Saturday, 21 June 2014

மெய்சிலிர்க்கும் செயல்கள் செய்யக்கூடும் என்பதாலேயே நான் கடவுளாக வேண்டும்.
மேகங்களின் கூட்டு களிப்பை பசுவின் தோலிலும், உன் மெய்சிலிர்ப்பை கெளுத்தியின் வாயிலும்
அருவியின் விளிம்பில் தோன்றும் வானவில்லின் எஞ்சிய வண்ணங்களை உன் கனவுகளிலும்
குழந்தையின் பாத நிறத்தை உன் நாணங்களிலும் மின்னலின் மினுப்பை காக்கைகளின் சிறகிலும்
பாலூட்டி முடித்த அன்னையின் களி சிரிப்பை ஆழ்கடல் அமைதியிலும் தெளித்திட வேண்டும் நான் கடவுளாகி.
கடவுள் சிரித்தான் " இவை நான் முடித்தவை தானே" என்று
நான் சிரித்தேன் அவனை கண்டு " இவையனைத்தும் செய்ததை நான் மெச்சுகிறேன்,
எனினும் வருத்தம் உண்டு. படைத்த அனைத்தையும் ரசிக்கவல்லாது நீ அமரனாய் ஆகி போனாய்.
மரிக்க தகுதி கொண்ட என்னால் மட்டுமே ரசிக்க இயலும்.
என் கடைசி வரியும் கேட்டு தொலையடா
மரணம் தொலைத்த பாதகா. கண்ணிருள காதடைய மூச்சும் சிக்கி தவித்து கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் அகன்று அடங்கி போகும் மரிப்பை இறைவனுக்கும் அளிப்பேன் நான் கடவுளாகி"
தொழுது நின்றான் கடவுள் "நான் ஆண்டவனாகவே இருந்திருக்கலாம் கடவுளாய் இருப்பது கொடுமை .. கொன்று விடு" என்றான்.
நகைப்புடன் நானும் நகர்ந்துவிட்டேன்.

No comments:

Post a Comment