Monday, 29 July 2013

கொஞ்சம் கடவுள் கொஞ்சம் மிருகம்


அந்த நாலே நாலு அணில் குஞ்சுங்க
அவஸ்த்தையாக்கிடுச்சி இரவ...
கைக்கெட்டாத அந்த விளிம்பில கண்ண மூடிக்கிட்டு
அதுங்க பொரண்டது ஏனோ திகிலா இருந்திச்சி!
அப்பாருக்கிட்டே சொல்லி எறக்கி உடனும்ன்னு நெனச்சேன் .
நாய்க்குட்டி தூக்கியாந்ததுக்கே அம்மா வஞ்சிச்சி, இதுக்கும் வையும்!
ராப்பொழுது முழுக்க பயமா இருந்திச்சி.
கனா கூட கெட்ட கனா வந்துச்சி.
காலைல பாத்தா தூங்கி கெடந்துச்சிங்க.
செத்து போச்சோன்னு தோணிச்சி மத்தியானம் திருப்பி கண்ணா மூடிகிட்டு பொரண்டுச்சிவோ .
எலந்த பழம் வாங்கியாந்து அண்டாவ கவுத்து அது மேல ஏறி பரண்ல வச்சேன்.
தக்காளி, வெங்காயம், பூண்டு எல்லாம் வச்சேன்... செலது காணும்..செலது அங்கியே கிடந்துச்சி.
ரெண்டு மூனு நாள்ல குட்டிகளை காணும்.
அம்மா சொன்னிச்சி, "தாயி சொமந்துகிட்டு போயிருக்கும்!"
கொஞ்ச நாள்ல எங்க கொய்யா மரத்துல நாலஞ்சி அணிலுங்க
மசமசன்னு ஓடிகிட்டு திரியும்... அந்த குஞ்சுகளா தான் இருக்கும்னு நெனைக்கிறேன்.
அப்பறம் அணிலு நெறைய ஆகி போச்சி .. எது அந்த குட்டிங்கன்னு தெரியல.
அண்ணன் ஒரு நாள் அப்பா சைக்கிளு ட்யூப வெட்டிகிட்டு இருந்துச்சி.
அப்பாவோட பழைய செருப்பு தோல வெட்டிகிட்டு இருந்துச்சி...
அது கவைல மெல்லிசா வெட்டின ட்யூப சுத்துருதே அழகு..!
விசுவிசுன்னு சுத்திச்சி.
கவ முழக்க சுத்தி அழகா செஞ்சிருச்சி.
சின்ன கருங்கல் வச்சி நான் இழுத்து பார்த்தேன். உண்டிகோலு !
மொத அடிச்ச எடத்துக்கு போல... தெருவெல்லாம் கல்லு பொறுக்கி.. எங்க ஆச்சியோட சுருக்கு பையில போட்டு வச்சிகிட்டேன்.
வாழமரந்தான் குறி ... இப்போ நல்லா வந்துச்சி..
காலைல கெளம்புனா ..அம்மா வந்து காத புடிச்சி இழுத்தார வரைக்கும் உண்டிகோலு எடுத்துகிட்டு பிள்ளமாரு தோட்டதிலியே கெடப்பேன்.
தங்கவேலு தாத்த சொல்ற வேட்டை கதை எல்லாம் வாய பொளந்துகிட்டு கேப்போம்.
இப்போம் குறி மாறிச்சி ... செவந்தி பூவையா பாத்து பாத்து குறிவச்சேன் .
பட்டுன்னு தெறிக்கும் செவந்தி பூவு.
கட்டபுளிதான் ஓணான் அடிகலாம்னான்.
வலமேட்டுக்கிட்டு நானும் கட்டபுளியும் எருக்கஞ்செடில தலையாட்ற ஓணான் குறிப்பாத்தோம் .
செலது தொப்புன்னு விழும், செலது ஓடிபுடும் .
விழுந்தத கொத்து கட்டி வீட்டுக்கு தூக்கியாந்தேன்.அப்பா வஞ்சிகிட்டு மல்லிசெடிக்கிட்ட பொதச்சாங்க அத, "அடிக்கிறது தான் அடிக்கிற, தின்றா மாதிரி அடிக்கறது தானே?"
அடுத்த நாளு கட்டபுளியாண்ட வாங்கியாந்த "பால்"சை எடுத்துகிட்டு எங்க கொய்யா மரத்தாண்ட நின்னேன்..
தேடிகிட்டே இருந்தேன்..
வெறும் தவுட்டு குருவியா தென்பட்டிச்சிவோ !
தோ! மாட்டிகிச்சி.
உச்சி கெளையாண்ட ரெண்டு அணிலு. மசமசன்னு ஓடிக்கிட்டு.
குறி மாட்டாது.
நின்னுக்கிட்டே இருந்தேன்.
தலைக்கீழ தொங்கி ரெண்டு கையாலையும் கொய்யாவ புடிச்சி கடிச்சது.
பருக்குன்னு உட்டேன் உண்டிகோல .
பொத்துன்னு உழுந்துச்சி.
ஓடி போயி தூக்கியந்தேன்.
இன்னொன்னு கொஞ்ச நேரங்கழிச்சி சிக்கிச்சி.
அண்ண சொன்னுச்சி அம்மாவாண்ட , "வால வையிம்மா! ப்ரெச்சு செய்யிலாம் "
அம்மா அனில ஆஞ்சிக்கிட்டு சரின்னு தலையாட்டிச்சி!
 

வைரி

முன்டாசுக்கட்டும் முறுக்கு மீசையும் 
மட்டும் ரௌத்திரமில்லை,
நாடு தாண்டி சென்று வெள்ளையனுக்கேதிராய் 
படைத்திரட்டியது மட்டும் வீரமில்லை.
ஆள்பவனுக்கெதிராய் அவன் மன்றத்தில் 
குண்டு வீசியது மட்டும் எழுச்சி இல்லை 
அடித்த வலியை பொறுத்துக்கொண்டு 
அடுத்த கன்னம் காட்டியது மட்டும் எதிர்ப்பில்லை.
கூடிக்களித்த வீடு நொருங்கி கிடக்க 
கட்டிய மனையாள் கருகி கிடக்க 
சீராட்டிய பிள்ளையின் சிதைந்த உடலை
பொறுக்கி தேத்தி
கடைசியாக கண்ணீர் விட்டு.
முத்தமிட்ட இதழில் பதிந்த நாறும் குருதியை
புறங்கையில் துடைத்துவிட்டு
பிறந்த மண்விட்டு செல்ல மறுப்பு தெரிவிக்கும் ஒரு செயலில்
பாரதி, போஸ்,பகத்சிங், காந்தி எல்லாம் ஒன்றாய் நிற்பரோ?!!!

பத்து நெலா

ஒரு சொட்டு மழை வாங்கி 
சிப்பிக்குள்ள மூடி வச்சி 

மாசம் தேயும் நெலா 
தேயாம தான் தவிச்சி 

கோயில் செல அதுவும் 
தேகம் தான் கொலஞ்சி

மண்டபத்து தூண் வீங்கி 
மலர் ரெண்டும் தான் வீங்கி

புளிச்சதேல்லாம் நான் உண்டு
பத்து நெலா தேயக்கண்டு

தேளா உரு மாறி
தேகம் பிளக்கையிலே

கதறி தான் அழுது
உதிரம் சிதற கண்டு

முத்தாய் நான் வடித்த
முத்தாரமே கண்ணுறங்கு !

Sunday, 28 July 2013

ஆனை சங்கிலி

மெச்சும் மேதினியும் 
மொய்யிருக்கும் மேட்டுக்குடியை 
ஏய்ச்சும் பாமரன் என பறைந்துனை 
ஏழ்மைக்காட்டி 
நினதறிவை துலாவும்!

மட்டும் படுமோ 
மடமையறுத்த மாகுணம்!
கட்டுண்டு கிடக்க 
கால்பிணைத்த களிறல்ல 
மானிடனே!

கிணத்து மீன்

தொட்டிக்குள்ள துவண்ட மீனு 
கிணத்து வாசம் தேடுச்சாம்!
கிணத்து குழியில் வாழ்ந்த மீனு 
குளத்த சேர ஏங்குச்சாம்.
குளத்து மீனும் ஏறி வந்து ஏரி சேர, 
ஏரி மீனு பனம்மரத்தில் ஏறி பாத்துச்சாம்!

ரெக்கை கட்டி பறந்து பாக்க 
மீனு துள்ளி எழும்புச்சாம் 
ஒத்த காலில் நின்ன கொக்கு 
வாயில் கவ்வி பறந்துச்சாம்
கொக்கு வாயில் சிக்கி மீனும்
வானில் ஏறி பறக்குதே
வாழ்ந்த குட்டை நல்லதென்று
இப்போ எண்ணி மருகுதே!

தாகம் நீ !

இரவின் ஆழம் தோய்ந்த விழியோ 
மாலையின் மயக்கம் வழியும் பார்வையோ 
சுத்த துறவியும் மயங்கும் நாணமோ
இது இந்திரனும் அடையா சொர்கமோ 

கனவின் துவக்க கருவோ நீ 
காணா நிறத்தின் முளையோ நீ
தெறிக்கும் துளியின் அடரோ நீ 
துடிக்கும் உயிரின் தொடரோ நீ 

வலிக்கும் இழப்பில் வழுக்கா வீரம்
துளிர்க்கும் முனையின் வணங்கா தீரம்
மினுக்கும் விழியின் துடிக்கும் வேகம்
சறுக்கும் வாழ்வின் தவிக்கும் தாகம்!

இலக்கணப்பிழை

இலக்கணங்கள் பிழையானதே 
உனது விழி சிறையானதே 
பிறை வளர்ந்து நிலவானதே 
இளம் பருதி கடல் மூழ்குதே!

அதிரல் அது மரமானதே 
அதரங்களும் சுமையானதே 
அதழ் இரண்டு இமையானதே 
ஆவலிகள் இசையானதே!

ஆர்பதம் அது மலர் தேடுதே
ஆனகங்கள் ஆர்பரிக்குதே
ஆற்றின் அவா அணை தாண்டுதே
இலிர் இதயம் இதை தாங்குமோ !  

வருணாசிரமம்

நாய்க்கும் ஜாதி இருக்கு !
நல்ல ஜாதியாம்,
கழுத்துல பட்டி கட்டி 
எசமான் கூட ஏசில தூங்குது.
பீப்பள்ளையாம் 
தேடி தின்னுட்டு தெருவுல தூங்குது.
நல்ல ஜாதிக்கு ஜோடி தேட 
எசமான் போறார் தெருத்தெருவா.
பீப்பள்ளை ஜோடிப்போட்டா 
நடுத்தெருவுல கல்லடி.
நல்ல ஜாதியும் சில நேரத்துல
தேடி தின்னுட்டு தெருவுல தூங்குது
பீப்பள்ளையும் சில நேரத்துல
கழுத்துல பட்டிக்கட்டி
எசமான் கூட ஏசில தூங்குது.
வருணாசிரமம் நாய்க்கும் உண்டு!

ஒரு வழி பயணம்

ஆழியடைய ஓடும் ஆறாம் வாழ்க்கை 
பயணங்கள் வளைந்து நெளிந்தே இருக்கும் 
எனினும் ஒரு பொழுதும் திரும்ப வாய்ப்பில்லை!

பெண் காமம்

முனை திறந்த முகைப்போல 
மனம் திறக்க மறுக்கின்றாய் 
முகிலாடும் மலைபோல 
இரும்மாப்பாய் இருக்கின்றாய்


வேண்டும் பகை

சறுக்கும் தருணந்தோறும் முறுக்கியெழும் வைரியுள்ளோன் 
இமை பொழுதும் இமைக்க இல்லான்


ஆதலால் காதல் செய்வீர்!!

இங்கே ஒருவன் கூவிக்கொண்டிருக்கிறான் 
ஒரு பெண்ணை ஏலம் விட்டு.
வாங்க எத்தனிப்பவனும் 
வாங்க வேண்டாமென்பவனும் 
அவளின் அங்கம் முதல் வலிமை வரை உற்று நோக்கினர் 
அவள் மட்டும் தலை குனிந்து.
விம்மி நிற்கும் மார்பு எவன் கவனத்தையும் ஈர்த்துவிடாமலிருக்க 
தோள்களை குறுக்கிக்கொண்டிருந்தாள் அவள்.
உயர்ந்த இடத்தில் அவளை நிறுத்தி வைத்திருந்தான் ஏலக்காரன்,
அவள் எல்லோர் பார்வையிலும் படுவதற்காக மட்டும்.
உரக்க கத்திக்கொண்டிருந்தான் ஏலக்காரன், நிற்பவள்
உள்ளே எழும் மனத்தின் பேரலறல்கள் கேட்டுவிட கூடாதெனவோ!
நடு சபையில் ஆட வேசியே வேண்டாதிருக்கும் சமூகம் வேண்டும் நான்
மனையாள் தேட சபை நாடுதளையும் அனுமதிப்பேனோ ?
இனியும் பெண்ப் பார்த்தல் என பிதற்றாதே பெரும் நட்பே.
பெண்மையை அடைதலிலும் அழகாம் நாடுதல்.
ஆதலால் காதல் செய்வீர்!!

முட்டை ஓட்டில் முதல் விரிசல்

வெளிச்சமற்ற என் உலகில் என் வீடு மட்டுமிருந்தது.
அந்த ஒத்தையறை வீட்டில் நானும் என் அம்மா என்ற பாடியுமாகிய அவளும் வசித்து வந்தோம். 
நீல நிற புல்வெளியொன்று உண்டு என் வீட்டி முன்பு.
அதில் என் அம்மா என்ற பாட்டி விரிக்கும் கண் வேலிக்குள் விளையாடி கொள்வது என் வழக்கம்.
தாண்டி போனால் எங்கோ இருக்கும் திரவதிடலாடும் காட்டில் வாழும் கோர பற்களுடைய மிக கொடூர ராட்சதர்கள் என்னை கவ்வி கொள்வார்கள் என என் அம்மா என்ற பாட்டி வழியறிந்தேன்.
வெளிச்சம் வேண்டுமென காதல் கொள்ளும் போது சொல்வாள் அம்மா, வெளிச்சம் அந்த அடர்த்த காட்டின் பின் நிற்கும் உச்சி இல்லா மலையின் உச்சியிலோ அல்லது கடக்க முடியா அதன் மறு புறத்திலோ உண்டென.
இருள் கவிழ்ந்தென் கனவை கெடுக்கும் போது நான் காதல் கொள்வேன், ஒளியின் மீது .
நான் காதல் கொள்ளும் தருணம் எப்போதும் என் வீட்டின் புறத்திலுள்ள அடியற்ற கிணற்றின் வழியே ஏறி வருவான் ஸ்பைடர் மேன் ஒருவன்.
கிணற்றின் மதில் மேல் சுற்றி திரிவான்.
கிணற்றின் அகண்ட வாயின் ஓரம் அடித்திருக்கும் இராட்டினக்கட்டையில் வலையை பீய்ச்சி ஊஞ்சல் செய்வான்.
ஊஞ்சலில் அவன் காற்றில் மிதந்தாடும் அழகில் நான் சொக்கி போவேன்.
ஸ்பைடர் மேன் வெளிப்படும் ஒவ்வொவொரு தருணத்திலும் அம்மா என்ற பாடி என்னை கிளிக்கூண்டிலோ இல்லை கோழிக்கூண்டிலோ போட்டடைப்பாள்.
அவன் என்னை மாய புன்னகையில் சிறைப்பிடித்து கவர்ந்து சென்றுவிடுவான் என்றுரைப்பாள்.
முக மூடியணிந்த அவனின் மோகப்புன்னகையில் நான் சொக்கி கிடந்ததென்னவோ உண்மையே.
என் அம்மாவாகிய பாட்டி இல்லாத ஒரு தருணத்தில் நான் ஒளிமேல் காதல் வயப்பட
மோகன புன்னகை வசீகரிக்க தோன்றினான் ஸ்பைடர்மேன் எங்கள் வீட்டு அடியில்லா கிணற்றின் கட்டை மேல்.
கால் விண்ணில் ஏற அவன் ஊஞ்சலை இழுத்தாடினான்.
கைநீட்டி எனை அழைத்தான்.
நானும் இப்போது பறந்தேன் அவன் ஊஞ்சலில்.
கண் மூடி ஆடினேன் ஸ்பைடர்மேன் ஊஞ்சலில்...
எங்கோ தொலைவில் பாட்டியாகிய அம்மாவின் அழுகுரல் வெறும் எதிரொலியாய் என் காதில் உரச நான் கண் திறந்தேன்.
ஸ்பைடர்மேன் நான்கு கால்களில் கிணற்றின் உள் சுவற்றில் ஊர்ந்து கொண்டிருந்தான்.
நான் கழுத்து வளைய அண்ணாந்து பார்த்தேன் .....
அம்மா கோடி ஒளிவருட தூரத்தில் கிணற்றின் வாயருகே நின்று என்னை திரும்பி வந்துவிடும்படி விசும்பினாள்/.
நான் அடியில்லா கிணற்றின் அதளத்தை நோக்கி சென்றிருருந்தேன் வெகு ஆழத்தில்.
அவள் சொன்னது போல் ஸ்பைடர்மேன் என்னை கவர்ந்துவிட்டான் என வெம்பினேன்.
அவனை ஆற்றாமையுடன் பார்த்தேன்.

"எனக்கிதில் பங்கில்லை.. நீ தானே மூலமே" என்பதை போல் தோள் குலுக்கினான் ஸ்பைடர்மேன்.
இன்னும் ஆழம் நோக்கி தலைகீழாக ஊர்ந்து சென்று ... அறியமுடியா இருட்டினுள் மறைந்தும் போனான்.
யாருமற்ற அமைதியில் நானும் நானும் மட்டும் ஆடாத ஊஞ்சலில் அமர்ந்திருந்தோம்.
கண் மூடி லயித்தேன்
மெல்ல அம்மாவாகிய பாட்டியின் குரல் மறைந்தது....
படைத்ததும் அழித்ததும் நானே என புரிந்தேன்.
ஸ்பைடர்மேன் ஊர்ந்து சென்றது என் தொண்டைகுழி வழியே ...
அவன் என் வயிற்றை அடைந்து செரிப்பட்டு மலமாய் மிச்சபடுவான்.
எங்கோ இருக்கிறதென நான் நம்பி இருந்த வெளிச்சம் என்னுள்ளேயே மண்டி கிடந்தது பல்லாயிரம் கோடி ஆண்டாக.
வேலியே தேவை இல்லாத போது போட வேண்டிய அம்மாவாகிய பாட்டியும் காணாமல் போனாள் .
திரவதிடலும் அதிலாடும் அடர்ந்த காட்டு ராட்சதர்களும் உச்சி இல்லா மலையும் என் வயிற்றை அடைந்து ஸ்பைடர்மேன் போலவே செரித்து போயின.
என்னுள் தோன்றி படர்ந்த வெளிச்சத்தில் எரிந்து போயின என் தேவையற்ற படைப்புகள்.
என் கால்களில் மென்மையாக குறுகுறுத்தது பசும் புல்.
என் வனமெங்கும் பழத்தோட்டம். குயில்க்கூட்டம்.
வண்ணத்து பூச்சிகளால் நிறைந்து கிடந்தது என் மனது.
நாசி வழி சில்லென நுழைய மார்பு புடைக்க இழுத்தேன்
முதன் முதலாக என் மூச்சை
என் நெஞ்சுக்கூடெங்கும் சுதந்திரம்!
விழந்தது என் முட்டை ஓட்டில் முதல் விரிசல்!

பசி

ஒரு அரசனுக்கும் அரசியல்வாதிக்கும் நடக்கும் வாதம் 
அரசியல்வாதி நாடமைப்பு கட்டமைப்பு போர் என்று எல்லா துறையிலும் நீண்ட உரையை ஆற்றி முடிக்கிறார் 
அரசன கேட்கிறான்: ஒரு மானை புலி துரத்துகிறது. இதில் எது வெற்றி பெற வாய்ப்பு அதிகம்?
அரசியல்வாதி : மான் தான் ஜெயிக்கும் .
அரசன்: ஏன்?
அரசியல்வாதி : ஏனென்றால் புலி உணவுக்காக ஓடுகிறது மான் உயிருக்காக ஓடுகிறது.
அரசன் சிரிக்கிறான் 
அரசன்: நீர் சொன்ன வாதத்தின் அடிப்படையில் புலி என்ற ஒரு இனம் அழிந்து ஆயிரம் ஆண்டுகளேனும் ஆகி இருக்க வேண்டும்... நடைமுறையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் மானை புலி பிடித்துவிடுகிறது.
அரசியல்வாதி: ஏன்?
அரசன் : ஏனென்றால் மான் பயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது , புலி பசியில். பயத்தை பசி எப்போதும் வென்று விடும். பார்வையில் தான் உள்ளது அரசியல்வாதி வெற்றி. அதனால் தான் நீ அவையில் அமர்ந்துகொண்டு போர்களை ஆய்கிறாய்... நான் போர் களத்தில் போர் புரிந்து கொண்டிருக்கிறேன். 

வல்லினம்


முனை துளிர்க்கும் புல்லின் நுனிப்பரப்பின் மீது
மனைக்கட்டி வாழும் ஒரு மழைத்துளியின் ஈரம்
ஞாலம் பரவும் ஞாயிறின் பெருங்கரங்கள் முடக்கி
தன்னுள் குடியேற்றிடும் சிலகணம் சொல்லிடும்
வல்லினம் தோற்கும் மெல்லினத்தின் வன்மை.

ஆச்சரியக்குறி

போர் களத்தில் காலில் முள் தைக்கத்தான் செய்யும் 
அது முள் ..அதனால் கால் வரை தான் எட்ட முடியும்.
ஆனால் அருவாள் கழுத்துவரை எட்டும்.
முடிவு நம் கையில் தான் வலியை பொறுக்க போகிறோமா?
இல்லை தோல்வியை பொறுக்க போகிறோமா என்பது.
வரலாறு படைத்தவன் வலியை பொறுத்துக்கொண்டான்.
ஒரு போதும் தோல்வியை பொறுத்து கொள்ளவில்லை!
வளைந்தே நின்றால் கேள்விகுறியாகிவிடுவாய் 
நிமிர்ந்து பார் ஆச்சரியக்குறி ஆகிவிடுவாய்

யாவர்க்கும் பெய்யும் மழை

நாட்டுபுரத்தை கழுவி நிரப்பி பசேலென வண்ணம் தீட்டும் மழை 
நகரத்தை கசக்கி தூக்கி எறிந்துவிட்டு போகிறது...
குற்றம் மழையிடம் ஒரு போதும் இல்லை...
யாவர்க்கும் பெய்யும் மழை

விரும்பி

காதல் எங்கிருந்து தொடங்குகிறது என தெரிந்திருந்தால் தவிர்த்துவிட கூடும் 
வேதனையின் முனையில் முளைவிடும் சில நேரம் 
வேண்டுதலின் முடிவில் துளிர்விடும் சில நேரம் 
தேவைகளின் திருப்பத்தில் சந்திப்போம் சில நேரம் 
தேடுதலின் நடுவே சிக்கும் சில நேரம் 
உடலின் வேட்கை சில நேரம் 
வயதின் ஊக்கம் சில நேரம் 
தானாய் தோன்றுவது தான் ஒரு போதும் இல்லை 
பழகிவிட்ட காதல் பாசமாய் மாறியதும் 
இறந்துவிட்டதென புதைத்து விடுவோம்.
அன்றி செய்யும் அன்பு என்றுமே இருந்ததில்லை காதலில்.
சுயகாமம் மேலிட தோன்றும் அயர்ச்சியை காதலென கொண்டு
கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தோம்
குழம்பி தெளிகையில் தெரிகிறது... காதலில் புனிதமென ஒன்றுமே இல்லை.
காதல் எங்கிருந்து தொடங்குகிறது என தெரிந்திருந்தால் தவிர்த்துவிட கூடும் .



ஆயுதம்

எதிரில் நிற்பவன் சகோதரன் என்றால் என்னிடமிருக்கும் எண்ணிலடங்க அம்புகளும் இருதென்ன லாபம் .?
எதிரில் நிற்பவன் எதிரி எனில் ஆயுதம் இல்லாமல் என் ஆணி வேறே ஆடி இருப்பினும் வெறும் எச்சை போதும் காரி மொழிய


சுடரினிடை இருள்

இரவின் மிச்சப்பட்ட சிதறல்களாய் காக்கைகள் 
கருப்பு பூசி அலைகின்றன வானமெங்கும்.
எனக்கும் அக்காகங்களுக்கும் இணையான விடயம் ஏராளம்.
தேடலில் துவங்கி திருட்டு தனம் வரை.
மனமெனும் வனத்தில் என் முரண்களும் அலையும் 
காக்கை போல.
உடலெங்கும் இரவை பூசியபடி!

ஈட்டி


அவன் பணக்காரன் இல்ல
அன்னாடம் காய்ச்சி
அவனுக்கு பெருசா ஒன்னும் தெரியாது
உழவ தவிர
போன மகசூலே ஒன்னும் மிஞ்சுல
பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருப்பான்
இல்ல புள்ளைக்கி படிக்க பணம் வேண்டிருக்கும்
இல்ல இன்னும் வேற எதாவது தேவை இருக்கும் .
எதையாவது அடமானம் வச்சி
இல்ல கடனை வாங்கி வெதைய தூவுவான்.
தண்ணியில்ல கரண்ட் இல்ல மழை இல்ல
இன்னும் நெறைய இல்ல ...
உசுர விடுவான் கழனில...
உழைப்பான் .
பயிரும் கொஞ்சம் தலை தூக்கும்.
பசபசன்னு வரும்.
எல்லா கஷ்ட்டமும் முடிஞ்சிதுன்னு கனவு காணுவான்.
புள்ள பொண்டாட்டிய காப்பாத்திடுலாம்னு நம்புவான்.
எங்கிருந்தோ ஒரு மழை
ஒரு புயல்
ஒரு வெள்ளம் வரும்.
எல்லா கனவையும் அழிச்சிடும்.
ஒரு நெல்மநிக்கூட மிஞ்சாது.
சாவு பக்கத்துலேயே நிக்கும் ஒர்த்தன் ரெண்டு பேர்
செத்துகூட போய்டுவான்.
ஆனா எல்லாரும் சாவமாட்டான்.
புயலுக்கூட அவ்ளோ வீரியம் கிடையாது
ஆனா அவன் வீரியம் ஜாஸ்த்தி.
அடுத்த வாட்டி அவன்தான் மொதல்ல வெதைய தூவுவான், நம்பிக்கையோட
இல்லேன்னா நாம எங்க சோறு தின்றது.
அவன்கிட்ட கத்துக்குங்க போராட்டத்தை

Thursday, 25 July 2013

நான் ஆண்


ஆணென்று கொண்டதால் 
என் பக்கம் யாவும் அழிந்தே விட்டது 
அழக்கூடாதென்பதில் அழுத்தம் காட்டி 
என் கண்ணீர் என்னுள் கடலாய் ஆர்பரிக்கிறது...
பத்து மாதம் சுமந்துவிட்டவளின் பெருமைகளின் பெருவீச்சில் 
காலமெல்லாம் தன்னையே கரைத்த என் கண்ணியம் கருமிருட்டில் கிடக்கின்றது.
எனக்கென்ன வண்ணம் பிடிக்குமென எனக்கு தெரிந்ததில்லை
என் சகோதிரிகள் மனைவி பிள்ளைகளின் நிறங்கள் நிரம்பி என் ஞாபகம் வழிகின்றது
என் பிள்ளைகளுக்கு வாரத்திற்கு ஒரு சினிமாவிற்காக
மாலையில் என் வடை சிகிரெட் டீ காணாமல் போனது.
முப்பதுகளிலேயே முதுமை அடைந்தேன்
கவட்டையில் நான் அடக்கியிருக்கும் பையில்
பணம் ஏராளம் ....
அதில் எனக்கென்று எதுவும் வைத்ததில்லை.
என் அப்பன் இன்று சிரிகின்றான் என்னை பார்த்து
சகோதரனுக்கு பங்காளியானேன்
மகனுக்கு எதிரியானேன்
மகள் பிரிந்து செல்கையிலும் அழாத தூணானேன்
என் அறிவுரைகள் தொனதொனப்பாகின
அவர் அப்படிதான் என பட்டமும் கிடைத்தது.
என் வீட்டில் எனக்கென்று ஒரு சிறு இடமும் கிடைத்தது
ஓடிய உடல் இன்று ஒவ்வொன்றாய் வலிக்கிறது.
பேரக்குரல்களை போட்டு மெழுகி கொள்கிறேன் என் வலிகளை
அவர் மட்டும் கொஞ்சம் தெருவுசாய் இருந்திருந்தால் ஊரில் பாதியை வளைத்திருக்கலாம் என்ற பாடல் மட்டும் என் தேசிய கீதமானது.
இன்று இது பழகியும் விட்டது 

நான் ஆண்

முனை

நவை தீர்த்து நிறம் புடைப்போம்
மிளைகளைந்து ஞாலம் படைப்போம்
சூலெய்திதுயர் துடைப்போம்
யாம் உயிர் துறந்தேனும் உயிர்த்திருப்போம்