Saturday, 31 August 2013

திண்ண வூட்டு கதவு


திண்ணவூட்டு கதவு
சி.மோ.சுந்தரம் 
"ஏய் ஒரு பாட்டம் சொன்ன வெளங்காது ஒனக்கு ... நல்ல மாட்டுக்கு ஒரு சூடுடி "
கணவனின் சுடு சொல் சுர்ரென்றது சங்கரிக்கு. தலை நிமிராமல் அவன் முன் இருந்த வட்டையில் இட்டிலியை வைத்தாள். ஒரு சொட்டு கண்ணீர் உருண்டு முந்தியில் விழுந்ததை பார்த்தான் மணி. அவனுக்கு மனசு சுரீரென்றது. இதுவரை ஒரு சொல் கேளாமல் வளர்ந்தவள். கல்யாணம் முடிந்து அடி திருப்பவில்லை முனை திருப்பவில்லை. அதற்குள் அவளுடன் இப்படி ஒரு பினக்கு வேண்டுமா?  
மணிக்கு மனது வாடியது. மனமில்லாமல் இட்டிலியை பிட்டு வாயில் போட்டுக்கொண்டான்.
"இவள் என்ன பெருசா கேட்டுட்டா, அந்த விரிசல் விழுந்த பழைய கதவ மாத்துன்னு கேக்குறா அவ்ளோதானே ?" அவனுக்கு நினைக்கையில் சுலபமா தெரிந்த  விஷயம், தன் தந்தையின் முன் நின்று கேட்கும் போது தடுமாற்றம் தந்தது.
நேற்று மணியக்காரர் தென்னை ற்கு சீவிக் கொண்டிருக்கையில் மெல்ல பேச்சை துவங்கினான்.  
"அப்பா! இந்த வாச கதவ மாத்திடலாம்னு ..."
மணியக்காரர் குரல் பிசிரடைந்திருந்தாலும் தெளிவாய் வந்து விழுந்தது, "ஏன் தம்பி ! நல்லா தான இருக்கு?"
மணியால் தன்  புது மனைவி அதை மாற்ற சொல்லுகிறாள் என்று தன் தந்தையிடம் சொல்லலாம்...னால் "இம்புட்டு நாளு  அப்பங்காலடியிலேயே கெடந்துச்சி ... புதுசா பொடவைய பாத்ததும், என்னா  பேச்சி பேசுது ?"  ஊர் சுலபமாக பேசிடும்.  
எதுவும் சொல்ல விளங்காமல் பாதி இட்டிலி தொண்டையிலேயே இருக்க கை கழுவினான்.
கடிகாரம் 8:32 என்றது.
"இன்னைக்கி சீனியர் இஞ்சினியர் வேற வந்துடுவாரு... நேரமாச்சி " என்று தன் ஆற்றாமையை மறைத்து கிளம்ப முற்பட்டான்.
சங்கரி சலனமில்லாமல் அடுப்படியில் தன்  வேலையிலிருந்தாள் . அவ்வப்போது மூக்குரிதலில் அவளின் அழுகை தெரிந்ததுமணிக்கு மனசு அரித்தது ... கல்யாணமான இந்த ரெண்டு மாசத்தில் அவள் தன்னை வாசல் வரை வந்து அனுப்பாத நாளில்லை.
சட்டென்று திரும்பி விடுவிடுவென வெளியேறினான்.ஏனோ அப்பாவின் மீது கொஞ்சம் கோவம் வந்தது.
"இந்த பழங்கதவுல என்ன பொக்கிசமா கெடக்கு ?" மனசுக்குள் கருவியபடி சைக்கிளை மிதித்தான்
மணியக்காரர் வாசலில் அமர்ந்து மட்டை முடைந்தபடி இருந்தார்.     மகனின் கால் செவுட்டுகளில் புரிந்தது அவனின் கோவம். போகும் போது சொல்லிக்கொள்ளவில்லை.
அவர் ஒரு பெருமூச்செறிந்தார்.
"மாமா" மருமகப்பெண்ணின் குரல் விளித்தது.
"ஏன் ஆச்சி ?" திரும்பாமலேயே குரல் கொடுத்தார்.
"சாப்புட வரீங்களா?"
"திண்ணையில வச்சிடம்மா " மருமகளுக்கு தன்  மேல் கோவமிருக்கும் என்று தெரியும் அவருக்கு. ஆனால் சங்கரியை ரொம்ப பிடிக்கும் மணியக்காரருக்கு. அவள் பித்தி தான் ஆனாலும் குடும்பத்துக்கேத்த பெண்
இந்த ஒத்தயறையும் ஒரு சமையக்கட்டும் தான் வீடு. பின்னாடி பெரிய  கொள்ளை.
சங்கரி வாழ்க்கைப்பட்டு வரும் போதே தனியா ஒரு அறை கட்டிடனும்னு இருந்தார்.
கையிருப்பு போதவில்லை. மணியை கடன் வாங்க சொல்லும் எண்ணமில்லை அவர்க்கு.  இப்போ தான் மின்சார வாரியத்தில் லைன் மென் உத்தியோகம் கிடைத்திருக்கிறது. பெண் வீட்டாரே வலிய தேடி  வந்த கல்யாணம்.
அவர் மனைவி  வெள்ளமுத்து, மணிக்கு 22 வயதிருக்கும் போதே போய்விட்டாள்அவனுகக்கென்று பெரிதாக ஒன்று இவர் சேர்த்து வைத்துவிடவில்லை. இந்த வீடும் கழுமலை வாய்க்கால் ஓரமாக 152 சென்ட்டு நிலமும் தான் இருப்பு . அதுல சாகுபடி செய்வதற்கு  சும்மா இருக்கலாம். பல நேரம் கடனில் இழுத்து விட்டுவிடும்.  

மகனும் மருமகளும் சேர்ந்துவாழ ஏதுவாக திண்ணைக்கு வந்துவிட்டார். முடைந்த  ஓலைகளை கொண்டு திண்ணையை அடைத்தாகி விட்டது

அப்பார் திண்ணைக்கு வந்ததை மணியால் ஜீரணித்து கொள்ள இயலவில்லை. அப்பார் மீது உள்ள பாசம் பாதி என்றாலும் ஊருக்கு தான் அதிகம் பயந்தான். ஊர் சட்டென தன் தீர்ப்பை சொல்லிவிடும், "இந்த பொண்ணுங்க என்னத்த தான் ஓதுவாளுங்களோ தெரியலையே... அப்பன அதுக்குள்ளே திண்ணைக்கி  கொண்டுவந்துட்டான்"   
மாலையும் சங்கரியிடம் எந்த மாற்றமும் இல்லைஇரவு அப்பாரு காலுக்கு நீலகிரி தைலம் தேய்த்து விடும் போது மெல்ல பேச்செடுத்தான், "ஏங்கப்பா ! நீங்க இப்புடி திண்ணையில கெடக்கணும் ? பின்னாடி கொஞ்சம் கல்லு  மண்ணு கொழச்சி பூசிட்டா, மேல, மொடஞ்ச மட்டைய போட்டு கூ  கட்டிடலாம். ஒரு ரூமா போய்டுமில்ல?" என்ற மணியை பார்க்காமலேயே, "செய்லாம்ய்யா.. இது இப்போதைக்கி தானே" என்றார் மணியக்காரர்.
மணியக்காரர் மனதில் கணக்கு ஓடி எப்போதோ முடியாதென முடிவெடுத்த விஷயமது.
கல் வாங்கவும் முடியாது, கல் அறுத்துவிடலாம் என்றால், செலவு கிட்டத்தட்ட அதே தான்.
அப்பாரிடம் கதவை மாற்றுவது பத்தி பேசலாம் என்று யோசித்தவன். மெல்ல தயக்கத்துடன் துவங்கினான், "ஏங்கப்பா! இந்த கதவு தான் பழசா பூடுச்சே... ஒரே வெடுப்பும் விரிசலுமா கெடக்கு..."
மணியக்காரர் மகனை பார்த்தார். 
"ஏற்கனவே கை இருப்பு எல்லாம் கல்யாண செலவுல கரஞ்சிபூடுச்சி. பின்னாடி பாப்போம்" தெளிவாக வந்தது அவர் வார்த்தை. 

புதுமண தம்பதி, காற்றில் வைத்த கற்பூரம் மாதிரி பினுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. பொழுது சாயும் போதே பினக்கும் சாய்ந்துவிட்டது. மணியக்காரர் பெருமாள் கோயிலுக்கு போயிருப்பார். மேலானல்லூராரும் வந்துவிடுவார் கோயிலுக்கு. அவர்கள் சாமி கும்பிட ஒரு போதும் போனதில்லை. வெளியே இருக்கும் ஆலம்மரத்தடியில் மேடை மீது அமர்ந்துகொண்டு பழங்கதை பேசுவார்கள்.
மேலானல்லூரார் வருவது வீட்டில் வாங்கும் தேவை இல்லாத ஏச்சை தவிர்க்க. மணியக்காரர் போவது பிள்ளை மருமகளுக்கு இடைஞ்சலை தவிர்க்க. என்னதான் கதவு சாத்தி   இருந்தாலும், சின்னஞ்சிறுசுகள்! அச்சமில்லாமல் இருக்காது.  எப்படியும் நடு சாமம் கடந்து தான் வீட்டிற்கு திரும்புவார். வீட்டை நெருங்கும் போதே கனைத்தபடியோ இருமியபடியோ வருவார்.  

பினக்கு இரவுகளில் முடியுமென்றால், இங்கே இரவுகளில் தான் துவங்கியது. பிரச்சனை, அடைப்பாக இருக்க வேண்டிய கதவு தான். கிட்ட தட்ட அரை நூற்றாண்டையும் தாண்டிவிட்ட கதவு உடலெங்கும் வெடுப்பாய்  நின்றது. வாசலுக்கு எதிரே எரியும் தெரு விளக்கின் ஒளி, கீற்றுகளாய் உள்ளே நுழைந்து தீண்டகூடாத இடங்களை தீண்ட துள்ளி எழுந்தாள் சங்கரி. பெண்மையின் கூச்சம் ஆண்மையின் அவசரத்திற்கு புரியவில்லை. மணிக்கு எரிச்சல் தான் மிஞ்சியது. மனைவியின் விலகலுக்கு காரணம் அறிந்தவன், "அந்த ஸ்க்ரீனை இழுத்து விடேன்" என்றான்.  மணிதான் ஒரு பழைய போர்வையை கயிற்றில் கட்டி திரைசீலையாக்கி இருந்தான்.
சங்கரியின் மருங்கல் அவனின் வேகத்திற்கு புரியவில்லை. வேர்த்திருந்த தன் மார்பில் முகம் புதைத்திருந்த  மனைவியின் கண் ஈரம் மார்பில் படர்வதை உணர்ந்தவன், "ஏன்டி என்னாச்சு ?" என்று அவள் முகத்தை திருப்ப முயல அவள் வலுக்கட்டாயமாக முகத்தை இன்னும் ஆழமாக புதைத்துக்கொண்டாள். தேவைகள் முடிந்த ஆண்மை, பெண்மையின் வலியை புரிந்துக்கொள்ள எத்தனித்தது, "ஏன் கண்ணு ... ஏன் அழுவுற? வூட்டு ஞாபகம் வந்துடுச்சா?"  அவள் அவன் மார்பில் முகம் பதைத்தபடி இல்லை என தலையாட்டினாள்.
"அப்பறம்?" ஆண் மனம் ஆயிரம் கேள்விகளுடன் கண் விழித்தது. ஆரம்ப நிலை காதலில்தான் ஆண் எத்தனை குழம்பி போகிறான். பெண்ணின் அழுகைக்கு மௌனத்திற்கும் பொருள் இறுதிவரை புரியாவிட்டாலும், அந்த அழுகைகளை பழக்கபடும் வரை ஆண் பீதியும் குழப்பமுமாய் எதிர் கொள்கிறான்

அவளாகவே வாய் திறந்தாள், "வீட்டுல மூணு பொம்பளைங்க நாங்கஎங்க வீட்டு பம்படியில, அப்பா நாலாபக்கமும் சுவரெழுப்பி வச்சிருந்தாங்க ..மேல ஆஸ்பெஸ்டாஸ் போட்டு. கதவ சாத்திகிட்டா போதும். ஆனா அங்க கூட நான் மக்குட்டி மாராப்பு கட்டிக்கிட்டு தான் குளிப்பேன்".  மணிக்கு பேச்சின் போக்கு புரிந்தது. தெரு விளக்கின் வெளிச்ச கீற்றை ஒருமுறை பார்த்தான், "அதான் ஸ்க்ரீன் போட்டுருக்குள்ள ?" என்றவனின் முகத்தை பழகி போன இருட்டில் முறைத்தாள் சங்கரி . “அவங்க கண்ணுல மாட்டிட கூடாதுன்னு அந்த ஸ்கரீன காலைல கழட்டி வச்சிக்கிட்டு ராத்திரி மாட்டிகிறது கேவலமா இருக்கு
மணி வாயடைத்து போனான். 
“இதுக்கு முன்னாடி இங்க ஸ்க்ரீனா  தொங்குச்சி ?... என்ன நினைப்பாங்க? பெரியவங்களுக்கு புரியாது எதுக்குன்னு ? தம்பட்டம் அடிக்கினுமா ?.. அந்த பாழா போன கதவ  மாத்திதான் தொலைச்சா என்னா? " அவள் கேள்விகளில் அவள் பக்க நியாயங்கள் தெளிவாக வைக்க பட்டதுமணிக்கு அப்பாவின் வீண் பிடிவாதத்தில் கோவம் வந்ததுஞாயம் தானே அப்படி என்ன கொட்டி கிடக்கிறது  இந்த பழைய கதவில்?
ஒரு முடிவுடன் தூங்கிப்போனான்.
அறுவது வயது பழக்கம் மணியக்காரருக்கு காலை ஐந்துக்கெல்லாம் எழுந்து விடுவார். கூச்சம் பார்க்காமல் வீட்டிற்கு முன் வீதியை பெருக்கி அள்ளுவார். இப்போதெல்லாம் மருமக பெண்ணே செய்கிறாள், அதனால் வாயில் வேப்பங்குச்சியுடன் கழுமலை வாய்க்கால் போய்விட்டு வருவார்.  
வாய்க்காலில் தலை மூழ்கியவர் வீட்டு திண்ணையில் வந்து அமரும் போது பார்த்து விட்டார் அந்த சீலையை. பழைய போர்வை. அதன் இரு முனையிலும் கயிர் கட்டி இருந்தது, சீலையாய் கட்டுவதற்கு ஏதுவாக.
பெரியவரின் கண்கள் கதவை மேய்ந்தது. எத்தனை வருடும் ஆகிவிட்டது இந்த கதவுக்கு... இவரை விட ஒரு எட்டு வயது குறைவு அந்த கதவுக்கு.    
மணி காலையில் கிளம்பும் போது சொன்னார், "தம்பி! ஆசாரிய பாத்தா வரசொல்லு... வீட்டு பொழக்கடைல பூவரசன் மரம் அறுத்து கெடக்கு ... எழச்சா நல்ல கதவு பண்ணிபுடலாம்."
மணிக்கு ஒரு பெரிய பிரச்சனையை தீர்ந்தது.
மதியமே ஆசாரி வந்து விட்டார்... ரண்டு நாளில் அறைக்காலுடன்  கதவு இழைத்து ஏதுவானது."மணியக்காரரே ! நாள மறுநா வளர்பெற ... அன்னிக்கே வாசக்கா நட்டுடுவோம்" ஆசாரி சொன்னதை பழைய கதவை பார்த்த படி கேட்டுக்கொண்டிருந்தார். 
கதவு பெயர்க்க படும் போது மணியக்காரர் அங்கு இல்லை. போய்விட்டார். 
மகனுக்கு எதோ உறுத்தியது, "ஏம்பா! எங்க கெளம்பிட்டீங்க ?'
"நீ இருந்து பார்த்துக்க. கதவ ஒடச்சி புடாதீங்க! பத்திரமா வையி"  

வாசக்கால் நடும்போது, வந்துவிட்டார்.
மருமகளை விட்டு மஞ்சள் பூசி பொட்டு வச்சி, சீதாள மாரியம்மனை வேண்டிக்கொண்டு  நட சொன்னார்.
கதவு நட்டாகியது.  
"அந்த கதவ அப்புடியே திண்ணையிலேயே வச்சிட சொல்லு"
கதவு அவர் தலைமாட்டருகே வைக்கப்பட்டது.  
"கால அசச்சிபுடாம", ஆசாரி ரெண்டு மூன்று முறை நட்டகாலை மேலும் கீழும் பார்த்தார்இரண்டு பழங்கட்டைகளை எடுத்து முட்டு வைத்திருந்தது வாசல்க்கால் அசையாமல் இருக்க
"ரெண்டு நாளைக்கி பொழக்கட வழியாவே பொழங்கிக்கிங்கம்மா ... கால அசச்சிபுடாம"  என்று விட்டு போய்விட்டார்
மாலை சங்கரி நடுக்காலுக்கு கற்பூரம் காண்பித்தாள். அவள் முகத்தில் எதோ ஒரு திருப்தியை காண முடிந்தது மணியக்காரரால். அவருக்கு சந்தோசம். ன் மேலேயே கொஞ்சம் வருத்தமிருந்தது அவருக்கு.

 "பாவம் ! அந்த புள்ள வாய் விட்டு சொல்ற விசயமா இது? ரெண்டு மூணு வாட்டி கதவ மாத்தணும்னு சொன்னப்பவே எனக்கு புரிஞ்சிருக்கனும் "
இரவு மேலானல்லூராரிடம் புலம்பினார்.
"சரி விடுங்கானும்! இத போய்  பெருசா பேசிக்கிட்டு. கூட்டு குடுத்தனத்துல நாம புள்ள பெத்துகல?"
மணியக்காரருக்கு என்னவோ போல் வந்தது. மேலானல்லூரார் அவரின் மாற்றத்தை கண்டுக்கொண்டார், "என்னங்கானும்? என்ன ஒரு மாதிரி மூஞ்சி வெளுருது?"
மணியக்காரர் சமாளித்து கொண்டார், "ஒண்ணுமில்லை ஙானும்! மதியம் ஆச்சி வாசக்காலு நடறதுக்கு கொஞ்சம் தடபுடல சமைச்சிடுச்சி! வாயு ! ஏப்பம் வராம எத்துது!"        
மேலானல்லூராருக்கு கொஞ்சம் பயம் வந்தது, " நா வேணா வூடு வர வரவா ஙானும்?"
மணியக்காரர் மறுத்துவிட்டார், "விடுய்யா ! வூடுவரைக்கும் நடந்த சரியா பூடும்"
நெஞ்சில் மெல்ல எதோ உருள வீடு வந்து சேர்ந்து விட்டார். திண்ணைக்கு வந்து விட்டார்.
குண்டு பல்பை போடவில்லை. அவருக்கு மட்டுமே வெளிச்சம் தேவை. தலை மாட்டிலிருந்த விளக்கை ஏற்றினார்.     

புதுக்கதவு சாத்தி நிறுத்தி இருந்தது எதிர் திண்ணையில். இன்னும் இரண்டொரு நாளில் பழைய கதவின் இடத்தை பிடித்து கொள்ளும்மணியக்காரருக்கு அயர்ச்சியாக இருந்தது. சுற்றி எல்லாம் புதிதாக இருந்தது. அம்மா அப்பா மனைவி என்று பழக்கப்பட்ட விஷயங்கள்  கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் நேரம் முடிய அவர் வாழ்விலிருந்து காணமல் போய்விட்டது. நேசம் என்பது பழக்கம் தான் என்று தெள்ள தெளிவாக புரிந்தது மணியக்காரருக்கு. அம்மா உபயோகித்த ஆட்டுக்கல் இன்று திண்ணையோரம் கிடந்தது. ஓரமெல்லாம் மழுங்கி போய் இருந்தது

மெல்ல நகர்ந்து தலைமாட்டில் சாத்தியிருந்த பழங்கதவை பார்த்தார். சிறுவயது தோழனின் அருகில் அமர்ந்து கொண்டது போல இருந்தது.  இருந்த பனந்தட்டிய  மாத்தி கதவு செஞ்சி அப்பா மாட்டியது முதல், வீட்டின் மதிப்பு கூடி போனது. கதவோடு சேர்ந்து திண்ணையும் எழுப்ப பட்டது. ஊர் பஞ்சாயத்து கச்சேரின்னு எல்லாமே இந்த திண்ணையில்தான். இந்த கதவுதான் வீட்டின் முதல் அடையாளம்.    

யாராவது வீட்டை தேடி விசாரித்து கொண்டு வந்தால் ஊர்க்காரர்கள் கூறும் அடையாளம், "வாசலுல திண்ண கட்டி மரக்கதவு அடிச்சிருக்கும் பூண் வச்சி. அந்த வூடு தாங்க"

சிம்னி விளக்கை தூக்கி பார்த்தார்.
அவர் பார்வை அந்த கதவு முழுவது ஓடியது.ஓடும்பில் ஓடும் அத்தனை நரம்பும் தெரியும் கிழவன் போல் தான் இருந்தது அந்த கதவு வரிவரியாக
அதன் மேல் அந்த எழுத்துகள் அவர்க்கு பரவசமூட்டியது. அப்பாவின் கத்தியால் தான் செதுக்கிய அந்த எழுத்துகள் "ரஞ்சிதம் இல்லம்".
அப்பாவுக்கு படிப்பு வாசமே கிடையாது. மணியக்காரர் தான் பள்ளிக்கூடம் போனவர். தலையை சுற்றி காதை தொட்டபோது சகோதரனுக்கு கிடைக்காத பாக்கியம் அவருக்கு கிடைத்தது. பள்ளிக்கூடம்படிப்புவாசனையே வீட்டிற்குள் இவர் மூலம் தான் வந்தது

டவுனுக்கு அப்பாகூட தர்மகர்த்தா வீட்டிற்கு போனபோது வீட்டின் முகப்பில் சிமெண்ட்டால் செதுக்கியிருந்தது "சுப்பிரமணியம் பிள்ளை இல்லம்". திரும்பி வரும்போது அப்பாவிடம் கேட்டார், "ஏங்கப்பா ! நம்ம வீட்டு பேர் என்னங்கப்பா?"
அப்பாவிற்கு உடனடியாக பதில் சொல்ல தெரியவில்லை.
 "பாட்டி பேரை வச்சிக்குவோம்" என்றார்.
மகன்  கத்தியால் செதுக்குவதை அப்பா விழி விரிய பார்த்து கொண்டிருந்தார்.      இரண்டு வரியாக தெரிந்த எழுத்துகளை பார்த்து கொண்டிருந்தவர் கேட்டார், "இதுல பாட்டி பேர் எதுய்யா ?" முதல் வரியை சுட்டிக்காட்ட அப்பா அதை தடவி கண்ணில் ஒற்றிக்கொண்டார்.        

"இன்னிக்கி தான்ய்யா அவங்க பேர எழுதி பாத்துருக்கிறேன். இது வரைக்கும் கேட்டதோட சரி"  என்று அப்பா சொன்னதும் அன்று சிவாமிருதம் என்று அறியப்பட்ட மணியக்காரர் பூரித்து போனார்.
இன்று அந்த எழுத்துகள் வெளியே கிடக்கும் ஆட்டுக்கல்லை விட மழுங்கி போயிருந்தது. "ரஞ்சிதம் இல்லம்" என்ற பெயர் வெறும் கதவில் மட்டும் தான் எழுதி இருந்தது,  ஊர்காரர்கள் பொறுத்த வரை அது "திண்ணவூடு" கிராமத்தில் மனிதர் வரை பெயர்கள் அவர்கள் சூட்டிக்கொள்வது ஒன்றுமாக நிலைப்பது ஒன்றுமாகதான் இருந்தது.  கதவில் தெரிந்த அந்த எழுத்துகள் தான் தன் அப்பாவிடம் மணியக்காரருக்கு அருகாமையை சம்பாதித்து தந்தது. எடுப்பு கொடுப்பு என்று எதுவானாலும் மணியக்காரரை கேட்காமல் அவர் செய்ததில்லை.
"எதுவானாலும் எழுதி வச்சிகனும்ய்யா" என்பார்.
அப்பாவுக்கு எழுத போய் ஊருக்கே பத்திரமெழுதும் தொழிலாக ஆனது.
அவர் அந்த ஊருக்கு நாட்டமையும் கிடையாது மணியக்காரரும் கிடையாது. எழுத படிக்க இருந்த ஒரே மனுஷன் சிவாமிருதம் அதனால் ஊர் மணியக்காரர் என்றது மரியாதையுடன்.  இன்று யாராவது "சிவாமிருதம்" என்றால் அவர் திரும்பி பார்க்க சற்று நேரம் ஆகும்.
அதுவுமில்லாமல் "சிவாமிருதம் " என்ற பெயரை ஊர் மறந்துவிட்டது. அதன் காரணமாக அவரும் மறந்துவிட்டார்.
ஆனால் கதவின் குறுக்கு கட்டையில் ஆணியால் எழுதிய "சிவமணி" "சிவாமிருதம்" மட்டும் கூவிக்கொண்டே இருந்தது.
மெல்ல எழுந்து அந்த எழுத்துகளை தடவினார். கதவின் நடு குறுக்கு கட்டையில் மழுங்கி கிட்டத்தட்ட அடையாளமே தெரியாமல் இருந்தது எழுத்துகள்.

"சிவமணி" கண்ணில் நீர் கட்டிக்கொண்டு மறைத்தது.
பதினைந்து வயது சிவமணி, மணியக்காரருக்கு மூத்தவன்கழனி கிணற்றில் கிடப்பாரை நீச்சல் எப்போதுமே சலிக்காத விஷயம். தலைகுப்புற போய் நீரில் சில்லென மோதும் சுகம் அலாதி . உள்ளே போன அண்ணனை காணாமல் பதிமூன்று வயது சிவாமிருதம் கத்திகொண்டிருந்தார். தொலைவில் கழனியில் இருந்தவர்கள் ஓடிவந்து குதித்து தூக்கும் போது காதுமூக்கெல்லாம் சேர் ஏறி முடிந்து போய்  இருந்தது.   தலை நேராக போய்  குத்திக்கொண்டதாம்.   
அப்போது தான் மணியக்காரர் முதல் முதலில் சாவு என்பது எவ்வளவு பாதிக்கும் என்று உணர்ந்திருந்தார். அவருக்கு குரல் கூட வரவில்லை. வெறும் முகம் மட்டும் கோணியது. வாயிலிருந்து காற்று தான் வந்ததுயாரும் தேற்றி அவரை சமாதான படுத்த முடியவில்லை.  சற்று முன் வரை விளையாடி கொண்டிருந்தவன் இனி எழவே போவதில்லை என்பதை நம்ப கடினமாக இருந்தது மணியக்காரருக்கு.  சிவமணி அண்ணன் தான் எல்லாவற்றிற்கும் குரு. தென்னை ஈர்க்கில் சுருக்கு செய்து ஓணான் பிடிப்பது மரமேறுவது நீச்சல் என எல்லாம் சிவமணி கற்று தந்தது தான். சிவமணியின் கையை பிடித்துக்கொண்டே தான் சுற்றுவார். சிம்னி விளக்கு நிழலில் சிவமணி சொன்ன பேய்கதைகள் தான் மிகபயங்கரமான பேய்கதைகள்.     


ஒரு போட்டோ கூட பிடித்து வைக்கும் குடும்பத்தில் பிறக்கவில்லை.  அமாவாசைக்கு அமாவாசை நடு வீட்டில் வட்டமாய் பூசிய மஞ்சளில் மூன்று கும்குமக்கோடும்  மேலேயும் கீழேயுமாய் இரண்டு கும்குங்கும பொட்டுமாகி  போனான் சகோதரன். தனியாக நின்றார் மணியக்காரர். தனிமை தான் சகோதரனை  நினைவூட்டும். பல பொருட்கள் இருக்கும் போது அவ்வளவு உணர்வதில்லை நாம். அது இல்லாத வெறுமை தான் அதை அதிகம் உணர்த்திவிடும்.


சகோதரன் அற்ற தனிமை தாயையும் தந்தையையும் இழந்த பின் இன்னும் அதிகம் உறைத்தது. தந்தைக்கு கடை பிள்ளை கொல்லி. அன்று அவ்வளவு வலிக்கவில்லை. தாய்க்கு தலை பிள்ளைதான் கொல்லி. 
அம்மாவை விரட்டிகளால் புதைத்து விட்டு கால்மாட்டில் தீவைக்க  வெட்டியான் மணியக்காரர் தோளில் மண் பாண்டத்தில் நீர் பிடித்து ஏற்றிவிட்டு கூட்டத்தை நோக்கி இரைந்தான்.
"சகோதரர் முறையாளுங்க யாரவது பந்தம் பிடிச்சிகிட்டு முன்ன போங்கப்பா" 
வெடித்து பொங்கியது அழுகை மணியக்காரருக்கு. கொல்லி வைக்க வேண்டிய தலை பிள்ளைக்கு ஏற்கனவே கொல்லி வைத்தாகி விட்டது. என்றோ இறந்தவனுக்கும் சேர்த்து அன்று அழுதார். ஆணென்று வெட்காமல் வெளிப்படையாக அழுத அழுகை. 

கொள்ளைபுறம் வெறும் தட்டி தான் அடித்திருந்தது. மேசை நாற்காலின்னு எதுவும் இருந்ததில்லைஅவருக்கென ஆழ பதிய இருந்த கல்வெட்டு இந்த கதவு மட்டும் தான்மணிக்காரருக்கு வரைய தெரியாது. எழுத மட்டும் தான் தெரியும். அதனால் சிவமணியை எழுதினர் கதவில் கூடவே தன் பெயரையும் சேர்த்து கொண்டார். என்னவோ சிவமணி அண்ணன் கூடவே இருப்பது போலிருந்தது சிவாமிருததிற்கு. இறந்து போன சகோதரன் இன்று வரை கண்ணீர் வரவழைத்தான். 

அம்மாவுக்கு நோஞ்சான் உடம்பு. அதனால் தான் ரெண்டு பிள்ளையோட நின்னு போச்சி. வெள்ளமுத்து வந்த பிறகுதான் வீடு கொஞ்சம் சுதாரித்தது. மாமனார் மாமியாரை தலையில் வைத்து தாங்கினாள். அவர்கள் மேல் உள்ள பாசமா என்று தெரியாது  ஆனால் கணவன் முகம் வாட அவள் பொறுக்க மாட்டாள். 

அவள் என்ன செய்கிறாள் என்று அந்த கதவு சொல்லி விடும். அரையாக சாத்தியிருந்தால் கொஞ்சம் கண்ணயர்ந்திருக்கிறாள். முழுதுமாக சாத்தி இருந்தால் துணி மாற்றி கொண்டிருக்கிறாள். மணியக்காரர் வெளியே போய்விட்டு பொழுது சாய்ந்து வந்தால் அவர் வரும் வரை அந்த கதவில் சாய்ந்தபடியே அமர்ந்திருப்பாள்.  அவள் மேல் அத்தனை காதலிருந்தது மணியக்காரருக்கு. ஆனால் பிள்ளை மட்டும் ஒன்று தான். இரண்டாம் கரு பாதியில் கலைந்தது. அதற்கு பின் அவள் கரு தரிக்கவில்லை. ஆனால் கடைசியில் புற்றுநோயை தரித்துகொண்டாள் அந்த கருப்பையில். போய் விடுவாளென்று  எண்ணம் கூட தோன்றாத போது  போய் விட்டாள். இப்போதுகூட வெள்ளமுத்து கதவில் சாய்ந்திருப்பது போல தோன்றியது.    

கதவில் வட்டமாய் மஞ்சள் பெயிண்ட் பூசி அதில் செவப்பு பெயின்ட்டில் மூன்றாக கோடிழுந்திருந்தது. அந்த கோடுகளை தடவினார். அந்த கோடுகள் வெறும் கோடுகளாய் தோன்றியதில்லை அவர்க்கு..வெள்ளமுத்துவின் விரல்கள். அதை மெல்ல அவர் தடவும் போதே கண்ணீர் கோர்த்துகொண்டது விழியில். மஞ்சள் தான் பூசுவேன் இந்த பெயின்ட்டெல்லாம் ஆகாதென்று அவள் எவ்வளவு வாதாடினாள். இன்று அவளுக்கு புரியுமோ பாரம்பரியத்தில் உள்ள பெருமைக்கு நிகரான புதுமையின் சௌகரியங்கள். எட்டு வருடம் கழித்தும் அவள் நேற்று பூசியது போல மின்னியது அந்த சிகப்பு விரல்கள்.  கன்னத்தை அதில் ஒட்டிக்கொண்டார். வாஞ்சையுடன் அதை முத்தமிட்டார்  
மணியக்காரருக்கு வயிற்றை பிரட்டியது. வாந்தி வருவது போல இருந்தது 
அருகிலிருந்த சொம்பிலிருந்து தண்ணீர் குடித்தார்.
காலோடு போய்விடும் போல வந்தது. வெளியே வந்து தொட்டியிலிருந்து சோடுதலையில் தண்ணீர் எடுத்துகொண்டு கொள்ளை பக்கம் போனார்
விடிவதற்குள் மூன்று முறை கொள்ளைக்கு போய் வந்தார்.
உடல் நடுங்க துவங்கி இருந்தது. மணியை எழுப்பலாம் என்று எண்ணினார் பின் எண்ணத்தை  தவிர்த்தார். பயந்துவிடுவான். கதவில் மின்னிய சிவப்பு விரல்களை தடவினார். இந்த விரல்கள் தானே இத்தனை நாள் காலம் தள்ள உதவியது    

மீண்டும் வயிற்றை அலாய்ந்தது... இப்போது மணியக்காரருக்கு திராணி இல்லை. கதவை பிடித்துக்கொண்டு எழ முற்பட்டார். கால் தட்டி சொம்பு கவிழ்ந்தது.உள்ளிலிருந்து மணியின் குரல் வந்தது, "என்னங்கப்பா ?"
ஒன்றுமில்லை என்று சொல்ல தோன்றியது, இயலவில்லை.
எதிரே "பரக் பரக்" என வாசல் பெருக்கும் சத்தம் கேட்டது.
எதிர்வீட்டு பெரியநாயகி தான் பெருக்கி கொண்டிருக்கவேண்டும்.
மீண்டும் மணியின் குரல், "என்னங்கப்பா!!!" மணி வெளியே வந்தான்.
மணியக்காரர் தன் முழுபலத்தையும் திரட்டி கொண்டு எழுந்து அமர முயன்று தோற்றார். கால்வழியே ஓடியது. மணி திண்ணை விளக்கை போட்டான் . மணியக்காரர் கண்கள் சொருக கிடந்தார்
மணி அலறினான் "அப்பா" .
"அப்பா ! அப்பா! என்னங்கப்பா" கதறும் மணியின் பின் நின்று அழ துவங்கினாள் சங்கரி.   
எதிர் வீட்டு சண்முகம் ஓடிவந்தார், "என்னா  மணி ?"
"சின்னண்ணே! ஒத்தக்கட மொனையில அம்பாசடர் நிக்கும் கூட்டியாங்களே"   குரல் உதற அரற்றினான் மணி. அவன் வாக்கியம் முடிவதற்குள் சைக்கிளில் போய் விட்டார் சண்முகம்.    
மணியக்காரருக்கு நினைவு தப்பிக்கொண்டிருந்தது. மகனின் கையை பற்றிக்கொண்டார். கடைசியாக தன்  முழு பலத்தையும் சேர்த்துக்கொண்டு பிசிறடித்த மெல்லி குரலில் பேசினார், "தம்பி ! அந்த கதவ பொளந்து என்கூட வச்சி எரிச்சிடு"
தலையில் அடித்து கொண்டு அழுதான் மணி, "ஒன்னும் ஆகாதுங்கப்பா"
வீதி ஆட்கள் கூடிவிட்டிருந்தனர்.   
மணியின் கையை பற்றிகொண்டு சத்தியம் செய்வது போல், "அந்த கதவ பொளந்து என்கூட வச்சி எரிச்சிடு" என்றார் கடைசியாக
போய்விட்ட தகப்பனிடம் "ஏம்ப்பா? ஏம்ப்பா? " என்று ஞாயம் கேட்டுக்கொண்டிருந்தான் மணி. அவர் இருந்திருந்தால் சொல்லி இருக்க கூடும், "அதுல எழுதி இருக்க எதுவும் ஒனக்கு புரியாதுப்பா. அது எனக்கு மட்டுமே புரியும் மொழிஎன்று.          

---- சி.மோ.சு----