Monday, 29 July 2013

கொஞ்சம் கடவுள் கொஞ்சம் மிருகம்


அந்த நாலே நாலு அணில் குஞ்சுங்க
அவஸ்த்தையாக்கிடுச்சி இரவ...
கைக்கெட்டாத அந்த விளிம்பில கண்ண மூடிக்கிட்டு
அதுங்க பொரண்டது ஏனோ திகிலா இருந்திச்சி!
அப்பாருக்கிட்டே சொல்லி எறக்கி உடனும்ன்னு நெனச்சேன் .
நாய்க்குட்டி தூக்கியாந்ததுக்கே அம்மா வஞ்சிச்சி, இதுக்கும் வையும்!
ராப்பொழுது முழுக்க பயமா இருந்திச்சி.
கனா கூட கெட்ட கனா வந்துச்சி.
காலைல பாத்தா தூங்கி கெடந்துச்சிங்க.
செத்து போச்சோன்னு தோணிச்சி மத்தியானம் திருப்பி கண்ணா மூடிகிட்டு பொரண்டுச்சிவோ .
எலந்த பழம் வாங்கியாந்து அண்டாவ கவுத்து அது மேல ஏறி பரண்ல வச்சேன்.
தக்காளி, வெங்காயம், பூண்டு எல்லாம் வச்சேன்... செலது காணும்..செலது அங்கியே கிடந்துச்சி.
ரெண்டு மூனு நாள்ல குட்டிகளை காணும்.
அம்மா சொன்னிச்சி, "தாயி சொமந்துகிட்டு போயிருக்கும்!"
கொஞ்ச நாள்ல எங்க கொய்யா மரத்துல நாலஞ்சி அணிலுங்க
மசமசன்னு ஓடிகிட்டு திரியும்... அந்த குஞ்சுகளா தான் இருக்கும்னு நெனைக்கிறேன்.
அப்பறம் அணிலு நெறைய ஆகி போச்சி .. எது அந்த குட்டிங்கன்னு தெரியல.
அண்ணன் ஒரு நாள் அப்பா சைக்கிளு ட்யூப வெட்டிகிட்டு இருந்துச்சி.
அப்பாவோட பழைய செருப்பு தோல வெட்டிகிட்டு இருந்துச்சி...
அது கவைல மெல்லிசா வெட்டின ட்யூப சுத்துருதே அழகு..!
விசுவிசுன்னு சுத்திச்சி.
கவ முழக்க சுத்தி அழகா செஞ்சிருச்சி.
சின்ன கருங்கல் வச்சி நான் இழுத்து பார்த்தேன். உண்டிகோலு !
மொத அடிச்ச எடத்துக்கு போல... தெருவெல்லாம் கல்லு பொறுக்கி.. எங்க ஆச்சியோட சுருக்கு பையில போட்டு வச்சிகிட்டேன்.
வாழமரந்தான் குறி ... இப்போ நல்லா வந்துச்சி..
காலைல கெளம்புனா ..அம்மா வந்து காத புடிச்சி இழுத்தார வரைக்கும் உண்டிகோலு எடுத்துகிட்டு பிள்ளமாரு தோட்டதிலியே கெடப்பேன்.
தங்கவேலு தாத்த சொல்ற வேட்டை கதை எல்லாம் வாய பொளந்துகிட்டு கேப்போம்.
இப்போம் குறி மாறிச்சி ... செவந்தி பூவையா பாத்து பாத்து குறிவச்சேன் .
பட்டுன்னு தெறிக்கும் செவந்தி பூவு.
கட்டபுளிதான் ஓணான் அடிகலாம்னான்.
வலமேட்டுக்கிட்டு நானும் கட்டபுளியும் எருக்கஞ்செடில தலையாட்ற ஓணான் குறிப்பாத்தோம் .
செலது தொப்புன்னு விழும், செலது ஓடிபுடும் .
விழுந்தத கொத்து கட்டி வீட்டுக்கு தூக்கியாந்தேன்.அப்பா வஞ்சிகிட்டு மல்லிசெடிக்கிட்ட பொதச்சாங்க அத, "அடிக்கிறது தான் அடிக்கிற, தின்றா மாதிரி அடிக்கறது தானே?"
அடுத்த நாளு கட்டபுளியாண்ட வாங்கியாந்த "பால்"சை எடுத்துகிட்டு எங்க கொய்யா மரத்தாண்ட நின்னேன்..
தேடிகிட்டே இருந்தேன்..
வெறும் தவுட்டு குருவியா தென்பட்டிச்சிவோ !
தோ! மாட்டிகிச்சி.
உச்சி கெளையாண்ட ரெண்டு அணிலு. மசமசன்னு ஓடிக்கிட்டு.
குறி மாட்டாது.
நின்னுக்கிட்டே இருந்தேன்.
தலைக்கீழ தொங்கி ரெண்டு கையாலையும் கொய்யாவ புடிச்சி கடிச்சது.
பருக்குன்னு உட்டேன் உண்டிகோல .
பொத்துன்னு உழுந்துச்சி.
ஓடி போயி தூக்கியந்தேன்.
இன்னொன்னு கொஞ்ச நேரங்கழிச்சி சிக்கிச்சி.
அண்ண சொன்னுச்சி அம்மாவாண்ட , "வால வையிம்மா! ப்ரெச்சு செய்யிலாம் "
அம்மா அனில ஆஞ்சிக்கிட்டு சரின்னு தலையாட்டிச்சி!
 

No comments:

Post a Comment