Saturday 14 November 2015

ஜீலம் நதி போர் பாகம் ௨


இவ்வாறு புஷோத்தமன் என்னும் புருவின் படைபலத்தையும் பார்ப்போம்.

புருவிடம் 20,000 காலாற்படை, 3000 குதிரை படை, 300 தேர்ந்த போர் யானைகள் மற்றும் 300 போர் ரதங்கள் இருந்தது. அதை தாண்டி குருதியால் தோய்ந்த  நீண்ட போர் சரித்திரம் இருந்தது.

முன்னம் சொன்னது போலவே புருவின் படைகலன்கள் அலெக்சாண்டரின் படைகலன்களை விட உலோக ரீதியாக சிறந்திருந்தது. 


புருவிய படைகளிடம் இருந்த கோடாரிகள் ஈட்டிகள் யாவும் உருக்கிரும்பினால் ஆனவை. இவை மெது இரும்பும் கரிஇரும்பும் சேர்த்து மடித்து பல அடுக்குகளாக அடிக்கப்பட்டவை. இதன் காரணமாகவே இவை எளிதில் உடையாமலும் எளிதில் மழுங்காமலும் இருந்தன. இவற்றின் கடினத்தின் முன் வெண்கல கவசங்களும் கேடையங்களும் தடையாக இருக்க வாய்ப்பில்லை. 

மேலும் வளைந்த வாட்களை புருவிய வீரர்கள் கொண்டிருந்தனர், இவ்வாட்களும் பல அடுக்கு மடித்து அடித்த கரி இரும்பினால் ஆனவை. இவற்றின் கடினமும் கூர்மையும் எளிதில் வீழ்த்த கூடியதில்லை. இவற்றை ஒற்றை கையால் போர்க்களத்தில் சுழற்றுவது அத்தனை எளிதானது.

மேலும் இவர்களின் கவசம் அலெக்சாண்டரின் படையினரது போல் உலோகங்களால் ஆனவை இல்லை. இவை தோலினால் ஆனவை. ஆனால் பிரத்தியேக தன்மை கொண்டவை. இக்கவசம் தோலினால் மேல் பாகம் செய்யப்பட்டு உள்ளே கம்பளி மற்றும் பத்தப்படுத்தாத பஞ்சின் பல அடுக்குகளால் ஆனவை . இன்றைய தோட்டா துளைக்காத கவசங்கள் இப்படிதான் உருவாக்கப்படுகின்றது. இக்கவசங்களை ஈட்டியும் வாளும் கடந்துவிட இயலாது. இது போன்ற கவசம் வீரர்களை பொதி சுமக்க வைக்காமலும் அவர்களின் அசைவுகளை தடுக்காமலும் மிக இலகுவாக அவர்களை போர்க்களத்தில் இயங்க அனுமதிக்கும்.


புருவின் போர் குதிரை படையும் இவ்வாயுதங்களை தாங்கி இருப்பதுடன் கணிசமான வேகத்தையுடைய குதிரைகளையே வைத்திருந்தனர். இக்குதிரைகள் அரபிய குதிரைகள் போல் உயரமாகவும் பெரிதாகவும் இல்லாமல் நடுத்தர ரகமாகவே இருந்திருக்கிறது. இக்குதிரைகளும் கம்பளி பஞ்சு அடைப்புகள் கொண்ட கவசங்களை அணிவிக்கபட்டிருந்தன. ஆகையால் வேகமும் உயரமும் குறைந்திருந்தாலும் இவருக்கான பாதுகாப்பு மேசிடோனிய குதிரைகளைவிட சற்று கூடுதலே.


புருவின் விற்படையை பார்த்தே ஆகவேண்டும். அது மிக முக்கியமாக எதிரிகளை அச்சுறுத்தம் தன்மை கொண்டது.

புருவின் விற்படை வீரர்கள் தாங்கி நிற்கும் விற்கள் சுமார் அறடி உயரம் கொண்டது, மேலும் அதன் அம்புகள் சுமார் 4 - 5 அடி நீளமுள்ளவைகள். விற்களை தரையில் பதித்து இடது காலால் அசையாமல் பிடித்துக்கொண்டு அதை இயக்குவார்கள். அம்புகளின் முனைகள் கரி இரும்பினால் ஆனதாலும் ஆறடி உயரம் மற்றும் வலிமை வாய்ந்த  விற்களில் இருந்து புறப்படும் இவ்வம்புகளை அலெக்சாண்டரிடம் இருந்த எந்த கவசமும் தடுத்து நிறுத்தவியலாது. 

மூன்றாவதாக வருவது புருவின் தேர்ப்படை.


நான்கு சக்கரங்கள் கொண்ட இரு குதிரைகள் இழுக்கும் இத்தேர்கள் இலகு ரகத்தை சேர்ந்தவை. இதை இழுக்கும் குதிரைகளும் கவசம் பூண்டு இருக்கும். இதை செலுத்தும் சாரதியும் ஆயுதம் தாங்கி முழு கவசத்துடன் போர் ஏதுவாக இருப்பான்.  இந்த தேர்கள் பின்னிலிருந்து ஏற கூடியவை. முன் பக்கம் முழுதும் கவசமாக்கப்பட்டவை. இத்தேர்களில் இரு அல்லது மூன்று போர்வீரகள் ஈட்டி மற்றும் வாட்கள் தாங்கி இருப்பார்கள். இத்தேர்கள் அசுர வேகத்தில் எதிரின் காலாட் பிரிவில் புகுந்து துவம்சம் செய்ய கூடியவை. ஆனால் இக்காலகட்டத்தில் காலாட்படை இத்தேர்களுக்கு வழிவிட்டு பின்னாலிருந்து தாக்கும் கலையை பயின்றிருந்தனர். 


நான்காவதாக வரும் யானை படை தான் இந்தியாவை நெருங்க இதர உலகத்தை அச்சுறுத்திய படை. 11 முதல் 12 அடி உயரமுள்ள யானைகள், முற்றிலும் போரில் பழக்கப்பட்ட நகரும் கோட்டைககளே. இவற்றின் கட்டளைக்கு பணியும் மூர்க்கத்தனமும் அசாத்திய பலமும் வேறு எந்த மிருகத்திற்கும் இல்லாத துதிக்கையும் இவற்றை மிக பெரும் போர் ஆயுதங்களாக்கின. புருவின் இந்த யானைகள் போருக்காக பயிற்சி பெற்றவை அல்ல, அவை போரிலேயே பயிற்சி பெற்றவை. போர் நுணுக்கங்களும் கட்டளைக்கு பணிந்து அச்சமில்லாமல் எதிரி படையினுள் புக கூடியவைகளும் ஆகும். மேலும் இந்த யானைகள் உடல் முழுதும் எதிர்களின் ஈட்டிகளை சமாளிக்கக்கூடிய இரும்புதகடில் ஆன கவசம் சூடியவை. இவற்றின் மேல் அமைந்த பரண்கள் இரண்டு அடுக்காக இருக்கும், முதல் அடுக்கு உடலின் இரு பகுதிகளும் தொங்கும் பலகணிகள். இவற்றில் ஒவ்வொரு புறமும் இரு வீர்கள் இருப்பார்கள். இவர்கள் ஈட்டி மற்றும் விற்கள் தாங்கி இருப்பார்கள். மேலே உள்ள பரணில் தலைவீரன் இருப்பான். இவன் பெரும்பாலும் பெரிய ஈட்டியை தாங்கி இருப்பான். இவர்கள் அனைவரும் உடற் கவசம் தரித்து வாட்களை உடன் வைத்திருப்பார்கள். இந்த யானைப்படை அனாயசமாக காலாட்படையையும் குதிரை படையையும் துவம்சம் செய்ய கூடியவை. 


இப்போது கரையேறியுள்ள அலெக்சாண்டரை பார்ப்போம். சுமார் 20000 காலாட்படைகள் 8000 கனரக குதிரை படைகள் மற்றும் 1000 இலகுரக குதிரை விற்படையுடன்  அலெக்சாண்டர் முதலில் கரையேறினான் என்கிறார்கள் ஒரு சாரார். மிச்சமுள்ள படைகள் நதியின் தீவிலேயே கடக்க ஆயுத்தாமாகி இருந்திருந்தார்கள் அல்லது அலேக்சாண்டரால் இந்த கடவைக்கு முன்னரே,  தலைமை முகாமுக்கும் கடவை இடத்திற்கும் இடையில் அக்கரையில் பிரித்து நிறுத்தி வைக்கப்பட்டவர்கள். இவர்கள் சுமார் 10,000 காலாட்படை 2000 முதல் மூவாயிரம் கனரக குதிரை படை. 

இதற்கு அலெக்சாண்டருக்கு தேவைப்பட்ட நேரம் சுமார் 5 மணிநேரங்கள். இப்போது விடியலின் வாசலில் அலெக்சாண்டர் கரையேறி இருந்தான். 

இதுவரை எல்லாமே அலெக்சாண்டரே செய்துக்கொண்டிருக்க புரு ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருந்திருப்பதுப்போல் உங்களுக்கு தோன்றலாம், ஆனால் அது இல்லை உண்மை. வரலாற்று ஆசிரியர்கள் அலெக்சாண்டரின் பக்கமே துதிபாடினாலும் அவர்கள் அலெக்சாண்டர் கரை ஏறியதும் அவனை புருவின் மகன், இரண்டாம் புரு நேரடியாக தன் படையுடன் சந்தித்ததை ஒப்புக்கொள்கிறார்கள். இது எப்படி சாத்தியம்?
முன்னர் சொன்னது போல் புரு தன் முழுப்படையையும் ஒன்று சேர்த்து கொண்டது உண்மையாக இருந்தாலும் அது முற்றிலும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. புரு போன்று போரிலேயே ஊறிய மன்னன் ஒரு போதும் அவ்வாறான தவறுகளை இழைக்க வாய்ப்பில்லை. புரு தன் முக்கிய காவற்படைகளை திரும்ப அழைத்து கொண்டாலும் சிறு படைகளையோ அல்லது ஒற்றர்களையோ அங்கிருந்து அப்புறப்படுதியிருக்க மாட்டான். இந்த ஒற்றர்கள் தான் புருவிற்கு அலெக்சாண்டர் 27 கிமீ தூரத்தில் நதியை கடப்பதை சேதி சொல்லி இருக்க வேண்டும்.

அலெக்சாண்டர் விடியலில் கரையேறுவதற்கு முன் இரண்டாம் புருவின் தலைமையில் புரு ஒரு சிறு படையை அனுப்பி வைத்திருந்தான். புருவிற்கு தெரிந்ததெல்லாம் ஒரு சிறு முன்படை நதியை கடந்து வருகிறது என்பது தான். புரு ஒரு போதும் அலெக்சாண்டரே தன் முக்கால்வாசி படையுடன் அங்கே கரையேறுவது தெரிந்திருக்கவில்லை என்றே சொல்லலாம். காரணம், அவ்வாறு தெரிந்திருந்தால் வெறும் 1000 குதிரைகளும் 100 தேர்களையும் மட்டுமே தந்து தன் வீர மகனை அனுப்ப வேண்டிய அவசியமில்லை, அனுப்பி இருக்க வாய்ப்பே இல்லை. நிச்சயமா புரு, இரண்டாம் புருவின் தலைமையில் ஒரு படையை பின்னே விட்டுவிட்டு தானே தான் முன் வந்திருப்பான்.