Saturday 21 June 2014

சிதறிய குடலை சேமிக்க நினைக்கிறேன் என் நினைவு திரும்பிய தருணத்தில்.
வலக்கை நீட்ட எத்தனிக்கிறேன் வராத கையை நோக்கும் போது உணர்ந்தேன், துண்டுப்பட்ட அக்கை தூர கிடப்பதை. சிதறி கிடக்கும் என்னை சேகரிக்க துடிக்கிறேன். புரியாத வலி உடலெங்கும் ஒலிக்கிறது. என் ரத்தம் என் ரத்தம் என்று போற்றிய இன்னும் சில உடல்களிருந்து கசிந்து வந்த ரத்த வாடை தான் எத்தனை கொடிது. தீபாவளிக்கு தீபாவளி ரசித்த வெடித்த வாடை இன்று பெருமச்சத்தை தருகிறது. சுற்றி நிற்கும் கூட்டம் தான் கூச்சலிட்டு தங்கள் அச்சத்தை அறைக்கூவி கொண்டிருந்தது. அங்குமிங்கும் அலையும் போலீஸ்க்காரனின் பூட்ஸ்கள் இன்னும் சிதையாத என் கையை மிதித்து செல்கிறது. வலியில் பெருங்குரல் கொண்டு கூவ எத்தனித்து இயலாது அடங்கி போகிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கும் சதை பிண்டங்கள். இதில் எது என்னுடையது ?
இது எனதில்லை என்று எல்லாம் விட்டு சென்று ஒரு முகம் வாய் பிளந்து என்னை பார்க்கிறது, உடலற்ற தலையிலிருந்து. என் பிள்ளைக்கு நான் வாங்கி வந்த சீனாக்காரனின் பொம்மையை மட்டும் அடையாளம் கண்டுகொண்டேன். மனம் வலித்தது உடலோடு சேர்ந்து. இந்த பொம்மை என்ன பாவம் செய்தது, இதுவும் சிதைந்து கிடக்கிறதே? எப்படியும் வாங்கி தருகிறேன் என நான் உறுதி தந்த பொம்மையது. உறுதியில் பாதி முடித்துவிட்டேன், இனி கொடுக்கத்தான் இயலாது. என் பிணம் வீடு சேரும் போது என் பிள்ளை பொம்மை உடைந்ததுக்கு அழுமோ இல்லை இனி வாங்கி தர நானில்லை என்றழுமோ. என்னை சுற்றி கிடந்த உடல்களில் எத்தனை உடல் பொம்மை வாங்கி வந்ததோ?
வழிந்து கிடந்த என் குடலை வாரி உள்ளே அழுத்துகிறான் ஒருவன் நான் உயிருடன் இருப்பதே தெரியாமல். எங்கும் எலக்ட்ரோனிக் அலறல்கள் எல்லோரும் வந்ததை உறுதி செய்கிறது. எப்படியும் காப்பாற்றி விடுவார்களா? இப்போதைக்கு ஒரே ஆசையும் ஒரே ஏக்கமும் அது தான். அள்ளி எடுத்து சென்றவன் என் அரையுடலைதான் அள்ளினான். பாகம் பாகமாய் பிரிந்துகிடந்த என்னை கண்டு எனக்கே நம்பிக்கையில்லை.
இனி வெறும் சதை குப்பையாய் நான். நினைவு தப்புதலுக்கு முன் என் கவலைகளை கொதிக்கவிட எத்தனிக்கிறேன். என்ன செய்வாள் என்னவள்? யார் கொஞ்சுவார் என் பிள்ளையை? அடுத்த மாதம் பாலுக்கும் மாளிகைக்கும் கொடுபதற்குள் ஆயுள் காப்பீடு வந்திடுமா? வாடகை பாக்கி வைத்தால் வைவானே வீட்டுக்காரன்? ஒரு சொல் தாங்கமாட்டாளே என் அருமை நாயகி?
என் கண்கள் சுட்டு நீர் வழிகிறது வெதுவெதுப்பாய். ஒரு வெடிகுண்டு என் உடலை மட்டுமல்ல என் குடியையும் சிதறடித்துவிட்டது. வெடிகுண்டு வைத்தவனே நான் எப்போதடா உன் மீது போர் தொடுத்தேன் ?

No comments:

Post a Comment