Sunday, 28 July 2013

முட்டை ஓட்டில் முதல் விரிசல்

வெளிச்சமற்ற என் உலகில் என் வீடு மட்டுமிருந்தது.
அந்த ஒத்தையறை வீட்டில் நானும் என் அம்மா என்ற பாடியுமாகிய அவளும் வசித்து வந்தோம். 
நீல நிற புல்வெளியொன்று உண்டு என் வீட்டி முன்பு.
அதில் என் அம்மா என்ற பாட்டி விரிக்கும் கண் வேலிக்குள் விளையாடி கொள்வது என் வழக்கம்.
தாண்டி போனால் எங்கோ இருக்கும் திரவதிடலாடும் காட்டில் வாழும் கோர பற்களுடைய மிக கொடூர ராட்சதர்கள் என்னை கவ்வி கொள்வார்கள் என என் அம்மா என்ற பாட்டி வழியறிந்தேன்.
வெளிச்சம் வேண்டுமென காதல் கொள்ளும் போது சொல்வாள் அம்மா, வெளிச்சம் அந்த அடர்த்த காட்டின் பின் நிற்கும் உச்சி இல்லா மலையின் உச்சியிலோ அல்லது கடக்க முடியா அதன் மறு புறத்திலோ உண்டென.
இருள் கவிழ்ந்தென் கனவை கெடுக்கும் போது நான் காதல் கொள்வேன், ஒளியின் மீது .
நான் காதல் கொள்ளும் தருணம் எப்போதும் என் வீட்டின் புறத்திலுள்ள அடியற்ற கிணற்றின் வழியே ஏறி வருவான் ஸ்பைடர் மேன் ஒருவன்.
கிணற்றின் மதில் மேல் சுற்றி திரிவான்.
கிணற்றின் அகண்ட வாயின் ஓரம் அடித்திருக்கும் இராட்டினக்கட்டையில் வலையை பீய்ச்சி ஊஞ்சல் செய்வான்.
ஊஞ்சலில் அவன் காற்றில் மிதந்தாடும் அழகில் நான் சொக்கி போவேன்.
ஸ்பைடர் மேன் வெளிப்படும் ஒவ்வொவொரு தருணத்திலும் அம்மா என்ற பாடி என்னை கிளிக்கூண்டிலோ இல்லை கோழிக்கூண்டிலோ போட்டடைப்பாள்.
அவன் என்னை மாய புன்னகையில் சிறைப்பிடித்து கவர்ந்து சென்றுவிடுவான் என்றுரைப்பாள்.
முக மூடியணிந்த அவனின் மோகப்புன்னகையில் நான் சொக்கி கிடந்ததென்னவோ உண்மையே.
என் அம்மாவாகிய பாட்டி இல்லாத ஒரு தருணத்தில் நான் ஒளிமேல் காதல் வயப்பட
மோகன புன்னகை வசீகரிக்க தோன்றினான் ஸ்பைடர்மேன் எங்கள் வீட்டு அடியில்லா கிணற்றின் கட்டை மேல்.
கால் விண்ணில் ஏற அவன் ஊஞ்சலை இழுத்தாடினான்.
கைநீட்டி எனை அழைத்தான்.
நானும் இப்போது பறந்தேன் அவன் ஊஞ்சலில்.
கண் மூடி ஆடினேன் ஸ்பைடர்மேன் ஊஞ்சலில்...
எங்கோ தொலைவில் பாட்டியாகிய அம்மாவின் அழுகுரல் வெறும் எதிரொலியாய் என் காதில் உரச நான் கண் திறந்தேன்.
ஸ்பைடர்மேன் நான்கு கால்களில் கிணற்றின் உள் சுவற்றில் ஊர்ந்து கொண்டிருந்தான்.
நான் கழுத்து வளைய அண்ணாந்து பார்த்தேன் .....
அம்மா கோடி ஒளிவருட தூரத்தில் கிணற்றின் வாயருகே நின்று என்னை திரும்பி வந்துவிடும்படி விசும்பினாள்/.
நான் அடியில்லா கிணற்றின் அதளத்தை நோக்கி சென்றிருருந்தேன் வெகு ஆழத்தில்.
அவள் சொன்னது போல் ஸ்பைடர்மேன் என்னை கவர்ந்துவிட்டான் என வெம்பினேன்.
அவனை ஆற்றாமையுடன் பார்த்தேன்.

"எனக்கிதில் பங்கில்லை.. நீ தானே மூலமே" என்பதை போல் தோள் குலுக்கினான் ஸ்பைடர்மேன்.
இன்னும் ஆழம் நோக்கி தலைகீழாக ஊர்ந்து சென்று ... அறியமுடியா இருட்டினுள் மறைந்தும் போனான்.
யாருமற்ற அமைதியில் நானும் நானும் மட்டும் ஆடாத ஊஞ்சலில் அமர்ந்திருந்தோம்.
கண் மூடி லயித்தேன்
மெல்ல அம்மாவாகிய பாட்டியின் குரல் மறைந்தது....
படைத்ததும் அழித்ததும் நானே என புரிந்தேன்.
ஸ்பைடர்மேன் ஊர்ந்து சென்றது என் தொண்டைகுழி வழியே ...
அவன் என் வயிற்றை அடைந்து செரிப்பட்டு மலமாய் மிச்சபடுவான்.
எங்கோ இருக்கிறதென நான் நம்பி இருந்த வெளிச்சம் என்னுள்ளேயே மண்டி கிடந்தது பல்லாயிரம் கோடி ஆண்டாக.
வேலியே தேவை இல்லாத போது போட வேண்டிய அம்மாவாகிய பாட்டியும் காணாமல் போனாள் .
திரவதிடலும் அதிலாடும் அடர்ந்த காட்டு ராட்சதர்களும் உச்சி இல்லா மலையும் என் வயிற்றை அடைந்து ஸ்பைடர்மேன் போலவே செரித்து போயின.
என்னுள் தோன்றி படர்ந்த வெளிச்சத்தில் எரிந்து போயின என் தேவையற்ற படைப்புகள்.
என் கால்களில் மென்மையாக குறுகுறுத்தது பசும் புல்.
என் வனமெங்கும் பழத்தோட்டம். குயில்க்கூட்டம்.
வண்ணத்து பூச்சிகளால் நிறைந்து கிடந்தது என் மனது.
நாசி வழி சில்லென நுழைய மார்பு புடைக்க இழுத்தேன்
முதன் முதலாக என் மூச்சை
என் நெஞ்சுக்கூடெங்கும் சுதந்திரம்!
விழந்தது என் முட்டை ஓட்டில் முதல் விரிசல்!

No comments:

Post a Comment