Sunday 24 August 2014

உச்சலம் உசித்த உசாவு உண்டெனில் 
உச்சிசிகை உடையோன் உகப்பான் 
உஞற்று உடையோனுக்கு உடலல் உடன்
உடுபதம் உகத்தல் உறுதி.
___________________ஜான்சி _______
அறிவு கூருடைய உளவுகள் உண்டெனில் 
உச்சியில் சிகையுள்ள மன்னன் உயர்வான்.
ஊக்கம் உடையோனுக்கு உடல் போதும் 
அவன் வான் வரை உயர்வது உறுதி
என் இறந்த சதையில் இன்னொரு உயிரின் உணவை வைத்தவன் தான் இறைவன்.
ஆனால் உயிர்த்திருக்கும் போதே உடலை உண்ண வைத்து உயிர் செய்தவனும் இறைவன் தான்.
பெருகி திரிதல் நானில்லை, பெரிதாய் எதுவும் பொருளில்லை.
உருகி ஊற்றும் உடலை திடமாய் நம்பி பயனில்லை.
உடையும் நாணமும் களைந்து 
விளக்கையும் உன்னையும் அணைத்து 
வளைந்து 
பிளந்து 
அளந்து 
களைந்து 
நிறைந்து 
சுமந்து
வளர்ந்து 
உடைந்து 
பிளந்து
மீண்டும் நம்மின் சாயல்கள்
வயதுடன் உடைந்து குலையும் உடலின்
சாயல்கள்.
இருந்தாகிவிட்டது
இரண்டாகிவிட்டது
இறந்தும் ஆகிவிடவேண்டும்
இனியொரு முறை இளமை கொண்டு
இணைந்து பிணைய
மேகத்தை ஒரு பறக்கும் நீர்த்தொட்டி என நான் நம்பி இருந்த காலங்களில் நீ சொல்லி இருக்கலாம் உன் காதலை.
விழிகளால் கேட்டும் விரல்களால் பார்த்தும் இருட்டு மூலையில் அரைகுறை அறிவுடன் நாம் செய்தது தான் உண்மையான காதல்.
காந்தியும் கோட்சேவும் நாற்கர சமன்பாடுகள். 
புத்தனும் அணு ரசவாதத்தின் எச்சமாக இருந்திருக்க கூடும். 
கம்பனும் இளையராஜாவும் ழாக்கின் உடைக்கட்டுமானம்.
நான் வெறும் இரண்டு கை இரண்டு கால்.
உடலின் நடு குறுக்கே கண்ணாடி வைத்தால் எதிர் பிம்பம் எனை போல் தோன்றாத 
மெய் அற்பம்.
கடலின் ஆர்பரிப்புகள் நாம் கேட்க வேண்டும் என்பதற்காக இல்லை 
ஒரு துளி நீர் தெறித்து விழும் ஓசையின் பன்மை மட்டும் தான் அது.
என் ஒரு மூச்சுக்காற்றும் மொத்த அண்டத்தின் வெளியும் ஒருமை பன்மையிலேயே சேரும்.
இத்தனை பெரிதாய் இருந்தும் கடலால் மட்டும் நட்சத்திரங்களை பிரதிபலிக்க இயலுவதில்லை 
என் வீட்டு பால் சொம்பில் வைக்கும் நீரில் நிலவே தெரிகிறது.
மாக்னோலியாவின் பிரகாசங்கள் என் முகத்தில் இருப்பதில்லை.
என் சுவாசங்களை புயல்களாய் மட்டும் மாற்ற எத்தனிக்கிறேன். 
பாலையில் ஒற்றையாய் பயணம் செய்த யாத்ரிகனின் இறந்த உடலுக்கு மலர் கொண்டு சேர்க்குமோ என் சுவாச புயல்கள்?
கடல் வாரி இறைத்த வான நீல உப்பு கற்களை அர்பணிக்கிறேன் அந்த யாத்ரிகன் உடலுக்கு.
நல் முறையில் சிதைந்து போ நண்பனே
இரவில் பேரிரைச்சலும் பெருங்காற்றுமாய் வீசிக்கொண்டிருக்கிறாய்.
உப்பு கற்கள் என் உடலிலேயே பூக்கும், முத்தை வாரி என்று இறைப்பாய் பெருங்கடலே?
என்னை போலே நீயும் பெரும் சுவாசம் சுவாசிக்கிறாய்.
உன் சுவாசங்கள் மேகங்கள் என் சுவாசங்கள் மோகங்கள்
ஆயிரம் வருடங்கள் காத்திருந்து கல்லாய் சமைந்து போன மரம் போல 
நானும் கல்லாய் போவேனோ ?
என்றோ எவனோவொருவனின் உளிபட்டு வெளிபடுவேன் சிலையாய்
அவனுக்கென்ன தெரியும் வடித்தது அவனில்லை ஒளிந்திருந்தது நானென்று.
அண்ட சாம்பல்கள் வந்து அண்டுகிறது கறைப்படா மனதினுள் 
கோவம் முற்றி பீறிட்ட தீக்குழம்புகள் குளிர்ந்து ஒளி கசியும் கற்கள் படைக்கின்றன 
ஒளிரும் கற்களை அணிந்து திரிகிறேன், அதை உண்ண இயலாதென்பதால்.
குளிர்ந்த தீ நீராய் ஒழுகி,பிரவாகித்து சமவெளி நோக்கி பாய்கிறது.
கடல் தேடி அலையும் என் நதிக்கு வெறும் மலைகள் மட்டுமே கிடைக்கிறது.
என்னுள் கடல்கள் உயரவும் மலைகள் தாழவும் படைத்துவிட்டேன்.
ஒற்றை விதை தேடி அலைகிறது இங்கு முழு வெள்ளம்.
விதை வளர்த்து மரமாக்கா நீர் கொண்டு நான் என்ன செய்ய?
என் உடலெரித்து எஞ்சும் நீறு கரைக்க மட்டுமா என் நதி ?
பருந்துக்கு விரலில்லை என்று வருத்தம் 
எனக்கு சிறகில்லை என்று வருத்தம் 
இறைக்கு நாங்கள் நாங்களாய் இல்லை என்ற வருத்தம் 
என் ஆசைகள் என் மாரோடு அணைகிறது பறவை முடிந்த சிறகுகளாய்.
வாழ்வில் உன்னளவு குறை இருந்து கொண்டே இருக்கிறது 
இதயத்தில் உன் இடம் வெறும் வலி நிரம்பி இருக்கிறது 

என்னையும் உன்னையும் தவிர ஒரு சுவரும் இருக்கிறது 
வாழ்க்கை ஏனோ இரண்டாய் பிரிந்து இருக்கிறது.

நானும் நிறுத்தவில்லை நீயும் நிற்கவில்லை 
பாதை தான் உலகெங்கும் விரிந்து கிடக்கிறது 

பனி இரவில் விடியும் வரை கூரை நனைந்து கிடக்கிறது 
கூடவே கொஞ்சம் என் இமைகளும் நனைந்து இருக்கிறது

நான் எழுதும் கவிதை முழுதும் உன் பெயர் இருக்கிறது
என்ன செய்ய .... கவிதை முழுதும் வெறும் இயலாமை இருக்கிறது
என் விளிம்பு வரை என் வாழ்க்கை ஊற்றப்பட்டிருக்கிறது 
எனினும் என்னுள் எங்கேயோ ஒரு விரிசல் என் வாழ்வை ஒழுக விடுகிறது.
தொடர்ந்து என்னுளிருந்து ஊற்றெடுக்க வாழ்வை ஏவுகிறேன்.
விரிசல் வழி ஒரு நதியே தோன்றாதோ?
எவனோ ஒருவனின் கல்லறையில் எழும்பி இருக்கிறது கோபுரம் 
உச்சியிலிருந்து தொங்கும் பலகணியில் பெண்ணொருத்தி நிற்கிறாள் 
வெள்ளையுடையில் கையில் ரோஜாக்கள் ஏந்தி 
கடந்து செல்லும் எவனோ காதலில் விழுவானோ? 
இல்லை காணாதது போல் போவானோ?
உரக்க சொல்லபடுகிறது பொய் 
நான் உன் காதில் சொல்கிறேன் என் காதலை 
நீ என்னிடம் நம் காதல் அமரம் என்று சொல்லாதே 
அப்படி சொல்ல வேண்டுமானால் உரக்க சொல் 
எனக்கு உன் பைத்தியக்காரத்தனம் வேண்டாம் 
உன் உண்மைகள் மட்டும் போதும்
யாருடைய கதையையோ முனுமுனுக்கிறது காற்று 
சொல்லாத வார்த்தைகளை கிசுகிசுக்கிறது தீ 
ஆழ்ந்த காதலால் மௌனம் கொண்டு அமர்ந்திருக்கிறது மலை 
கோடான கோடி உயிர்களை தாங்கியபடி சூல் கொண்டிருக்கிறது கடல் 
கண்மூடி ஏகாந்த தியானத்தில் இருக்கிறது அண்டம் 
என் மனம் மட்டும் ஆர்ப்பரித்து அலைகிறது காற்று தீ மலை கடல் அண்டத்தின் செல்ல கன்றாய்.
என்னை நீ புதினமாக நினைவில் கொள்ளவேண்டாம் 
அழகிய நால்வரி கவிதையாய் பத்திரபடுத்திக்கொள்.
பெருவெள்ளம் கொள்ளும் அடை மழையாய் வேண்டாம் 
வெறும் கூரை வழி சீலையாய் விழும் மென் மழையாய் வருகிறேன்.
கிணற்றில் வீசிய பச்சை மரகதம் போல கிடக்கிறேன் உன்னுள், 
பார்பவருக்கு பாசிப் படிந்த கல்லாய் தெரியட்டும். 
மாரிமேக இடிகளாய் நானில்லை உன் செவிக்கு 
மணியோசையின் எச்ச ரீங்காரமாய் இருப்பேன்.
நீயில்லாமல் போனால் நீயாகவே நானிருப்பேன் !!
நாட்கள் ஓடுகின்றன 
தருணங்கள் தப்பி செல்கின்றன 
இது தீண்டுதலுக்கான நேரம் 
தென்றலே வா, ஒரு தேநீருடன் சந்திப்போம்!
எதற்கு குழம்புகிறாய் ?
உன் ஆத்மா என்னிடம் இருக்கிறது!
வசந்தம் வரும் போது உன் குளிர்களை 
உனக்கே தருகிறேன்.
அது வரை பூக்களின் மகரந்தத்தின் மத்தியில் உறங்கிகிட.
கூந்தல்கள் மழை பொழியாது, 
நீ மேகங்களை அலசி பார்.
சேலை முந்தியில் என்ன இருக்கிறது ?
என் தேசக்கொடியை தழுவி கிட!
காயங்களும் காத்திருப்புக்களுமாக போர் முனையில் நாமிருவரும் 
வெறுப்பை சொல்லிட தருணம் இது.
இணைந்தே சொல்லுவோம் ஏற்க மறுக்கும் எல்லா செயலையும் எத்தனை வெறுக்கிறோம் என்று.
நம் கல்லறைகள் நமக்கில்லை. நம் பிணங்களுக்கும் மானம் உண்டு.
அடைந்தே மண்ணில் கிடக்காமல் அத்தனை உயிர்க்கும் இறையாவோம்.
இதய உதரவிதானம் காதலுக்கும் வெறுப்புக்கும் இடையே தான் மூடி திறக்கிறது.
மாதமொருமுறை கருக்குழம்பை உரித்து களையும் போது விளக்கங்கள் கேட்கிறது உரிக்கப்பட்ட தோல்.
உதிர சிதறல்கள் ஆணுக்கு போரில் பெண்ணுக்கு அக்கபோரில்.
காரின் பனியில் உறைந்த கண்ணாடி வழி பார்த்துக்கொண்டே செல்கிறேன் 
கரகரக்கும் ரேடியோவின் வழி ஒழுகும் பழைய பாடலொன்று என் பயண துணை.
ஆளரவமற்ற ஒரு சிறு நகரத்தின் வாழ்வின் மிச்சங்கள் எங்கும் தெரித்துகிடக்கிறது. 
அங்கொன்றும் இங்கொன்றுமாக வளர்ப்பு மிருகங்கள் சுருண்டு வாழ்வை எதிர் நோக்கி தவம் கிடக்கின்றன. 
புகையற்ற சமைலறை புகை கூண்டுகளும் பூசைகளற்ற கோவில் கோபுரங்களும் இன்னும் வானை நோக்கியே நிற்கின்றன.
அடைப்பாரின்றி சன்னல் கதவுகள் காற்றின் போக்கிற்கு இசைந்து அசைகின்றன.
கடைசியாய் போன எதோ ஒரு இறுதி ஊர்வலத்தின் காய்ந்த மலர்கள் சாலையில் கிடக்கின்றன.
ஊரின் கடைசியில் நிற்கிறது நீயும் நானும் வாழ்ந்த வீடு, அத்தனை இன்ப நினைவுகளையும் சுமந்தப்படி.
நாம் இன்னும் வெற்று மூளைகளின் வெறுமைகளில் தான் வாழ்கிறோம் 
கிழக்கும் மேற்கும் நம்மை என்ன செய்துவிடுகிறது ?
காலங்களை மாற்றி உறைப்பனியும் தீக்கக்கும் கோடையுமாய் ஆக்கினாலும் 
வடக்கும் தெற்கும் நம்மை என்ன செய்துவிடுகிறது ?
தலைக்கு அணையாக ஒரு மண்மேடு எப்படியும் கிடைக்கும் 
பெரும் செல்வம் நம்மை என்ன செய்துவிடுகிறது?
நாம் மேகங்களை துரத்திக்கொண்டு நிழல் தேடுபவர்கள் அல்லவே 
ஞாயிற்று கதிர் நம்மை என்ன செய்துவிடுகிறது?
நீயும் நானும் இறப்பை பற்றியும் எண்ணியதில்லை இரையை பற்றியும் எண்ணியதில்லை
அச்சம் வந்து நம்மை என்ன செய்துவிடுகிறது ?
நட்சதிரங்களை எண்ணியபடி சிரித்து பேசி இரவை கழிப்போம்
விடியலின் கீற்று கீழ்வானில் தெரியும் வரை
நாளை நம்மை என்ன செய்துவிடும்?
ஆள முடியா பெருங்கடல் பற்றியும் 
அணைக்க முடியா நெருப்பை பற்றியும் 
அல்லவே நம் காதல் !
வெறும் அணைப்பை பற்றியும் 
கொஞ்சம் வெறுமை பற்றியும் தானே நம் காதல்.
வெறும் வெற்றிடங்கள் நிரப்பும் பொறுப்பு மட்டுமா நம் காதல்?
கொஞ்சம் இடைவெளி பற்றியதல்லவா நம் காதல்.
கொஞ்சம் கலவி கொஞ்சம் கதைகள் நிறைய அமைதி என்றே கழியட்டுமே இரவு.
இன்னும் கொஞ்சம் இருந்துவிட்டு போ என்னும் வார்த்தையை மட்டும் சொல்லிவிடாதே,
எதுவானாலும் இங்கேயே இருந்தே செய்கிறேன்.
தனிமைகள் காதல் உணர்த்தலாம் வளர்க்காது.
கடைசியாய் நீ என்னிடம் கொடுத்தது என் கோடித்துணியோ ஒரு கடிதமோ 
வாள் உருவப்படுவது போல் மெல்ல வெளிவருகிறது நீ சொல்லவரும் சேதி 
இரவை உரித்து கொண்டு வெளிவரும் பகலை போல எனக்கும் புலர்கிறது 
எதுவும் இல்லாத இடத்திற்கு கதவு போல என் எல்லைகளுக்கு உன்னை காவலிட்டு இருக்கிறேன்.
காதலை பற்றி பேசிக்கொண்டிருக்காதே அது பழங்கதை 
என்றும் புதியவர்கள் நாம் இரவு இறந்து காலையில் பிறக்கிறோம் 
இன்று நம்மை பற்றி பேசு நம்மை அறிந்தவர் எவரும் இல்லை
என் தனிமைகளில் கனவை தவிர எதுவுமில்லை 
என் மேல் போர் தொடுக்காதே. நீ அடைய என் கனவுகள் தவிர வேறெதுவுமில்லை.
என் இரவுகளை அலங்கரிக்க எனக்கு உன் நினைவை தவிர வேறெதுவுமில்லை.
என் அகக்கதவுகளை திறக்காதே அங்கே உன்னை தவிர வேறெதுவுமில்லை.
நீ நின்று விட்டு போன இடத்தில் உன் நிழலையாவது விட்டு சென்றிருக்கலாம்.
தனிமையில் என் நிழலை உற்று பார்க்கிறேன், அது உன்னை போல் தெரிந்துவிடாதா என்று.
மண்ணை கண்டு பொறாமை கொள்கிறேன், அது உன் பாத தடத்தையாவது அச்சில் கொண்டுவிட்டது.
என்னிடம் உன் நினைவுகள் எல்லாம் மேகம் போல் தான் உள்ளது.
சில நேரம் மானாக சில நேரம் நானாக சில நேரம் வீணாக தோற்றமளிக்கிறது உருவில் நிலையில்லா மேகம்.
பாலையின் நடுவே திடீரென ஒரு வசந்தம் போல் 
கோடையின் நடுவே திடீரென ஒரு பெருமழை போல் 
மழையற்ற ஒரு மாமாங்கதின் கடைசியில் ஒரு வானவில் போல 
ஊமை குயிலின் தொண்டையில் திடீரென உதித்த திடீர் பாடல் போல் 
ஊனமுற்ற மீனுக்கு திடீரென ஒரு விடியலில் நீந்த தெரிந்தது போல் 
புலிக்கு மானிடம் திடீரென தோன்றிய காதல் போல் 
மரவட்டைகள் திடீரென பட்டாம் பூச்சியாவது போல் 
திடீரென நானும் ஒரு நாள் அழகாய் அழிந்து போக வேண்டும்
ஜோடி புல்லாங்குழல் என்று ஏதுமில்லை
ஒற்றை வான் முழக்க ஓங்காரமாய் ஒலிக்கிறது 
என் புல்லாங்குழலின் ஹம்சநாதம் 
தைவதத்திலிருந்து நிஷாதம் தொடாமலே பஞ்சமம் பார்க்கிறேன்.
பொன் மதிற்மேல் பூஞ்சோலை கொண்டு என் வேந்தே? 
என்னுயிர் தாண்டியும் சீருண்டோ வையத்தில்?
கார்மேகம் கண்டே துச்சிலாட பீலி பிரிக்கும் சேவலும் 
பிரித்தோகை கண்டே மையலும் அளகும் ஆடும் சோலையில் 
நினைகாணா வாடும் பேதையும் பேதலிக்குமே அறியாயோ ?
ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என எதுவுமாய் வா என்கிறாள் பயின்றாள்
உணர்ந்து 
நுகர்ந்து 
கண்டு 
சுவைத்து 
கேட்டு 
அறிந்து 
காதலுற்று எழாமறிவறிந்தேன்
முரளாய் மூதாயாய் தும்பியாய் நாற்காலாய் நானிருந்தே 
முழுதாய் தோன்றி நின் முன்னிருந்து தொழுவேன் 
பேயாய் போகாதென் பேருயிர் தாங்கு பொற்பாதா 
தீயாய் வாழ்ந்தே திளைத்திட அருள் செய் இறையே
அடர் மை விழியால் 
இடர் பல ஈவாள் 
தொடர் வலி தந்தே 
படர் என வீழ்வாள்
விழி பொழிந்தல் இழியாகுமோ 
வழி மொழிந்தால் பழியாகுமோ 
உழி கொழித்தால் கழியாகுமோ 
குழி விழுந்தால் சுழியாகுமோ
உற்றறியும் நிலை கொண்ட ஊமையும் செவிடும் ஆறறிவுடையார் என கொள்வோமே அது போல் 
கெட்டழிந்தும் நினை மறவா உள்ளம் கொண்டெம்மை கள்ளுண்ட வண்டெனும் காதலர் எனவே கொள்