்லாருக்குமே தெரிஞ்சது தான். பாலாவோட நகை வரைக்கும் அதுகிட்ட தான் இருந்தது, "நான் லாக்கர்ல வக்கிறேன்.. இங்க தொறந்த வூட்லையா போட்டு வைப்ப?"ன்னு சொல்லி வாங்கிட்டு போச்சு அவ்ளோதான். ஏதாவது விசேஷம்னா தனலட்சுமி அக்கா பாலாவோட நகைய போட்டுக்கிட்டு வலம் வரும். எந்த பொண்ணு தான் பொறுத்துக்குவா?  "என் நகை எனக்கு வேணும்"னு கேட்ட பொண்ண அம்மா வூட்டுக்கு அனுப்பிட்டாங்க. பஞ்சாயத்து அப்பப்போ நடந்துச்சி. பாலாவோட வீட்ல அத அனுப்பமாட்டாங்கன்னு சொல்லிட்டாங்க. அங்க போயி வேலைக்கு போன பொண்ணுக்கு யாரை புடிச்சி போவ, அது அப்படியே போய்டுச்சி. புள்ளை ஒத்தையா நின்னுட்டானேன்னு இன்னும் சவரட்ச்சனா செஞ்சாங்க சங்கரனுக்கு.
பெரியம்மா சாஞ்சி, எடுத்து போட்டப்பதான் சங்கரன் வேற ஆளா தெரிஞ்சான். அப்பிடி அழுதான். சங்கரன் ரொம்ப பயிந்து போய்ட்டான்.  
பெரியப்பாவுக்கு முன்னாடியே கைக்கால் உழுந்துதான் கெடந்தாரு. பெரியப்பாவ சங்கரன் தான் பாத்துகிட்டான். பெரியம்மாவோட பேமிலி பென்ஷன் பெரியப்பாவுக்கு வந்துச்சி அவரும் பென்ஷனர் தான். காசுக்கு மொடை இல்லாம இருந்தது.
"ஏதாவது வேலைக்கு போவனும்ண்ண" என்பான், பொறவு அவனே யோசிச்சிட்டு "அப்பாவ யாரு பாத்துக்குவா?"ன்னுட்டு விடுவிடுன்னு நடைய கட்டிடுவான். பெரியாப்பவும் போயிட்டாரு. அன்னைக்கி சங்கரன் வானத்த பாத்து அழுதுகிட்டு நின்னான். பெருசா கத்தல. வெறும் விசும்பல், ஆனா பாத்தவங்கள உலுக்கிடும் விசும்பல். எழவு வூட்ல அவனுக்கு தான் சனம் அழுதுச்சி. சங்கரன எனக்கு பெருசா பிடிக்காது, ஆனா அன்னைக்கி எனக்கே லேசா கண்ணு கலங்கிடுச்சி. ரொம்ப பாவமா தெரிஞ்சான். அப்பன் ஆயி பண்ணின தப்பு. பையனை பொத்தி பொத்தி வளர்த்து 34 வயசுல கொழந்த மாதிரி தனியா இந்த ஒலகத்த எதிர் கொள்ள முடியாம கலங்கி போய் நின்னான். சாவு முடிஞ்சி மூனாம் நாலு இப்படி கொலைஞ்சி நிப்பான்னு நெனைக்கல.
ராமன் அண்ணன் தான் பேச்சை ஆரம்பிச்சாரு, "ஏம்ப்பா! என்ன தான் பண்றத.. டாக்டர் கீக்ட்டர் கிட்டு கூட்டி போவோமா? "
அதுக்குள்ள அக்கம் பக்கமுள்ள ஆளுங்களும் சொந்தக்காரங்களும் வர ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்சம் கூச்சல் அதிகமாவ, சங்கரன் கத்த ஆரம்பிச்சிட்டான். கைலியால கட்டியிருந்து கையை அவுக்க முயற்சி பண்ணினான். ஆளுங்க புடிக்க இன்னும் முண்ட ஆரம்பிச்சிட்டான். சுத்தி இருந்தவங்க அவன மொத்தமா பைத்தியக்காரனா ஆக்கிகிட்டு இருந்தாங்க.
"அவுத்து வுடு நான் போறேன், அவுத்து வுடு நான் போறேன்" அவனோட போராட்டத்துக்கு பதில் வழக்கம் போல அடியாதான் விழுந்தது.
"அண்ண வேணாம்ண்ண" என் தடைகள மீறி அவனுக்கு அடி விழுந்தது.
"விடுங்க தம்பி ! நாலு போட்டா தான் அடங்குவான். நேத்தி மதில் சொவுத்துல துணியில்லாம நின்னிருக்கான். என் வூட்டுல வயசு பொண்ணுங்க இருக்கு என் பொஞ்சாதி இருக்கு. திமிர் கொண்ட நாயீ"
எனக்கு கத்த வேணும்னு தோணுச்சி.
"டேய் ! தெரிஞ்சாடா செஞ்சான் அவன்" எனக்குள்ளேயே கத்தினேன். வெளியே கத்த முடியாது. கத்தினால் என்னையும் சங்கரனாக்க இவங்களுக்கு அதிக நேரம் தேவைப்படாது. நானும் சம்சாரியின் அந்தஸ்த்தோட இருந்தாவனும்.
"அண்ண ! பொறுமண்ண. அவன் சொயநெனைவு இல்லாம இருக்கான். கொழந்த மாதிரி. இருங்கண்ண"
சங்கரனின் முழு நிர்வாணத்த பார்த்த இன்னொரு பொண்டாட்டியின் புருஷன் கத்தினாரு, "கொண்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரில சேருங்கய்யா .. ஊருக்குள்ள வச்சிக்கிட்டு….  இவனுத பாக்கத்தான் நாங்க இருக்கோமா ?"
ஊரு பிரசிடென்ட்டு வந்துட்டாரு. வழக்கமான விசாரிப்புங்களுக்கு பொறவு, "ந்தா பாருங்க ! அவன் புத்தி பேதலிச்சவன், சொயநெனைவு இல்லாம செய்றான், எல்லாம் சரிதான்... ஆனா ஒன்னு கெடக்க ஒன்னு செஞ்சிட்டானா அப்பறம் வான்னா வராது
அக்கா தந்த காப்பிய வாங்கி குடிச்சிட்டு தொடர்ந்தாரு, "வீட்டோட வச்சி பாத்துகிறதா இருந்தா... யோக்கியமா கட்டி வையுங்க. வைத்தியம் பாருங்க. வெளியில யாரும் தொல்லைக்கி ஆளாவ கூடாது. பாத்துக்குங்க"
தனலட்சுமி அக்கா விக்கித்து நின்றாள் , "அய்யா தப்பா நெனைக்க கூடாதுங்க"
"சொல்லும்மா"
"நானும் வயசு பொண்ண வீட்ல வச்சிருக்கேன். ஒன்னுகெடக்க ஒன்னு ஆச்சின்னா ..."
பொன்னார் செருமினார்," இத சொல்ல பயமா தான் இருக்கு. அவஞ்சொத்து மட்டும் வேணும், சித்தம் கொலஞ்சவன பாக்க துப்பில்லன்னு சொல்லும் சனம். எனக்கு ஒரு பொண்ணு இருக்கு. இப்பிடி இவன வச்சிக்கிட்டு நாளைக்கி கல்யாணம் காட்சின்னா எவன் வருவான் பொண்ணெடுக்க? இதெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு ஒரு முடிவெடுங்க... உங்க வீட்ல இருந்தா என்ன பண்ணுவீங்களோ, அத சொல்லுங்க"  
பிரசிடென்ட்டு தோரணையா எல்லாரையும் பாத்தாரு, "பொன்னாரு சொல்றதும் சரிதான். புத்தி பேதலிச்சவன் என்னைக்கி சொகமாயிருக்கான்? சரி ! ஒரு நல்ல ஆஸ்பத்திரில சேத்து உடுங்க"
ராமன் அண்ண பேச்ச ஆரம்பிச்சாரு, "எந்த ஆஸ்பத்திரிலேயும் காலா காலத்துக்கு வச்சிக்க மாட்டான். அவனுக்கு என்ன சொத்தா கொற? அவன் ஆயி அப்பன் அவ்ளோ சேத்து வச்சிருக்காங்க. கவர்மெண்ட்டு ஆஸ்பத்திரின்னு கொண்டு போவாம, நல்ல தனியார் ஆஸ்பத்திரில வச்சி பாக்க சொல்லுங்க"  
என் பங்குக்கு நான் சொன்னே, "இன்னைக்கி தேதில இது ஒன்னும் தீர்க்க முடியாத நோவு இல்ல. காசு பணம் கட்டி பாத்தம்னா, சரியா போய்டும். இன்னும் இப்பிடி சங்கிலி போட்டு எல்லாம் கட்டிவக்கிறது மொற இல்ல"
பொன்னாரு என்னை வெறித்து பார்த்தாரு, "பட்டாளத்தாரு தம்பி! ஒங்களுக்கும் பங்காளி பாசம் இருக்கிறது எல்லாம் உண்மதான்... யான் உங்க பங்காளி மக்கள நீங்களே வச்சி பாருங்களேன்"
ப்ரெசிடெண்ட்டு தொண்டையை செருமிவிட்டு, "சரி பொன்னாரு! சங்கரனுக்கு சேரவேண்டிய சொத்த முழு மனசா பட்டாளத்தாருக்கு குடுங்க. பட்டாளத்தாரு பாத்துக்க போறாரு... என்ன பட்டாளத்தாரே நாஞ்சொல்றது?" என்றார் என்னை பார்த்து.
பொன்னாரு அவசரமா இடைமறித்து, "அது தானய்யா நானும் சொல்றேன், சொத்த ஆள பாத்தியத எங்களுக்கு உண்டுன்னா, எம்மச்சான பாத்துக்குற கடமையும் இருக்கு. நாங்க பாத்துக்குறோம் ... லட்சமில்ல கோடி ரூவா அவட்டுமே."
ராமன் அண்ண என்னை பாத்து நக்கலா சிரிச்சாப்புல. நானும் சிரிச்சேன் ஆனா விரக்தி தான் மண்டி கெடந்தது.
பேச்சு வார்த்த ரொம்ப நேரம் நடந்தது. இடைல அப்பப்போ முண்டுன சங்கரன இளைஞர் நற்பணி மன்றம் அமுக்கியது. கடைசியா தனியார் ஆஸ்பத்திரிக்கி போனை போட்டு வண்டி வந்தது. சங்கரனுக்கு ஊசி போட்டு கொண்டு போனாங்க. கூடவே நானு, பொன்னாரு, தனலட்சுமி அக்கா இன்னும் ரெண்டு மூனு இளந்தாடி பசங்க போனோம்.   
ஆஸ்பத்திரில டாக்டர் தெளிவா சொல்லிட்டாரு, சங்கரனுக்கு ட்ரீட்மன்ட் மட்டும் தான் தரமுடியும். ஒரு மாசத்துக்கு அட்மிட் பண்ணி வைத்தியம் பாக்கலாம்னு. ஒரு மாசம் சங்கரனுக்கு செலவே ஏகமாச்சு. கொஞ்சம் தேவலாம் போல இருந்தான் சங்கரன். ஆனா பேச்சு ரொம்ப கொழரிச்சி. அஸ்பத்திரிலேயே தனலட்சுமி அக்கா தனியார் காப்பகத்த பத்தி விசாரிச்சு வச்சிருந்தது. சங்கரன சேக்கணும்னு.
"வருசத்திற்கு ஒரு லட்சம் கட்டணுமாம். வேணும்ன்குற போது போய் பாத்துக்கலாமாம். எல்லா சவரட்ச்சனையும் செய்வாங்களாம்" தனலட்சுமி அக்கா எங்கேயோ பாத்துகிட்டு சொன்னுச்சி. நான் வூட்டுக்குள்ள பாத்தேன், சங்கரன் கட்டிலில் காலை நீட்டி போட்டுக்கிட்டு தலையை ஆட்டிகிட்டு இருந்தான். ஒரு கயிறு மணிக்கட்டில் கட்டி இருந்தது, சங்கிலி கட்டிலோடு இணைக்கப்பட்டிருந்தது.
"ஏங்க்கா இன்னும் கட்டி வச்சிருக்கீங்க?"
"லூசுப்பய எப்போ எதுவும் செய்வான்னு தெரிய மாட்டேன்து."
நான் தனலட்சுமி அக்காவ பார்த்தேன். குற்ற உணர்ச்சியோட தலைய தொங்க போட்டுக்கிட்டு சொல்லிச்சி, "சித்ரா ரொம்ப பயப்படுதுப்பா"
நான் கிளம்பினேன், அக்கா நிறுத்தி சொல்லிச்சி, "நாளைக்கி கொண்டு போயி உடுலாம்னு இருக்கோம். இங்க எதுவும் நல்ல ஹோம் இல்ல. அதான் சென்னைல பாத்திருக்கோம். காசுக்கு தான்."
"சரிக்கா " நான் கிளம்பினேன்.
ரெண்டு நாள் கழிச்சி பொன்னார் வீட்ல ஒரே களேபரம். நான் போனேன் ஊரே கூடி கிடந்தது. தனலட்சுமி அக்கா பெருங்குரலில் அழுது கொண்டிருந்தது. பக்கத்தில் ராமன் அண்ண நின்னுகிட்டு இருந்தார்.
கேட்டேன், "என்னண்ண ஆச்சு?"
"கூட்டிகிட்டு போவும் போது குதிச்சி ஓடிட்டானாம். தேடுனாங்கலாம் கெடைக்கலையாம். போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுத்துட்டு வந்திருக்காங்க" ராமன் அண்ணணோட கொரல்ல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல. நான் சட்டென்று திரும்பி வீட்டுக்கு வந்துட்டேன்.
மெட்ராசுக்கு ஒரு நாலு மாசம் கழிச்சி பொண்டாட்டி புள்ளைங்க கூட போயிருந்தோம். சென்ட்ரல் ரயிலடி பக்கம் ஒருத்தன் ரொம்ப தாடி, முடி சடை மண்டி கிடந்தான். பழைய காக்கி பேண்ட்டு போட்டிருந்தான். மேல் சட்டை இல்ல.
நான் எங்க வீட்ல அவளை நிக்க சொல்லிட்டு போய் ஒரு இட்டிலி பொட்டலம் வாங்கிகிட்டு வந்து குடுத்தேன், வாங்கிகிட்டான்.
திரும்பி அவனை பாத்துகிட்டே வந்தேன். என் வீட்டுல கேட்டாப்புல, "என்னங்க அப்பிடி பாக்குறீங்க ?"
"நம்ம சங்கரன் சாடைல இருக்கான் இல்ல?"
"ச்சே.. இல்லீங்க. மாமா நல்லா செவப்பா இருப்பாங்க, அதில்லாம அவங்க போகும் போது லுங்கி இல்ல கட்டிக்கிட்டு போனாங்க. அவங்களா இருக்காது" எனக்கு கொஞ்சம் லேசாக கண்கலங்கியது. திரும்பி திரும்பி பாத்துகிட்டே நடந்தேன். உண்மையில் நானும் அவனை வச்சு சோறு போட தயங்கிட்டேன். யாரையும் குத்தம் சொல்ல நான் அருகத இல்லாம இருந்தேன். எல்லார போலையும் நானும் வேடிக்கைத்தான் பாத்தேன். சங்கிலி சங்கரனுக்கு மட்டுமில்ல எனக்கு இணைப்பட்டிருந்துச்சி.
 இது சங்கரனா இருக்கனும்னும் நெனச்சேன் இருக்க கூடாதுன்னும் நெனச்சேன்.

கூவம் சி.மோ.சுந்தரம்


சாலிகிராமத்தில் "சார் " என்று எவன் வந்து என் முன் நின்னாலும் அவன் சினிமாக்காரனா தான் இருப்பான்.
"ரெண்டு படம் வொர்க் பண்ணினேன் சார், யாராவது தெரிஞ்சா சேத்துவிடுங்க. நீங்க படம் பண்றீங்களா சார் ?"
பொதுவாக நம்பரை வாங்கி சேமித்து கொண்டு கையில் ஏதாவது கொடுத்து அனுப்பிவிடுவேன். கண் முழுக்க கனவோடும் வயிறு முழுக்க பசியோடும் சுத்தும் விந்தை மனிதர்கள் நிறைந்த இடம்.
பிரசாத் லேப் எதிரில் இருக்கும் டீக்கடையில் நின்றால் போதும் ஒரு பத்து கிழவிகளாவது வந்து கை நீட்டிவிடுவார்கள்.  முடிந்தால் டீ அல்லது சாப்பாடு வாங்கி தருவேன். அவள் மட்டும் அங்கேயே தான் குந்தி இருப்பாள். பார்வை நிலை குத்தி இருக்கும். எப்போதாவது  பார்ப்பாள். அவள் விழி பார்வைகளை சந்திக்க முடிந்ததில்லை. பிரசாத் லேப் வாசலில் டீக்குடிக்க வரும் அனைவரிடமும் கை ஏந்துவாள். நடக்க இயலாத தள்ளாடும் தேகம். தலை சிக்கும் அழுக்கும் மண்டி கிடக்கும். வருடங்கள் வரிவரியாக முகமெங்கும். பசி கண்ணில் தெரியும். "சாப்டுறியா ?" என்று கேட்டால் ஆவலுடன் தலையாட்டுவாள்.  பிள்ளைகள் விட்டிருக்க கூடும். புத்தி பேதலித்திருக்க  கூடும். வழி தவறி திணறி இருக்க கூடும். இத்தனை கூடும்களும் என் அனுமானம்தான்.
கையிலிருக்கும் ஒரு அழுக்கு மூட்டையில் துணிகளையும் கொஞ்சம் பாத்திரங்களையும் நுழுந்தி வைத்திருப்பாள். பொக்கிஷம் போல மார்போடு அணைத்தபடி அமர்ந்திருப்பாள்.
அன்று வழக்கம் போல மரத்தடி கதை விவாதம் ஒன்றின் இடையே ஒரு வெள்ளைக்காரர் கழுத்தில் கேமராவை மாலையிட்டு கொண்டு வந்து, "எக்ஸ்க்யூஸ் மீ" என்று எங்கள் கதையில் மூக்கை நுழைத்து சீப்பாக லாட்ஜ் கிடைக்குமா என்று ஆங்கிலத்தில் கேட்டார். கதை விவாதங்களுக்கு நாங்கள் போகும் அறைகள் எல்லாம் 1000 ரூபாய்க்கு குறையாதவை நாங்கள் சற்று யோசிக்கும் முன் அவளிடமிருந்து தெளிவாய் வந்து வார்த்தைகள் விழுந்தது, "கோ ஸ்ட்ரெயிட் அண்ட் டேக் லெப்ட். யூ வில் ஃபைண்ட்" என்று ஒரு லாட்ஜின் பெயரை சொல்லிவிட்டு அவரிடம் கை நீட்டினாள். அவர் என்ன நினைத்தாரோ விடுவிடுவென போய்விட்டார். நீட்டிய கையில் நான் பத்து ரூபாயை வைத்தேன். சற்று நேரம் அந்த நோட்டையே  பார்த்துவிட்டு மடியில் சொருகிக்கொண்டாள்
அவளின் ஆங்கிலம் சுத்தமாகவும் தெளிவாகவும் இருந்தது. டீக்கடை பாயிடம் காசுக்கொடுக்கும் போது கேட்டேன் , "யாரு பாய் .. இந்த பாட்டி ?"
"தெரில சார் ... இந்த மாதிரி நெறைய சுத்துதுங்கோ. சின்ன வயசு பசங்க கூட பைத்தியம் புடிச்சி சுத்துவானுங்கோ. கேட்டீங்கன்னு வச்சிகுங்க, நல்லா ஓடுற படத்த சொல்லி கத என்னுதுதான் சுட்டுடானுங்கன்னு சொல்வானுங்க. எல்லாம் சினிமா சினிமான்னு இங்க வந்து பாழா போகுதுங்கோ. இந்த கெழவிங்க, பணக்கார சினிமாக்காரங்க சுத்துற இடம் காசு கெடைக்கும்னு இங்கன சுத்துதுங்க... " அவர் அடுத்த கிராக்கியிடம் போய்விட்டார், எனக்கு மட்டும் தலையில் ஆணி அடித்தாற்போல் நின்றேன். எனக்கும் இரண்டு பிள்ளைகள் மனைவி எல்லாம் வீட்டில் இருக்கிறார்கள்
இரண்டொரு வாரம் கழித்து அவளை மீண்டும் அங்கே பார்த்தேன். கிங்க்ஸை உதட்டுக்கு கொடுத்தபடி அவளுக்கு பிஸ்கட் பாக்கெட் வாங்க திரும்பும் போது "என்ன பரிமளம், சாப்டியா?" அவளுக்கு ஒத்த வயதுள்ள ஒரு வயோதிகர் அவளிடம் கேட்டார். ஈனமாக இல்லை என்று தலையாட்டினாள். பெரியவர் சோத்து பொட்டலம் தண்ணீர் பாக்கெட் வாங்கி கொடுத்துவிட்டு போனார்
எனக்கு ஆர்வம் அவரை பின் தொடர்ந்தேன், "ஐயா ! ஒரு நிமிஷங்க!". நின்று திரும்பினார். என் கையில் புகையும் சிகரெட்டை பார்த்தார். நான் அதை கீழே போட போக, "இல்ல ! புடிப்பா... எனக்கும் குடேன்
 நான் என் சிகரெட் பாக்கெட்டை எடுத்து நீட்ட ஒரு சிகரெட்டை உருவி கொண்டார். இடுப்பில் சொருகி இருந்த தீப்பெட்டியால் பத்த வைத்து கொண்டார், "கிங்க்ஸா?" என்றவர், "அப்போ எல்லாம் வில்ஸ் தான்… இல்லேன்னா 555 புடிப்பாங்க சினிமாக்காரங்க..எப்பயாவது கெடைக்காத ஐட்டம் எதுவும் வாங்கிக்குடுத்தா கேப்பியாகி ஒரு சிகரெட் குடுப்பாங்க... அன்னைக்கி மனுசனுங்க வாழ்க்கையே ராஜ வாழ்க்கை. ரசிச்சி வாழ்ந்தாங்க…” என்றவர் புகையை இழுத்துவிட்டு  “இன்னாப்பா ... கூப்ட ?" என்றார்
"
அந்த வயசானம்மா யாரு ?” பெரியவர் ஆழமாய் என்னை பார்த்தார்
பேரு சொல்லி கூபிடுறீங்க… அதான் "  தயங்கி தான் கேட்டேன்.
"ஒரு காலத்துல அவளுக்கு செம டிமாண்ட்ப்பா. கோடம்பாக்கதாண்ட வூடு வச்சி தொழில் பண்ணிகினு இருந்தா...” பெரியவர் என்னை பார்த்தபடி தொடர்ந்தார்.
"சினிமாக்காரி அப்படின்னுதான் ஊருக்கு தெரியும்.. ஊரு கும்பகோணம் பக்கம். நாட்டியமெல்லாம் கத்துகினு..மெட்ராசுக்கு சினிமா நடிக்க வந்துட்டா...சொம்மா குத்து வெளக்காட்டும் இருப்பா ..நெகுநெகுன்னு.." எங்கோ தொலைவுக்கு போய்விட்டது போலிருந்தார்.
"நான் அப்போ கை ரிக்ஸா இசுப்பேன்.. கோடம்பாக்கத்தாண்ட தான். அப்போ எல்லாம் பாய்ங்க தான் குதிர வண்டி வச்சிருந்தாங்க. டேசனாண்ட இவ ஜாக. வூடு எடுத்து தங்கிகினு இருந்தா. ரெண்டு மூணு படத்துல பின்னேடி நிப்பா... அப்பியும் தனியா தெரிவா, அவ்ளோ அழகு". அவர் மெல்ல நகர்ந்து நடைபாதையில் அமர நானும் அவர் பக்கத்தில் அமர்ந்தேன்.
"பெருசா சினிமா இவள காப்பாத்துல. பட்டணத்துக்கு ஓடியாந்து சினிமாவுல சேந்துட்டா ஊர்ல தேவடியான்னு தான் சொல்வாங்க. திரும்பி ஊருக்கெல்லாம் போவ முடில போலருக்கு... அப்படியே இங்கேயே தங்கிட்டா..நானே நெறையா வாட்டி சவாரிய இவ வூட்டு வாசல்ல எறக்கி உட்டிருக்கேன். அப்போ எல்லாம் பாக்க சொல்ல ஒரு வாட்டி இவளாண்ட பூடனும்ன்னு நெனைப்பேன், அப்பிடி இருப்பா.  நானெல்லாம் பார்த்து ரசிச்சதோட செரி.. செம காஸ்ட்லி மால்.. இப்போ போய் அவ பேரை கேட்டா கூட, ஆக்ட்ரஸ் பரிமளம்ன்னு தான் சொல்லுவா.. எல்லா மொழியும் தெரியும், தமிழ், இந்தி, தெலுங்கு, இங்க்லீசுன்னு. வேலைக்கு வரவன் கூட புரியாத மொழிய வச்சிகினு குப்பக் கொட்டிடுறான். ஆனா இதுக்கு வரவனுங்களுக்கு அவன் மொழில பேசுனா தான் சோக்கு போலருக்கு" "
என்னிடம் இன்னொரு சிகரெட்டுக்கு கையை நீட்டினார். நான் தந்த சிகரட்டை பத்த வைத்துக்கொண்டார்.
"ஐயா ! நெறைய சிகரெட் குடிபீங்களோ?"
லேசாக சிரித்தார், "இனிமேயா எனக்கு நோவு வந்து சாவ போறேன்...? குடும்பம் குடுத்தனம்ன்னு இருந்தா யோசிக்கலாம்"
"ஏன்ய்யா, குடும்பம் ?"
விரக்தியாக சிரித்தார், "எவளும் அம்புடல ..அதான்"
"தனியாவா இருக்கீங்க ?" என்ற என் கேள்விக்கு பதில் சொல்லாமல் புகையை இழுத்தார்.
உடல் அதிர இருமிவிட்டு, "ஒத்தையா தான் மெட்ராசுக்கு வந்தேன். ஒத்தையாவே நின்னுட்டேன்"
"நீங்களும் சினிமாவுக்கு தான் வந்தீங்களா ?"
"ச்சே ச்சே ... சினிமா புடிக்கும். கொத்தாவல் சாவடியாண்டதான் வண்டி இசுத்துகினு இருந்தேன். கோடம்ப்பாக்கதுல சினிமாக்காரங்கள பாக்கலாம், அதனால இங்க வந்து இருந்துகிட்டேன். எம்சியார் எல்லாம் நேர்ல பாத்திருக்கேன்"  
"அந்தம்மாவ எப்படி தெரியும்?"
" அவள ஒரு வாட்டி முருகன் கோயில் வாசலாண்ட பாத்தேன்.. வெளியில நின்னு தலைக்கி மேல கைய தூக்கி கும்பிட்டுகினு நின்னா. உள்ள போவல .. கூசுச்சி போல... இல்ல உள்ள போனா எவனாவது வெரட்டுவான்னு பயிந்தா போலருக்கு அவளை காலம் கடந்து போய் இப்போது பார்பதுபோல இன்பமாக சிரித்தார், “ இழுத்து போத்திகினு தான் வெளிய வருவா. அன்னிக்கி அவள பாக்க சொல்லோ, இவள மாதிரி ஒரத்திய கட்டிகுனும்ன்னு நெனச்சேன். ஊர்ல தொழில் பண்றவ எல்லாம் புல்லா மேக்அப் போட்டுகினு தான் வருவாளுங்க. இவ சினிமாகாரி வேற, ஆனா மஞ்ச குளிச்சி சும்மா தலைய முடிஞ்சிகினு வருவா. பாக்க சொல்லோ கண்ணு நெறவா இருக்கும்
"லவ் பண்ணுனீங்களா?" என்றேன். என்னையே பார்த்தபடி இருந்தவர், "இவளாண்ட போய்டனும்ன்னு துட்டு எல்லாம் சேத்து வச்சேன்" என்றவர் ஒரு பெருமூச்சுடன், "அப்போ எல்லாம் அவ எட்டாக்கனி.. பெரியா ஆளுங்கதான் வந்து போவாங்க" லேசாக ஆடிப்போனது போல் கைகளை நடைபாதையில் ஊன்றியபடி தலையை கவிழ்ந்திருந்தார். லேசாக வந்தது அவர் குரல், "சிறுக்கி .. அப்பவே எவனையாவது சரிக்கட்டி எதுனா வாங்கி வச்சிட்டு இருந்தா இப்பிடி ஏன் நிக்கணும். பொழைக்க தெரியாதவ. சூது வாது இல்ல” கொஞ்சம் உடைந்திருந்தார், "ஒரு முப்பத்தஞ்சி வயசிருக்கும் அப்போ அவளுக்கு... நான் பாத்து அப்பிடி அவ நின்னு நான் பாத்ததில்ல... நைட்டு சந்துக்கா யாரோ நிக்கிறா மாதிரி இருந்துச்சி... ஒரு ஆர்வம் ..ஐட்டம்னு தெரியும். வேலைக்காவுதான்னு எட்டி பாத்தேன், பக்குன்னு ஆகிடுச்சி. பரிமளந்தான் நின்னுகிட்டு இருந்தா. சனியன் புடிச்ச ஒடம்பு ... வயசாவோ வயசாவோ சரிஞ்சி பூடுது. அவ பாவம் இன்னா பண்ணுவா. அவளுக்கு தெரிஞ்சிது அந்த தொழில் தான். ஊட்டாண்ட யாரும் வர்ல போலருக்கு. அங்க வந்து நின்னுகினு இருந்தா. அதுக்கூட பரவாயில்ல. மூஞ்சி பூரா பவ்டர் பூசிகினு... லிப்ஸ்டிக் எல்லாம் போட்டுகினு... சாதாரண லோக்கல் ஐட்டம் மாதிரி.. ச்சே பரிமளம் கோயில் செல மாதிரி.. அவ போய்..." சட்டென நிறுத்திவிட்டார். தொடர்ந்தார், " நான் பொறம்போக்கு ... கையாலாவதவன்... வாடி வூட்டாண்டன்னு கூப்ட தெரில. காச எடுத்து நீட்டிட்டேன்." மெல்ல மேல் துண்டால் முகத்தை துடைத்து கொண்டார்.
"எங்க போவலாம்னு கேட்டா ...ச்சீன்னு ஆயிடுச்சி.. இல்ல சும்மா வச்சிக்கன்னு சொன்னேன். எனக்கு பிச்ச வேணாம்னு சொல்லிட்டு காச திருப்பி குடுத்துட்டு போய்ட்டா"
"நீங்க சொல்லி இருக்க வேண்டியது தான.. லவ் பண்றீங்கன்னு"என்றேன்.
"தைரியம் இல்லாம போச்சு. அவள ரொம்ப ஒசக்க வச்சி பாத்துட்டேன். நானெல்லாம் சரிப்பட மாட்டேன்னு நானே முடிவு பண்ணிகினு வுட்டுட்டேன்"
"அவங்க தொழில் பண்றாங்கன்னு தெரியும் தானே .. அப்பறம் என்ன ஒசக்க ?"
அவர் சட்டென தீப்பட்டது போல என்னை பார்த்தார், " ஏன் யார் கூடயும் போனா அசிங்கம் புடிச்சவ்ன்னு நெனச்சியா? இன்னைக்கி வரைக்கும் நெறைய பொம்பள இந்த தொழிலதான் தன் புருசன்கிட்டியே செய்றா.. புள்ளைங்க வயித்த வளக்க . அவள எல்லாம் தப்புன்னுவியா. தாலிகட்டிகிட்ட எல்லாம் பொஞ்சாதியா இருக்கான்னு ஒனக்கு தெரியுமா? தப்பா பேசாத!" அவர் கண்ணிலும் சொல்லிலும் கோபம் கணன்றது.
மீண்டும் சிகரெட்டை உறிஞ்சினார், "அவ தப்பா போனதுக்கு அவ மட்டுந்தான் காரணம் நெனைக்கிறியா ?
நான் இன்னும் நெறைய பேர் காரணம். பேமானி நான்! பாத்துகிட்டு சொம்மா நின்னேன். தெளிவில்ல! ஊரு காரித்துப்பும்ன்னு நெனச்சி மனசுக்கு புடிச்சவள காலம் பூரா அவுசேரியா வாழ வுட்டுட்டேன். அழகா ஒரத்தி வந்து சோத்துக்கு கை நீட்டுனா வான்னு தான் கூப்பிடுறானுங்க, எவன் தங்கச்சின்னு சொல்றான், எவன் சோறு போடுறான் ?"
"அவங்க தெரிஞ்சி தானே சினிமாவுக்கு வந்தாங்க?"
"ஏன் ! சினிமாவுக்கு வந்தா ? நீ என்ன பண்ற ?"
"சினிமாக்காரந்தான்" என்று சொல்ல நா வறண்டு போனது.
"அப்பறம்? அவ சினிமாவுக்கு தான ஆசைப்பட்டா?" 
கொஞ்சம் கலங்களான குரலில் சொன்னார், "தான் பத்தினின்னு இவ அவுசாரின்னு சொன்ன பொம்பளைங்க பத்தினியா நின்னது இவ அவுசாரியா இருந்ததாலதான். இல்லைன்னா தெருவுல போறவள இசுத்துகினு போயிருப்பானுங்க" அவர் கோபம் சமூகத்தின் மேலிருந்தாலும் தன் தோற்றுப்போன காதல் மீது அதிகம் இருந்தது.

பார்வை தரையை வெறிக்க சொன்னார், "கடசி வரைக்கும் தூர நின்னே பாத்துட்டேன். ஒரு தபா அவளே சோறு வாங்கித்தா காசு வேணாம்னு சொன்னா. வயசு போய்டுச்சி அவளுக்கு. இந்த தொழில்ல தான் ரிடைர்மெண்ட்டு சீக்கிரம் வந்துடுது. அவ சோறு தின்றதா பாத்துகிட்டே குந்தி இருந்தேன். கேட்டேன் ஊருக்கு போவ காசு நான் தரேன் போய்டுன்னு"
"என்ன சொன்னாங்க?"
"சிரிச்சா. அவ நான் அத சொல்லுவேன்னு எதிர் பாக்குல."
"வேற ஏதும் வேல செஞ்சி பொழைக்கலாமே?"
"சினிமா வுடுல.. அம்மா ரோல் அக்கா ரோல் தரேன்னு காலம் போன காலம் வரைக்கும், கடைசி கறி வரைக்கும் கொத்திட்டானுங்க. சினிமா இருக்கவும் வுடுல போவவும் வுடுல. எல்லாம் போன பெறகு தைரியம் வந்து வான்னு கூப்டுட்டேன்.சிரிச்சிகினே சொன்னா ஊருக்கு போவ டிக்கெட் தரேன்னு சொன்ன 23 வருசம் லேட்டா, வான்னு கூப்பிடுற 30 வருசம் லேட்டான்னா. அசிங்கமா பூடுச்சி. அப்பிடியே நின்னேன். கேவி கேவி அழுதா.. சினிமா வந்து ஒரே வருசத்துல கசந்து போச்சு.. இந்த குழில இருந்து தூக்கி வுட ஒரு கைதான் வேணும்ன்னு தோணுச்சின்னு அழுதா. வந்துடேன்னு சொன்னேன். தலைக்கி மேல பெருசா ஒரு கும்பிடு போட்டுட்டு போய்ட்டா. கையாலாவதவன்னு முடிவே பண்ணிட்டா."
அவர் தலை குனிந்து அமர்ந்திருந்தார், உடல் குலுங்கிற்று. நான் வெறுமனே அமர்ந்திருந்தேன்.
துண்டால் மூக்கை உறிஞ்சி விட்டு சொன்னார், "இந்த கூவம் எப்படி இருந்துச்சி தெரியுமா? கல்கண்டு மாரி தண்ணி. கரயோரம் ஏகப்பட்ட சனம் வாழ்ந்துச்சி. அந்த தண்ணிய தான் குடிச்சிது, குளிச்சுது எல்லாம். எல்லா சனமும் சேர்ந்து அதுங்க கழிஞ்சத கழிச்சத எல்லாம் கூவத்துல கொட்டுச்சி... இன்னைக்கி கூவத்த ஆறுன்னு யாரும் சொல்ல மாட்டான்... அதுக்கு பேரு சாக்கடை. ஒரு ஆறு இருந்த வரைக்கும் ஊரே மொண்டு மொண்டு குடிச்சது. அந்த ஆறு இன்னைக்கு சீந்துவாரில்லாம சாக்கடையா கெடக்குஎன் பரிமளத்த பாக்கும் போது கூவந்தான் நெனப்பு வரும். அவ ஆறுய்யா குப்பைய கொட்டி கொட்டி அசிங்கமாக்கிட்டானுங்க" எழுந்து விடு விடுவென போய்விட்டார்நான் அசையாமல் அங்கேயே அமர்ந்திருந்தேன். நதிகள் நதிகளாகவே இருந்தால்...
-----------------------------
ுற்றும்----------------------------------