Thursday 20 August 2015

கூவம் சி.மோ.சுந்தரம்


சாலிகிராமத்தில் "சார் " என்று எவன் வந்து என் முன் நின்னாலும் அவன் சினிமாக்காரனா தான் இருப்பான்.
"ரெண்டு படம் வொர்க் பண்ணினேன் சார், யாராவது தெரிஞ்சா சேத்துவிடுங்க. நீங்க படம் பண்றீங்களா சார் ?"
பொதுவாக நம்பரை வாங்கி சேமித்து கொண்டு கையில் ஏதாவது கொடுத்து அனுப்பிவிடுவேன். கண் முழுக்க கனவோடும் வயிறு முழுக்க பசியோடும் சுத்தும் விந்தை மனிதர்கள் நிறைந்த இடம்.
பிரசாத் லேப் எதிரில் இருக்கும் டீக்கடையில் நின்றால் போதும் ஒரு பத்து கிழவிகளாவது வந்து கை நீட்டிவிடுவார்கள்.  முடிந்தால் டீ அல்லது சாப்பாடு வாங்கி தருவேன். அவள் மட்டும் அங்கேயே தான் குந்தி இருப்பாள். பார்வை நிலை குத்தி இருக்கும். எப்போதாவது  பார்ப்பாள். அவள் விழி பார்வைகளை சந்திக்க முடிந்ததில்லை. பிரசாத் லேப் வாசலில் டீக்குடிக்க வரும் அனைவரிடமும் கை ஏந்துவாள். நடக்க இயலாத தள்ளாடும் தேகம். தலை சிக்கும் அழுக்கும் மண்டி கிடக்கும். வருடங்கள் வரிவரியாக முகமெங்கும். பசி கண்ணில் தெரியும். "சாப்டுறியா ?" என்று கேட்டால் ஆவலுடன் தலையாட்டுவாள்.  பிள்ளைகள் விட்டிருக்க கூடும். புத்தி பேதலித்திருக்க  கூடும். வழி தவறி திணறி இருக்க கூடும். இத்தனை கூடும்களும் என் அனுமானம்தான்.
கையிலிருக்கும் ஒரு அழுக்கு மூட்டையில் துணிகளையும் கொஞ்சம் பாத்திரங்களையும் நுழுந்தி வைத்திருப்பாள். பொக்கிஷம் போல மார்போடு அணைத்தபடி அமர்ந்திருப்பாள்.
அன்று வழக்கம் போல மரத்தடி கதை விவாதம் ஒன்றின் இடையே ஒரு வெள்ளைக்காரர் கழுத்தில் கேமராவை மாலையிட்டு கொண்டு வந்து, "எக்ஸ்க்யூஸ் மீ" என்று எங்கள் கதையில் மூக்கை நுழைத்து சீப்பாக லாட்ஜ் கிடைக்குமா என்று ஆங்கிலத்தில் கேட்டார். கதை விவாதங்களுக்கு நாங்கள் போகும் அறைகள் எல்லாம் 1000 ரூபாய்க்கு குறையாதவை நாங்கள் சற்று யோசிக்கும் முன் அவளிடமிருந்து தெளிவாய் வந்து வார்த்தைகள் விழுந்தது, "கோ ஸ்ட்ரெயிட் அண்ட் டேக் லெப்ட். யூ வில் ஃபைண்ட்" என்று ஒரு லாட்ஜின் பெயரை சொல்லிவிட்டு அவரிடம் கை நீட்டினாள். அவர் என்ன நினைத்தாரோ விடுவிடுவென போய்விட்டார். நீட்டிய கையில் நான் பத்து ரூபாயை வைத்தேன். சற்று நேரம் அந்த நோட்டையே  பார்த்துவிட்டு மடியில் சொருகிக்கொண்டாள்
அவளின் ஆங்கிலம் சுத்தமாகவும் தெளிவாகவும் இருந்தது. டீக்கடை பாயிடம் காசுக்கொடுக்கும் போது கேட்டேன் , "யாரு பாய் .. இந்த பாட்டி ?"
"தெரில சார் ... இந்த மாதிரி நெறைய சுத்துதுங்கோ. சின்ன வயசு பசங்க கூட பைத்தியம் புடிச்சி சுத்துவானுங்கோ. கேட்டீங்கன்னு வச்சிகுங்க, நல்லா ஓடுற படத்த சொல்லி கத என்னுதுதான் சுட்டுடானுங்கன்னு சொல்வானுங்க. எல்லாம் சினிமா சினிமான்னு இங்க வந்து பாழா போகுதுங்கோ. இந்த கெழவிங்க, பணக்கார சினிமாக்காரங்க சுத்துற இடம் காசு கெடைக்கும்னு இங்கன சுத்துதுங்க... " அவர் அடுத்த கிராக்கியிடம் போய்விட்டார், எனக்கு மட்டும் தலையில் ஆணி அடித்தாற்போல் நின்றேன். எனக்கும் இரண்டு பிள்ளைகள் மனைவி எல்லாம் வீட்டில் இருக்கிறார்கள்
இரண்டொரு வாரம் கழித்து அவளை மீண்டும் அங்கே பார்த்தேன். கிங்க்ஸை உதட்டுக்கு கொடுத்தபடி அவளுக்கு பிஸ்கட் பாக்கெட் வாங்க திரும்பும் போது "என்ன பரிமளம், சாப்டியா?" அவளுக்கு ஒத்த வயதுள்ள ஒரு வயோதிகர் அவளிடம் கேட்டார். ஈனமாக இல்லை என்று தலையாட்டினாள். பெரியவர் சோத்து பொட்டலம் தண்ணீர் பாக்கெட் வாங்கி கொடுத்துவிட்டு போனார்
எனக்கு ஆர்வம் அவரை பின் தொடர்ந்தேன், "ஐயா ! ஒரு நிமிஷங்க!". நின்று திரும்பினார். என் கையில் புகையும் சிகரெட்டை பார்த்தார். நான் அதை கீழே போட போக, "இல்ல ! புடிப்பா... எனக்கும் குடேன்
 நான் என் சிகரெட் பாக்கெட்டை எடுத்து நீட்ட ஒரு சிகரெட்டை உருவி கொண்டார். இடுப்பில் சொருகி இருந்த தீப்பெட்டியால் பத்த வைத்து கொண்டார், "கிங்க்ஸா?" என்றவர், "அப்போ எல்லாம் வில்ஸ் தான்… இல்லேன்னா 555 புடிப்பாங்க சினிமாக்காரங்க..எப்பயாவது கெடைக்காத ஐட்டம் எதுவும் வாங்கிக்குடுத்தா கேப்பியாகி ஒரு சிகரெட் குடுப்பாங்க... அன்னைக்கி மனுசனுங்க வாழ்க்கையே ராஜ வாழ்க்கை. ரசிச்சி வாழ்ந்தாங்க…” என்றவர் புகையை இழுத்துவிட்டு  “இன்னாப்பா ... கூப்ட ?" என்றார்
"
அந்த வயசானம்மா யாரு ?” பெரியவர் ஆழமாய் என்னை பார்த்தார்
பேரு சொல்லி கூபிடுறீங்க… அதான் "  தயங்கி தான் கேட்டேன்.
"ஒரு காலத்துல அவளுக்கு செம டிமாண்ட்ப்பா. கோடம்பாக்கதாண்ட வூடு வச்சி தொழில் பண்ணிகினு இருந்தா...” பெரியவர் என்னை பார்த்தபடி தொடர்ந்தார்.
"சினிமாக்காரி அப்படின்னுதான் ஊருக்கு தெரியும்.. ஊரு கும்பகோணம் பக்கம். நாட்டியமெல்லாம் கத்துகினு..மெட்ராசுக்கு சினிமா நடிக்க வந்துட்டா...சொம்மா குத்து வெளக்காட்டும் இருப்பா ..நெகுநெகுன்னு.." எங்கோ தொலைவுக்கு போய்விட்டது போலிருந்தார்.
"நான் அப்போ கை ரிக்ஸா இசுப்பேன்.. கோடம்பாக்கத்தாண்ட தான். அப்போ எல்லாம் பாய்ங்க தான் குதிர வண்டி வச்சிருந்தாங்க. டேசனாண்ட இவ ஜாக. வூடு எடுத்து தங்கிகினு இருந்தா. ரெண்டு மூணு படத்துல பின்னேடி நிப்பா... அப்பியும் தனியா தெரிவா, அவ்ளோ அழகு". அவர் மெல்ல நகர்ந்து நடைபாதையில் அமர நானும் அவர் பக்கத்தில் அமர்ந்தேன்.
"பெருசா சினிமா இவள காப்பாத்துல. பட்டணத்துக்கு ஓடியாந்து சினிமாவுல சேந்துட்டா ஊர்ல தேவடியான்னு தான் சொல்வாங்க. திரும்பி ஊருக்கெல்லாம் போவ முடில போலருக்கு... அப்படியே இங்கேயே தங்கிட்டா..நானே நெறையா வாட்டி சவாரிய இவ வூட்டு வாசல்ல எறக்கி உட்டிருக்கேன். அப்போ எல்லாம் பாக்க சொல்ல ஒரு வாட்டி இவளாண்ட பூடனும்ன்னு நெனைப்பேன், அப்பிடி இருப்பா.  நானெல்லாம் பார்த்து ரசிச்சதோட செரி.. செம காஸ்ட்லி மால்.. இப்போ போய் அவ பேரை கேட்டா கூட, ஆக்ட்ரஸ் பரிமளம்ன்னு தான் சொல்லுவா.. எல்லா மொழியும் தெரியும், தமிழ், இந்தி, தெலுங்கு, இங்க்லீசுன்னு. வேலைக்கு வரவன் கூட புரியாத மொழிய வச்சிகினு குப்பக் கொட்டிடுறான். ஆனா இதுக்கு வரவனுங்களுக்கு அவன் மொழில பேசுனா தான் சோக்கு போலருக்கு" "
என்னிடம் இன்னொரு சிகரெட்டுக்கு கையை நீட்டினார். நான் தந்த சிகரட்டை பத்த வைத்துக்கொண்டார்.
"ஐயா ! நெறைய சிகரெட் குடிபீங்களோ?"
லேசாக சிரித்தார், "இனிமேயா எனக்கு நோவு வந்து சாவ போறேன்...? குடும்பம் குடுத்தனம்ன்னு இருந்தா யோசிக்கலாம்"
"ஏன்ய்யா, குடும்பம் ?"
விரக்தியாக சிரித்தார், "எவளும் அம்புடல ..அதான்"
"தனியாவா இருக்கீங்க ?" என்ற என் கேள்விக்கு பதில் சொல்லாமல் புகையை இழுத்தார்.
உடல் அதிர இருமிவிட்டு, "ஒத்தையா தான் மெட்ராசுக்கு வந்தேன். ஒத்தையாவே நின்னுட்டேன்"
"நீங்களும் சினிமாவுக்கு தான் வந்தீங்களா ?"
"ச்சே ச்சே ... சினிமா புடிக்கும். கொத்தாவல் சாவடியாண்டதான் வண்டி இசுத்துகினு இருந்தேன். கோடம்ப்பாக்கதுல சினிமாக்காரங்கள பாக்கலாம், அதனால இங்க வந்து இருந்துகிட்டேன். எம்சியார் எல்லாம் நேர்ல பாத்திருக்கேன்"  
"அந்தம்மாவ எப்படி தெரியும்?"
" அவள ஒரு வாட்டி முருகன் கோயில் வாசலாண்ட பாத்தேன்.. வெளியில நின்னு தலைக்கி மேல கைய தூக்கி கும்பிட்டுகினு நின்னா. உள்ள போவல .. கூசுச்சி போல... இல்ல உள்ள போனா எவனாவது வெரட்டுவான்னு பயிந்தா போலருக்கு அவளை காலம் கடந்து போய் இப்போது பார்பதுபோல இன்பமாக சிரித்தார், “ இழுத்து போத்திகினு தான் வெளிய வருவா. அன்னிக்கி அவள பாக்க சொல்லோ, இவள மாதிரி ஒரத்திய கட்டிகுனும்ன்னு நெனச்சேன். ஊர்ல தொழில் பண்றவ எல்லாம் புல்லா மேக்அப் போட்டுகினு தான் வருவாளுங்க. இவ சினிமாகாரி வேற, ஆனா மஞ்ச குளிச்சி சும்மா தலைய முடிஞ்சிகினு வருவா. பாக்க சொல்லோ கண்ணு நெறவா இருக்கும்
"லவ் பண்ணுனீங்களா?" என்றேன். என்னையே பார்த்தபடி இருந்தவர், "இவளாண்ட போய்டனும்ன்னு துட்டு எல்லாம் சேத்து வச்சேன்" என்றவர் ஒரு பெருமூச்சுடன், "அப்போ எல்லாம் அவ எட்டாக்கனி.. பெரியா ஆளுங்கதான் வந்து போவாங்க" லேசாக ஆடிப்போனது போல் கைகளை நடைபாதையில் ஊன்றியபடி தலையை கவிழ்ந்திருந்தார். லேசாக வந்தது அவர் குரல், "சிறுக்கி .. அப்பவே எவனையாவது சரிக்கட்டி எதுனா வாங்கி வச்சிட்டு இருந்தா இப்பிடி ஏன் நிக்கணும். பொழைக்க தெரியாதவ. சூது வாது இல்ல” கொஞ்சம் உடைந்திருந்தார், "ஒரு முப்பத்தஞ்சி வயசிருக்கும் அப்போ அவளுக்கு... நான் பாத்து அப்பிடி அவ நின்னு நான் பாத்ததில்ல... நைட்டு சந்துக்கா யாரோ நிக்கிறா மாதிரி இருந்துச்சி... ஒரு ஆர்வம் ..ஐட்டம்னு தெரியும். வேலைக்காவுதான்னு எட்டி பாத்தேன், பக்குன்னு ஆகிடுச்சி. பரிமளந்தான் நின்னுகிட்டு இருந்தா. சனியன் புடிச்ச ஒடம்பு ... வயசாவோ வயசாவோ சரிஞ்சி பூடுது. அவ பாவம் இன்னா பண்ணுவா. அவளுக்கு தெரிஞ்சிது அந்த தொழில் தான். ஊட்டாண்ட யாரும் வர்ல போலருக்கு. அங்க வந்து நின்னுகினு இருந்தா. அதுக்கூட பரவாயில்ல. மூஞ்சி பூரா பவ்டர் பூசிகினு... லிப்ஸ்டிக் எல்லாம் போட்டுகினு... சாதாரண லோக்கல் ஐட்டம் மாதிரி.. ச்சே பரிமளம் கோயில் செல மாதிரி.. அவ போய்..." சட்டென நிறுத்திவிட்டார். தொடர்ந்தார், " நான் பொறம்போக்கு ... கையாலாவதவன்... வாடி வூட்டாண்டன்னு கூப்ட தெரில. காச எடுத்து நீட்டிட்டேன்." மெல்ல மேல் துண்டால் முகத்தை துடைத்து கொண்டார்.
"எங்க போவலாம்னு கேட்டா ...ச்சீன்னு ஆயிடுச்சி.. இல்ல சும்மா வச்சிக்கன்னு சொன்னேன். எனக்கு பிச்ச வேணாம்னு சொல்லிட்டு காச திருப்பி குடுத்துட்டு போய்ட்டா"
"நீங்க சொல்லி இருக்க வேண்டியது தான.. லவ் பண்றீங்கன்னு"என்றேன்.
"தைரியம் இல்லாம போச்சு. அவள ரொம்ப ஒசக்க வச்சி பாத்துட்டேன். நானெல்லாம் சரிப்பட மாட்டேன்னு நானே முடிவு பண்ணிகினு வுட்டுட்டேன்"
"அவங்க தொழில் பண்றாங்கன்னு தெரியும் தானே .. அப்பறம் என்ன ஒசக்க ?"
அவர் சட்டென தீப்பட்டது போல என்னை பார்த்தார், " ஏன் யார் கூடயும் போனா அசிங்கம் புடிச்சவ்ன்னு நெனச்சியா? இன்னைக்கி வரைக்கும் நெறைய பொம்பள இந்த தொழிலதான் தன் புருசன்கிட்டியே செய்றா.. புள்ளைங்க வயித்த வளக்க . அவள எல்லாம் தப்புன்னுவியா. தாலிகட்டிகிட்ட எல்லாம் பொஞ்சாதியா இருக்கான்னு ஒனக்கு தெரியுமா? தப்பா பேசாத!" அவர் கண்ணிலும் சொல்லிலும் கோபம் கணன்றது.
மீண்டும் சிகரெட்டை உறிஞ்சினார், "அவ தப்பா போனதுக்கு அவ மட்டுந்தான் காரணம் நெனைக்கிறியா ?
நான் இன்னும் நெறைய பேர் காரணம். பேமானி நான்! பாத்துகிட்டு சொம்மா நின்னேன். தெளிவில்ல! ஊரு காரித்துப்பும்ன்னு நெனச்சி மனசுக்கு புடிச்சவள காலம் பூரா அவுசேரியா வாழ வுட்டுட்டேன். அழகா ஒரத்தி வந்து சோத்துக்கு கை நீட்டுனா வான்னு தான் கூப்பிடுறானுங்க, எவன் தங்கச்சின்னு சொல்றான், எவன் சோறு போடுறான் ?"
"அவங்க தெரிஞ்சி தானே சினிமாவுக்கு வந்தாங்க?"
"ஏன் ! சினிமாவுக்கு வந்தா ? நீ என்ன பண்ற ?"
"சினிமாக்காரந்தான்" என்று சொல்ல நா வறண்டு போனது.
"அப்பறம்? அவ சினிமாவுக்கு தான ஆசைப்பட்டா?" 
கொஞ்சம் கலங்களான குரலில் சொன்னார், "தான் பத்தினின்னு இவ அவுசாரின்னு சொன்ன பொம்பளைங்க பத்தினியா நின்னது இவ அவுசாரியா இருந்ததாலதான். இல்லைன்னா தெருவுல போறவள இசுத்துகினு போயிருப்பானுங்க" அவர் கோபம் சமூகத்தின் மேலிருந்தாலும் தன் தோற்றுப்போன காதல் மீது அதிகம் இருந்தது.

பார்வை தரையை வெறிக்க சொன்னார், "கடசி வரைக்கும் தூர நின்னே பாத்துட்டேன். ஒரு தபா அவளே சோறு வாங்கித்தா காசு வேணாம்னு சொன்னா. வயசு போய்டுச்சி அவளுக்கு. இந்த தொழில்ல தான் ரிடைர்மெண்ட்டு சீக்கிரம் வந்துடுது. அவ சோறு தின்றதா பாத்துகிட்டே குந்தி இருந்தேன். கேட்டேன் ஊருக்கு போவ காசு நான் தரேன் போய்டுன்னு"
"என்ன சொன்னாங்க?"
"சிரிச்சா. அவ நான் அத சொல்லுவேன்னு எதிர் பாக்குல."
"வேற ஏதும் வேல செஞ்சி பொழைக்கலாமே?"
"சினிமா வுடுல.. அம்மா ரோல் அக்கா ரோல் தரேன்னு காலம் போன காலம் வரைக்கும், கடைசி கறி வரைக்கும் கொத்திட்டானுங்க. சினிமா இருக்கவும் வுடுல போவவும் வுடுல. எல்லாம் போன பெறகு தைரியம் வந்து வான்னு கூப்டுட்டேன்.சிரிச்சிகினே சொன்னா ஊருக்கு போவ டிக்கெட் தரேன்னு சொன்ன 23 வருசம் லேட்டா, வான்னு கூப்பிடுற 30 வருசம் லேட்டான்னா. அசிங்கமா பூடுச்சி. அப்பிடியே நின்னேன். கேவி கேவி அழுதா.. சினிமா வந்து ஒரே வருசத்துல கசந்து போச்சு.. இந்த குழில இருந்து தூக்கி வுட ஒரு கைதான் வேணும்ன்னு தோணுச்சின்னு அழுதா. வந்துடேன்னு சொன்னேன். தலைக்கி மேல பெருசா ஒரு கும்பிடு போட்டுட்டு போய்ட்டா. கையாலாவதவன்னு முடிவே பண்ணிட்டா."
அவர் தலை குனிந்து அமர்ந்திருந்தார், உடல் குலுங்கிற்று. நான் வெறுமனே அமர்ந்திருந்தேன்.
துண்டால் மூக்கை உறிஞ்சி விட்டு சொன்னார், "இந்த கூவம் எப்படி இருந்துச்சி தெரியுமா? கல்கண்டு மாரி தண்ணி. கரயோரம் ஏகப்பட்ட சனம் வாழ்ந்துச்சி. அந்த தண்ணிய தான் குடிச்சிது, குளிச்சுது எல்லாம். எல்லா சனமும் சேர்ந்து அதுங்க கழிஞ்சத கழிச்சத எல்லாம் கூவத்துல கொட்டுச்சி... இன்னைக்கி கூவத்த ஆறுன்னு யாரும் சொல்ல மாட்டான்... அதுக்கு பேரு சாக்கடை. ஒரு ஆறு இருந்த வரைக்கும் ஊரே மொண்டு மொண்டு குடிச்சது. அந்த ஆறு இன்னைக்கு சீந்துவாரில்லாம சாக்கடையா கெடக்குஎன் பரிமளத்த பாக்கும் போது கூவந்தான் நெனப்பு வரும். அவ ஆறுய்யா குப்பைய கொட்டி கொட்டி அசிங்கமாக்கிட்டானுங்க" எழுந்து விடு விடுவென போய்விட்டார்நான் அசையாமல் அங்கேயே அமர்ந்திருந்தேன். நதிகள் நதிகளாகவே இருந்தால்...
-----------------------------
ுற்றும்----------------------------------

No comments:

Post a Comment